திங்கட்கிழமை சட்டமன்றத்தில் பலத்தை நிரூபிக்கிறார் சம்பாய் சோரன்
- அமலாக்கத்துறை கைது நடவடிக்கையை தொடர்ந்து ஹேமந்த் சோரன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
- சம்பாய் சோரன் ஆட்சியமைக்க உரிமைக்கோரி, முதல்வராக பதவி ஏற்றுள்ளார்.
ஜார்கண்ட் மாநில முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் சம்பாய் சோரன் புதிய முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார். ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்து ஆட்சி நடத்தி வருகிறது.
பதவி ஏற்றுக் கொண்ட சம்பாய் சோரன், 10 நாட்களுக்குள் சட்டமன்றத்தில் மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும்.
10 நாட்கள் இருப்பதால் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான கூட்டணியில் உள்ள எம்.எல்.ஏ.-க்களிடம் குதிரை பேரம் நடத்த முடியாத வகையில், அவர்கள் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் திங்கட்கிழமை சட்டமன்றம் கூட்டப்பட்டு அன்றைய தினம் சம்பாய் சோரன் மெஜாரிட்டியை நிரூபிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பாய் சோரன் தனக்கு 43-க்கும் அதிகமான சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு இருப்பதாக தெரிவித்துள்ளார். 81 இடங்களை கொண்ட சட்டமன்றத்தில் 41 உறுப்பினர்கள் ஆதரவு தேவை.
2022-ல் ஹேமந்த் சோரன் நம்பிக்கை வாக்கெடுப்பில் 48 உறுப்பினர்கள் ஆதரவை பெற்றிருந்தார். ஊழல் குற்றச்சாட்டில் தகுதி நீக்கம் செய்யப்படலாம் என்ற மிரட்டல் இருந்த நிலையில், மெஜாரிட்டியை நிரூபித்தார்.
ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணிக்கு 46 எம்.எல்.ஏ.க்கள் (ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா 28, காங்கிரஸ் 16, ராஷ்டிரிய ஜனதா தளம் 1, சிபிஐ (எம்எல்) விடுதலை 1) உள்ளனர்.