இந்தியா

பிரதமர் மோடியுடன் ஜெகன்மோகன் ரெட்டி சந்திப்பு- ஆந்திராவில் முன்கூட்டியே தேர்தல் நடைபெறுமா?

Published On 2023-07-07 15:39 IST   |   Update On 2023-07-07 15:39:00 IST
  • தெலுங்கானா தேர்தலுடன் ஆந்திர சட்டமன்ற தேர்தலையும் நடத்த முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி விரும்புகிறார்.
  • ஆந்திர மாநில பா.ஜ.க. தலைவராக என்.டி.ஆர். மகள் புரந்தேஸ்வரி அறிவிக்கப்பட்டுள்ளார்.

திருப்பதி:

ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி நேற்று முன்தினம் டெல்லி சென்று பிரதமர் மோடி, அமைச்சர்கள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன் ஆகியோரை தனித்தனியாக சந்தித்தார்.

இந்த திடீர் சந்திப்பு ஆந்திர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

அடுத்த 3 மாதங்களுக்குள் தெலுங்கானா சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. ஆந்திர சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தலுடன் நடத்தப்படவுள்ளது.

இந்நிலையில் முன்கூட்டியே தெலுங்கானா தேர்தலுடன் ஆந்திர சட்டமன்ற தேர்தலையும் நடத்த முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி விரும்புகிறார்.

எதிர்க்கட்சிகள் இதுவரை கூட்டணி அமைக்க முடியாமல் திணறி வருகின்றன. இதனால் தற்போது தனக்கு சாதகமான சூழல் நிலவுவதாக கருதி முன்கூட்டியே தேர்தல் நடத்த விரும்புகிறார்.

சந்திரபாபு ஏற்கனவே பா.ஜ.க உடன் கூட்டணி வைத்து 2019-ம் ஆண்டு நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து அரசை கவிழ்க்க திட்டமிட்டார்.

எனவே சந்திரபாபுவை பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா ஆகியோர் நம்ப தயாராக இல்லை.

அதே வேளையில் மத்திய அரசின் சர்ச்சைக்குரிய சில திட்டங்கள் அல்லது மசோதாக்களுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பினாலும் ஒருமுறை கூட எதிர்ப்பு தெரிவிக்காமல் ஜெகன்மோகன் ரெட்டி ஆதரவு தெரிவித்து வருகிறார்.

எனவே முன்கூட்டியே தேர்தல் நடத்தும் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவிக்கலாம் என தெரிகிறது.

ஆந்திர மாநில பா.ஜ.க. தலைவராக என்.டி.ஆர். மகள் புரந்தேஸ்வரி அறிவிக்கப்பட்டுள்ளார். இதனால் தெலுங்கு தேசம் கட்சி முக்கிய பிரமுகர்கள் பா.ஜ.க.வில் இணைய உள்ளதாகவும் பரபரப்பாக பேசப்படுகிறது.

Tags:    

Similar News