இந்தியா
லைப்-மிஷன் ஊழல் வழக்கு: பினராயி விஜயனின் முன்னாள் முதன்மை செயலாளர் சிவசங்கர் கைது
- கேரளாவில் லைப் மிஷன் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட வெளிநாட்டில் இருந்து பண உதவி பெற்றதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது.
- ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கரிடம் அமலாக்க துறையினர் விசாரணை நடத்தினர்.
திருவனந்தபுரம்:
கேரளாவில் முதல்-மந்திரி பினராயி விஜயனின் முதன்மை செயலாளராக இருந்தவர் சிவசங்கர். ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவருக்கு கேரளாவில் நடந்த தங்க கடத்தல் வழக்கில் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. இதற்காக அவர் பணியில் இருந்து சஸ்பெண்டு செய்யப்பட்டார். பின்னர் அவருக்கு மீண்டும் பணி வழங்கப்பட்டது.
இந்த நிலையில் கேரளாவில் லைப் மிஷன் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட வெளிநாட்டில் இருந்து பண உதவி பெற்றதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அமலாக்க துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கரிடமும் அமலாக்க துறையினர் விசாரணை நடத்தினர்.
12 மணி நேரம் நடந்த விசாரணைக்கு பிறகு அமலாக்க துறை அதிகாரிகள், நேற்று நள்ளிரவு சிவசங்கரை அதிரடியாக கைது செய்தனர். இது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.