மோடி லட்சத்தீவு பயணம்- சர்ச்சை கருத்து பதிவிட்ட 3 அமைச்சர்கள் சஸ்பெண்ட்
- பிரதமர் நரேந்திர மோடி லட்சத்தீவு பயணம் மேற்கொண்டார்.
- மோடி பயணம் குறித்து மாலத்தீவு அமைச்சர் அப்துல்லா மஹ்சூம் மஜித் சர்ச்சை கருத்து.
இந்தியாவில் சுற்றுலாவை மேம்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக கடந்த 2ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி லட்சத்தீவு பயணம் மேற்கொண்டார். தொடர்ந்து அந்த பயணம் குறித்த அனுபவத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்தார். அதில் "லட்சத்தீவு என்பது வெறும் தீவுகளின் கூட்டமல்ல. காலம் காலமாக நீடித்து வரும் பாரம்பரிய மரபு மற்றும் மக்களுக்கான சான்று அது" என பதிவிட்டிருந்தார்.
மேலும், லட்சத்தீவுகளின் பிரமிக்க வைக்கும் அழகையும், அங்கு வாழும் மக்களின் அரவணைப்பையும் கண்டு நான் இன்னமும் பிரம்மிப்பில் இருக்கிறேன். அகத்தி, பயங்காரம், கரவட்டி ஆகிய இடங்களுக்கு சென்று மக்களோடு உரையாடும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அவர்களின் விருந்தோம்பலுக்கு நன்றி கூறுகிறேன் என தெரிவித்திருந்தார்.
பிரதமரின் இந்த பயணம் குறித்து மாலத்தீவு அமைச்சர் அப்துல்லா மஹ்சூம் மஜித் சர்ச்சைக்குரிய வகையில் எக்ஸ் பக்கத்தில் கருத்து பதிவிட்டார்.
அவர் கூறியதாவது, "இந்தியா மாலத்தீவை குறிவைக்கிறது என்றும், கடற்கரை சுற்றுலாவில் மாலத்தீவுடனான போட்டியில் இந்தியா பல சவால்களை சந்திக்க வேண்டியதிருக்கும்" என கூறினார். மேலும் சில மாலத்தீவு அமைச்சர்களும் மோடியின் பயணம் குறித்து கேலி செய்யும் விதமாக கருத்து பதிவிட்டிருந்தனர்.
பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணம் குறித்த மாலத்தீவு அமைச்சரின் ட்வீட் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், பிரதமர் மோடி மற்றும் இந்தியர்கள் குறித்து விமர்சன பதிவுகளை வெளியிட்ட மரியம் ஷுயினா, மால்ஷா ஷரீப் மற்றும் ஹாசன் சிகான் ஆகிய 3 அமைச்சர்களை பணியிடை நீக்கம் செய்து மாலத்தீவு அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.