இந்தியா

ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ்

காசி தமிழ் சங்கமம் விரைவு ரெயில் சேவை தொடங்கப்படும்- ரெயில்வே மந்திரி அறிவிப்பு

Published On 2022-12-10 18:22 GMT   |   Update On 2022-12-10 18:22 GMT
  • காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி, இரு பகுதி மக்களிடையே உறவுகளை வலுப்படுத்தும்.
  • வாரணாசி ரெயில் நிலையம் உலகத் தரம் வாய்ந்ததாக மறுசீரமைக்கப்படுகிறது.

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள ரெயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மறு சீரமைப்புத் திட்டப் பணிகளை மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு செய்தார். அப்போது பேசிய அவர், உலகத் தரம் வாய்ந்த ரெயில் நிலையமாக இது மறுசீரமைக்கப்படுகிறது என்றும், உலகிலேயே சிறந்த ரெயில் நிலையங்களில் ஒன்றாக இதை மாற்றும் வகையில் சுமார் 7000 கோடி ரூபாய் செலவிடப்படும் என்றும் தெரிவித்தார்.

பயணிகளுக்கு நவீன வசதிகளை வழங்கும் வகையில் தூங்கும் வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரெயில் தயாரிப்பு விரைவில் தொடங்கப்படும் என்றும் அவர் கூறினார். பின்னர் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழகப் பிரதிநிதிகள் குழுவினருடன் மந்திரி வைஷ்ணவ் கலந்துரையாடினார். இந்தப் பயணத்தின்போது தங்களுக்குக் கிடைத்த அனுபவங்களை அந்தக் குழுவினர் அவருடன் பகிர்ந்து கொண்டனர்.

காசி தமிழ் சங்கமம் நிகழ்வை வெற்றிகரமாக நடத்த உதவிய ரெயில்வே அமைச்சகம் மற்றும் ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழக குழுவினரின் முயற்சிகளை மந்திரி பாராட்டினார். நிகழ்ச்சியில் பேசிய அவர், காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியை நினைவு கூரும் வகையில் வாரணாசி மற்றும் தமிழ்நாட்டுக்கு இடையே காசி தமிழ்ச் சங்கமம் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை விரைவில் தொடங்கப்படும் என்றார். இதுபோன்ற பரிமாற்ற நிகழ்ச்சிகள் நமது பாரம்பரியத்தைப் பற்றிய புரிதலை உருவாக்கி, இரு பகுதி மக்களிடையே உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News