இந்தியா வந்துள்ள மாலத்தீவு அதிபர் ஜெய்சங்கருடன் சந்திப்பு
- மாலத்தீவு அதிபர் முகமது முய்சு இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார்.
- அதிபர் முகமது முய்சு ஜனாதிபதி, பிரதமரை சந்தித்துப் பேச உள்ளார்.
புதுடெல்லி:
மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் சமீபத்தில் அரசுமுறை பயணமாக மாலத்தீவு சென்றிருந்தார். இந்திய பெருங்கடலில் இந்தியாவின் முக்கிய கடல்சார் கூட்டணி நாடாக மாலத்தீவு விளங்கி வருகிறது.
மாலத்தீவு அதிபர் முகமது முய்சு அரசுமுறை பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார். இன்று முதல் 10-ம் தேதி வரை அவர் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
டெல்லி விமான நிலையத்திற்கு வந்திறங்கிய அதிபர் முகமது முய்சு, அவரது மனைவி சஜிதா முகமது ஆகியோரை மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி கீர்த்திவர்தன் சிங் நேரில் சென்று வரவேற்றார்.
இந்நிலையில், மாலத்தீவு அதிபர் முகமது முய்சு வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரைச் சந்தித்தார். மேலும், அதிபர் முகமது முய்சு ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்துப் பேச உள்ளார்.
மேலும், பிரதமர் மோடியைச் சந்தித்து இந்தியா-மாலத்தீவு இடையிலான இருதரப்பு, பிராந்திய மற்றும் பரஸ்பர நலன்கள் தொடர்பான சர்வதேச விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். மும்பை மற்றும் பெங்களூருவில் நடைபெறும் நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாலத்தீவு அதிபரின் இந்திய வருகை இரு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாலத்தீவு அதிபராக பதவியேற்ற பிறகு இந்தியாவிற்கு அவர் மேற்கொள்ளும் முதல் இருதரப்பு பயணம் இதுவாகும்.