என் மலர்tooltip icon

    இந்தியா

    • உயர்நீதிமன்ற நீதிபதி நிர்மல்ஜித் கவுர் வீட்டில் ரூ.15 லட்சம் கொண்ட ஒரு பை வந்தது.
    • அவர்களில் ஒருவர் விசாரணை நடந்து வந்தபோது இறந்துவிட்டார்.

    டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் சர்மா வீட்டில் கோடிக்கணக்கான பணம் கண்டெடுக்கப்பட்ட விவகாரம் தற்போது சர்ச்சையாகி வருகிறது.

    இந்நிலையில் நீதித்துறையை உலுக்கிய வழக்கு ஒன்றில் 17 ஆண்டுகள் கழித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    ஆகஸ்ட் 13, 2008, அப்போதைய பஞ்சாப் - அரியானா உயர்நீதிமன்ற நீதிபதி நிர்மல்ஜித் கவுர் வீட்டில் ரூ.15 லட்சம் கொண்ட ஒரு பை டெலிவரி செய்யப்பட்டது. இந்த பணம் குறித்து அவர் போலீசில் புகார் அளித்தார்.

    இந்த பணம் மற்றொரு நீதிபதி நிர்மல் யாதவ் என்பவருக்கு வழங்கப்பட இருந்ததாகவும், தவறுதலாக நிர்மல்ஜித் கவுர் வீட்டில் கொடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. சொத்து பேரம் தொடர்பான விவகாரத்தில் சாதமாக செயல்பட இந்த பணம் நிர்மல் யாதவுக்கு லஞ்சமாக வழங்கப்பட இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டது.

     

    நிர்மல் யாதவ்

    அந்த சமயத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வந்தது. இந்த வழக்கில் நீதிபதி நிர்மல் யாதவ் உட்பட 5 பேர் குற்றம்சாட்டப்பட்டிருந்தனர். அவர்களில் ஒருவர் விசாரணை நடந்து வந்தபோது இறந்துவிட்டார்.

    இந்நிலையில் 17 வருடங்கள் கழித்து தற்போது முன்னாள் நீதிபதி நிர்மல் யாதவ், மற்றும் வழக்கில் தொடர்புடைய அனைவரயும் குற்றவாளிகள் அல்ல என்று தீர்ப்பளித்து சண்டிகரில் உள்ள சிறப்பு சிபிஐ நீதிமன்றம் அவர்களை வழக்கில் இருந்து விடுத்துள்ளது. கடந்த வியாழக்கிழமை இறுதி வாதங்கள் பதிவு செய்யப்பட்ட நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    • நீலகிரி மாவட்டம் உதகையில் நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில் ஆ.ராசா எம்.பி. பங்கேற்று பேசினார்.
    • திராவிட நாகரிக பண்பாட்டை கடைப்பிடித்து மக்கள் தொகையை கட்டுப்படுத்தி உள்ளோம்.

    100 நாள் வேலை திட்டத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்க வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் 1170 இடங்களில் இன்று திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில், நீலகிரி மாவட்டம் உதகையில் நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில் ஆ.ராசா எம்.பி. பங்கேற்று பேசினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    மகாத்மா காந்தி வேலை வாய்ப்பு திட்டத்திற்கு மத்திய அரசு பணம் தர மறுக்கிறது.

    முதலமைச்சர் என்ன சொல்லி இருக்கிறார் ? மகாத்மா காந்தி என்கிற பெயர் இருப்பதனாலேயே பணம் தர மறுக்கிறார்கள். மகாத்மா காந்தியின் பெயரை குத்தகைக்கு எடுத்து வைத்திருக்கிறார்கள். மகாத்மா காந்தியை சுட்டதே இவர்கள்தான்.

    நாம் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை கொண்டு வந்து அளவான குடும்பம் என்று 1970களில் இருந்து நல்ல திராவிட நாகரிக பண்பாட்டை கடைப்பிடித்து மக்கள் தொகையை கட்டுப்படுத்தி உள்ளோம்.

    மக்கள் தொகை குறைந்து இருந்தாலும், கல்வி அறிவில் முதல் இடத்தில் இருக்கிறோம். வேலை வாயப்பு, உற்பத்தி, ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்டவைகளில் நம்பர் ஒன். சாலை வசதி என அனைத்திலும் முன்னிலையில் இருக்கிறோம். இதுதுான் திராவிட மாடல்.

    ஆனால் வட மாநிலங்களில் 16, 17 பிள்ளைகளை பெற்றுவிட்டு வளர்த்து ஆளாக்க முடியாமல் இங்கு வந்துவிடுகிறார்கள்.

    ஆரம்பத்தில் பானிப்பூரி, சுண்டல் என விற்றுவந்தவர்கள் தற்போது பயிர் நடவு செய்ய வந்துவிட்டார்கள். ஆனால், பிரதமர் மோடி நம்மை பார்த்து இந்தி படியுங்கள், படித்தால் தான் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று சொல்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வக்ஃபு வாரிய திருத்த சட்டத்திற்கு எதிராக அதைத் திரும்பப் பெற வேண்டும்.
    • சிறுபான்மையினருக்கு எந்த பாதிப்பு வந்தாலும் முதலில் குரல் கொடுப்பது திமுக தான்

    சென்னை பெரம்பூரில் உள்ள டான்பாஸ்கோ பள்ளியில் நடைபெறும் ரமலான் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.

    இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

    இஸ்லாமிய மக்களுக்கு ரமலான் பெருவிழா வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இஸ்லாமியர்களையும் திமுகவையும் யாரும் பிரிக்க முடியாது.

    வக்ஃபு வாரிய திருத்த சட்டத்திற்கு எதிராக அதைத் திரும்பப் பெற வேண்டும்.

    வக்பு வாரிய சட்டத் திருத்தத்திற்கு எதிரான தீர்மானம் நிறைவேற்ற கூட சட்டப்பேரவைக்கு எடப்பாடி பழனிசாமி வரவில்லை. தீர்மனாத்திற்கு ஆதரவு கொடுக்க வராமல் டெல்லிக்கு சென்றுவிட்டார்.

    இருமொழிக் கொள்கை குறித்து வலியுறுத்துங்கள் என எடப்பாடி பழனிசாமிக்கு கூறினேன். இருமொழிக் கொள்கை குறித்து பேசியதாக எடப்பாடி பழனிசாமி கூறினார். மக்கள் சார்பில் நன்றி கூறிக் கொள்கிறேன்.

    சிறுபான்மையினருக்கு எந்த பாதிப்பு வந்தாலும் முதலில் குரல் கொடுப்பது திமுக தான்.

    இஃப்தார் விழாக்களை பலரும் நடத்துவார்கள். ஆனால், இஸ்லாமியர்களுக்கு ஒரு தீமை என்றால் வாயே திறக்கமாட்டார்கள்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • மருத்துவர்கள் இரவு 10 மணியளவில் தீயணைப்பு துறையினரை உதவிக்கு அழைத்துள்ளனர்.
    • விரல்களில் சிக்கியிருக்கும் மோதிரங்களை அகற்ற பயன்படுத்தப்படும் கருவியான ரிங் கட்டரைப் பயன்படுத்தி, வாஷரை கவனமாக வெட்டினோம்.

    கேரளாவில் சிக்கலான அறுவை சிகிச்சைக்காக மருத்துவர்கள் தீயணைப்புத் துறையினரின் உதவியை நாடிய சம்பவம் நடந்துள்ளது.

    கடந்த மார்ச் 25 ஆம் தேதி கேரளாவின் காஞ்சங்காடு உள்ள ஒரு மருத்துவமனையின் மருத்துவர்கள், 46 வயதுடைய ஒருவரின் பிறப்புறுப்புகளில் சிக்கிய இரும்பு வாஷரை (iron washer) அகற்ற போராடியுள்ளனர். ஆனால் அவரின் நிலை மோசமடைந்தால் மருத்துவர்கள் இரவு 10 மணியளவில் தீயணைப்பு துறையினரை உதவிக்கு அழைத்துள்ளனர்.

    தீயணைப்பு வீரர்கள் நோயாளிக்கு மயக்க மருந்து கொடுத்த பிறகு, ரிங் கட்டரைப் பயன்படுத்தி வாஷரை பாதிப்பு இல்லாமல் வெற்றிகரமாக அகற்றினர்.

    இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய காஞ்சங்காடு தீயணைப்புத்துறை அதிகாரி பி.வி. பவித்ரன்,

    "இது ஒரு சவாலான, இரண்டு மணி நேர அறுவை சிகிச்சையாக இருந்தது. விரல்களில் சிக்கியிருக்கும் மோதிரங்களை அகற்ற பயன்படுத்தப்படும் கருவியான ரிங் கட்டரைப் பயன்படுத்தி, வாஷரை கவனமாக வெட்டினோம்.

    இது மிகவும் பயமுறுத்தும் காட்சியாக இருந்தது. இரும்புத் வாஷர் அந்தரங்கப் பகுதியைச் சுற்றி இறுக்கமாகப் பொருந்தியிருந்தது, இதனால் அவரால் சிறுநீர் கழிக்க முடியவில்லை" என்றார்.

    கடந்த மூன்று வாரமாக பிறப்புறுப்பில் சிக்கிய இரும்பு வாசருடன் அந்த நபர் சிறுநீர் கழிக்கமுடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். மேலும் அப்பகுதியில் வீக்கம் ஏற்பட்டு அதிக வலி இருந்துள்ளது.

    வாசர் எப்படி பிறப்புறுப்பில் சிக்கியது என்பது குறித்து கேட்டபோது, தான் குடிபோதையில் இருந்தபோது யாரோ ஒருவர் அதை தன் மீது மாட்டியாக தெரிவித்துள்ளார். தற்போது வாசர் நீக்கப்பட்ட பின்னர் அவரது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    • சுஃபியான் தற்போது பெலகாவியின் பிஐஎம்எஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான தேசாய்யை தேடி வருகின்றனர்.

    கர்நாடகாவின் பெலகாவியில் நடைபாதையில் கடை அமைப்பது தொடர்பாக ஏற்பட்ட சண்டையில் வியாபாரியின் மூக்கை சக வியாபாரி நறுக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    பெலகாவி நகரின் காடே பஜாரின் காஞ்சர் கல்லி என்கிற பகுதியில் தனது கடையை அமைக்க 42 வயதான சுஃபியான் பதான் விரும்பினார். அதற்கான முயற்சியில் ஈடுபட்டபோது, மற்றொரு வியாபாரியான அயன் தேசாயுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

    இது வாக்குவாதமாக தொடங்கி பின்னர் இருவருக்கிடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

    சண்டையின்போது, அயன் தேசாய் திடீரென கத்தியை எடுத்து சுஃபியானின் மூக்கை நறுக்கினார். இதில், சுஃபியான் பலத்த காயமடைந்தார். மேலும், இந்த கைகலப்பின்போது சமீர் பதான் என்ற நபரும் காயமடைந்துள்ளார்.

    இந்நிலையில், சுஃபியான் தற்போது பெலகாவியின் பிஐஎம்எஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான தேசாய்யை தேடி வருகின்றனர்.

    • ஐஏஎஸ் அதிகாரியான வி.கே. பாண்டியன், ஒடிசா முதல்வராக இருந்த நவீன் பட்நாயக்கின் நெருங்கிய உதவியாளராக இருந்தார்
    • விடுப்பை நீடிப்பதற்காக அவரது விண்ணப்பத்தை புதிதாக அமைந்த பாஜக அரசு நிராகரித்தது

    கடந்த வருடம் ஒடிசா மாநில சட்டமன்றத் தேர்தலின்போது அங்கு அரசியல் களத்தில் அதிகம் ஒலித்த பெயர் வி.கே. பாண்டியன். தமிழரான இவரை முன்வைத்தே பெரிய பிரச்சாரங்களை பாஜக முன்னெடுத்தது.

    24 வருடங்களாக ஒரிசாவை ஆட்சி செய்து வந்த நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தள அரசு கடந்த தேர்தலில் பாஜகவிடம் தோல்வியடைய முக்கிய காரணங்களில் அதுவும் ஒன்று.

    ஐஏஎஸ் அதிகாரியான வி.கே. பாண்டியன், ஒடிசா முதல்வராக இருந்த நவீன் பட்நாயக்கின் நெருங்கிய உதவியாளராக இருந்தார். பின் 2023 இல் தனது சொந்த விருப்பத்தின் பேரில் ராஜினாமா செய்த வி.கே. பாண்டியன் பிஜு ஜனதா தளத்தில் சேர்ந்தார்.

    "நவீன் பட்நாயக் அவரது அரசியல் வாரிசாக வி.கே. பாண்டியனை அறிவிப்பார், ஒடிசா ஒரு தமிழனின் கையில் சென்றுவிடும்" என்பதே பாஜக தேர்தல் பிரசாரத்தில் மீண்டும் மீண்டும் ஒடிசா மக்களிடம் பதிய வைத்த பிம்பம். ஆனால் நவீன் பட்நாயக் அதை முற்றிலுமாக மறுத்தார்.

    நவீன் பட்நாயக் ஆட்சியை இழந்து பாஜக கோட்டையை பிடித்த பின்னர், தீவிர அரசியலில் இருந்து விலகி இருப்பதாக பாண்டியன் அறிவித்தார்.

    இந்நிலையில் தற்போது வி.கே. பாண்டியனின் மனைவியும், மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான சுஜாதா ஆர். கார்த்திகேயன், விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்துள்ளார்.

    2000 பேட்ச் ஒடிசா கேடர் அதிகாரியான சுஜாதா, தற்போது அம்மாநில நிதித்துறையில் சிறப்பு செயலாளராக பணியாற்றி வருகிறார். தகவலின்படி, அவர் தனது தனிப்பட்ட காரணங்களுக்காக ஓய்வு பெற விண்ணப்பித்துள்ளார்.

    சர்ச்சை என்ன?

    கடந்த வருடம் வரை மிஷன் சக்தி துறையில் ஆணையர் மற்றும் செயலாளராகப் பணியாற்றி வந்த சுஜாதா, மே 2024 இல், பதவியை தவறாகப் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.

    இதன் காரணமாக சுஜாதாவை பொதுமக்கள் சாராத துறைக்கு மாற்ற தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

    இதற்குப் பிறகு, தேர்தலில் பிஜு ஜனதா தளம் தேர்தலில் தோல்வியடைந்ததால் 6 மாத விடுப்பு எடுத்தார் சுஜாதா. கடந்த வருடம் நவம்பர் 26 வரை அவர் விடுப்பில் இருந்தார்.

    அதன்பிறகு விடுப்பை நீடிப்பதற்காக அவரது விண்ணப்பத்தை புதிதாக அமைந்த பாஜக அரசு நிராகரித்தது. இந்நிலையில் சுஜாதா விருப்ப ஓய்வு கோரி விண்ணப்பித்துள்ளார். 

    • தேர்தல் ஆணையம் நடத்திய விசாரணையில் பொய்யான பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது கண்டுபிடிப்பு.
    • கே.சி.வீரமணி மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 125 ஏ பிரிவின் கீழ் வழக்கு பதிவு.

    2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ஜோலார்பேட்டை தொகுதியில் போட்டியிட்ட அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி பொய்யான பிரமாண பத்திரம் தாக்கல் செய்ததாக வழக்கு தொடரப்பட்டது.

    ராமமூர்த்தி என்பவர் 2021-ம் அண்டு இதுகுறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்ததுடன், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

    உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் தேர்தல் ஆணையம் நடத்திய விசாரணையில் பொய்யான பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து கே.சி.வீரமணி மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 125 ஏ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    இந்நிலையில், இந்த வழக்கின் மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வந்தது.

    அப்போது, முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடைவிதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    • மோப்ப நாய்கள் மூலம் நடத்தப்பட்ட சோதனையில் அவை மாந்திரீகர் ஒருவரின் வீட்டுக்கு அழைத்துச் சென்றன.
    • அதுமட்டுமின்றி, மற்றுமொரு இளைஞரையும் கொலை செய்து, உடலை கிணற்றில் வீசியதாகவும் கூறினார்.

    பீகாரில் குழந்தை பாக்கியம்வேண்டி நடத்தப்பட்ட சடங்கில் முதியவரில் தலை துண்டிக்கப்பட்டு உடல் எரிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    பிகார் மாநிலம் ஔரங்காபாத் மாவட்டத்தை சேர்ந்த யுக்வல் யாதவ் (65) கடந்த வாரம் காணாமல் போனார். இதுதொடர்பான புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.

    இதற்கிடையே அவர் வசித்து வந்த கிராமத்தின் பக்கத்துக்கு கிராமத்தில் மனித மண்டை ஓடு மற்றும் எலும்புகள் கண்டெக்கப்பட்டது. சம்பவ இடத்தில் யுக்வலின் செருப்புகள் கிடந்தன. மோப்ப நாய்கள் மூலம் நடத்தப்பட்ட சோதனையில் அவை மாந்திரீகர் ஒருவரின் வீட்டுக்கு அழைத்துச் சென்றன.

    அங்கிருந்தவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், யுக்வலை அவர்கள் கொலை செய்தது தெரிய வந்தது. சுதிர் பாஸ்வான் என்பவர் குழந்தை பாக்கியம்வேண்டி, மாந்திரீகர் ராமாஷிஷ் ரிக்யாசனுடன் சேர்ந்து பூஜை நடத்தினார்.

    ஒரு மனிதரின் தலையைத் துண்டித்து, அவரின் தலையை ஹோலிகா தஹான் தீயில் எரித்தால் மட்டுமே குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று மாந்திரீகர் கூறியுள்ளார்.

    எனவே அவர்கள் சேர்ந்து யுக்வலை கடத்தி கொலை செய்துள்னர். அதுமட்டுமின்றி, மற்றுமொரு இளைஞரையும் கொலை செய்து, உடலை கிணற்றில் வீசியதாகவும் அவர்கள் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.

    இதனையடுத்து, கொலையில் ஈடுப்பட்ட சுதிர் பாஸ்வான் மற்றும் மாந்திரீகரின் சீடர்கள் மூவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். தலைமறைவான மாந்திரீகர் ராமாஷிஷ் ரிக்யாசனை தேடும் பணியிலும் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

    • இரு சமூகத்தினருக்கு இடையிலான மோதல் வன்முறையாக வெடித்தது.
    • வன்முறையில் 260-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

    மணிப்பூரில் சரியான நேரத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இயல்பு நிலைக்கு மணிப்பூர் திரும்பி வருகிறது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

    மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இது தொடர்பாக கூறியதாவது:-

    மணிப்பூரில் தற்போதைய நிலை அமைதியாக உள்ளது. இயல்பு நிலை திரும்பி வருகிறது. உள்துறை அமைச்சகம் இரண்டு சமூகத்தினரிடமும் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இரண்டு சமூகத்தினரும் அவர்களுக்குள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். படிப்படியாக நிலைமை நேர்மறையான இலக்கை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. தற்போது கவலைப்படுவதற்கான எந்த காரணமும் இல்லை.

    இரண்டு சமூகத்தினரும் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தியது வெற்றி பெற்றிருக்காது. மணிப்பூரில் சரியான நேரம் வந்தபோது, நாங்கள் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தினோம்.

    கடந்த 2023-ஆம் ஆண்டு மே மாதத்தில் இருந்து குகி-மெய்தி சமூகத்தினரிடையே ஏற்பட்டது. இதில் 260-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து முகாமில் வசித்து வருகின்றனர்.

    மெய்தி சமூகத்தினர் தங்களை பழங்குடியினர் பிரிவில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தினர். இதனை எதிர்த்து குகி சமூகத்தினர் பழங்குடியினர் ஒற்றுமை பேரணியை நடத்தினர். இந்த பேரணியின்போது மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் பின்னர் வன்முறையாக வெடித்தது.

    • வேதனையான விலை உயர்வு + கட்டுப்பாடற்ற கொள்ளை = மிரட்டி பணம் பறிப்பதற்கான பாஜகவின் மந்திரம்!
    • மோடி அரசு ரூ.43,500 கோடியைப் பிடித்துள்ளது.

    மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான மோடி அரசால் வங்கிகள் வசூல் ஏஜண்டுகளாக மாற்றப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடுமையாக சாடியுள்ளார்.

    ஏடிஎம்களில் பணம் எடுக்கும் கட்டணங்களை அதிகரிக்க வங்கிகளை அனுமதித்து ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்தது. எந்த வங்கியில் கணக்கு வைக்கப்பட்டுள்ளதோ, அந்த வங்கியின் ஏ.டி.எம். இயந்திரத்தில் ஐந்து முறையும், மற்ற வங்கிகளின் ஏ.டி.எம். இயந்திரத்தில் பெருநகரில் 3 முறையும், பெருநகர் அல்லாத இடங்களில் ஐந்து முறையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    அதற்குமேல் ஏ.டி.எம். இயந்திரத்தை பயன்படுத்தும் ஒவ்வொரு முறைக்கும் தலா 21 ரூபாய் கட்டணமாக பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த கட்டணத்தை 23 ரூபாயாக உயர்த்த ஆர்பிஐ வங்கிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது. வருகிற மே 1 ஆம் தேதி முதல் இது நடைமுறைக்கு வரும்.

    இந்த முடிவை விமரிசித்து கார்கே வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

    துரதிர்ஷ்டவசமாக, மோடி அரசால் நமது வங்கிகள் 'கலெக்ஷன் ஏஜெண்டுகளாக' மாற்றப்பட்டுள்ளன!

    ஏடிஎம் பணம் எடுக்கும் கட்டணம் அதிகமாக உள்ளது. 2018 மற்றும் 2024 க்கு இடையில் சேமிப்புக் கணக்குகள் மற்றும் ஜன் தன் கணக்குகளில் இருந்து குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்காததால், மோடி அரசு குறைந்தது ரூ.43,500 கோடியைப் பிடித்துள்ளது.

    மக்களை கொள்ளையடிப்பதற்கான பிற வங்கி கட்டணங்கள் :

    (வங்கிக்கணக்கு) செயலற்ற கட்டணம், ஒவ்வொரு ஆண்டும் ரூ.100-200 ஆகும். வங்கிக்கணக்கு ஸ்டேட்மென்ட் கட்டணம் ரூ.50-100.

    SMS எச்சரிக்கைகளுக்கு காலாண்டிற்கு ₹20-25 வசூலிக்கப்படுகிறது. வங்கிகள் கடன் செயலாக்கக் கட்டணமாக 1-3% வசூலிக்கின்றன.

    கடன் சரியான நேரத்தில் செலுத்தப்பட்டால், முன்கூட்டிய கடன் அடைப்புக் கட்டணங்கள் விதிக்கப்படும். NEFT, டிமாண்ட் டிராஃப்ட் கட்டணங்கள் கூடுதல் சுமையாகும். கையொப்ப மாற்றங்கள் போன்ற KYC அப்டேட்களுக்கும் கட்டணங்கள் விதிக்கப்படுகின்றன.

    முன்னதாக, மத்திய அரசு இந்தக் கட்டணங்களால் வசூலிக்கப்படும் தொகையின் தரவை பாராளுமன்றத்தில் வழங்கியது. ஆனால் இப்போது "ரிசர்வ் வங்கி அத்தகைய தரவைப் பராமரிக்கவில்லை" என்று சாக்கு கூறி இந்த நடைமுறையும் அரசு நிறுத்தி உள்ளது.

    வேதனையான விலை உயர்வு + கட்டுப்பாடற்ற கொள்ளை = மிரட்டி பணம் பறிப்பதற்கான பாஜகவின் மந்திரம்! என்று பதிவிட்டுள்ளார். 

    • மாணவர் கொல்லி நீட் தேர்வுக்கு முடிவு கட்ட மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • தமிழ்நாட்டில் நீட் தேர்வு அச்சத்தால் நடப்பு மார்ச் மாதத்தில் தற்கொலை செய்து கொண்ட இரண்டாவது மாணவி தர்ஷினி ஆவார்.

    பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நீட் அச்சத்தால் மேலும் ஒரு மாணவி தற்கொலை: மாணவர் கொல்லி நீட் தேர்வுக்கு முடிவு கட்ட மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்...!

    மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வில் போதிய மதிப்பெண்களை எடுக்க முடியாதோ? என்ற அச்சத்தில் சென்னையை அடுத்த கிளாம்பாக்கத்தில் தர்ஷினி என்ற மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். தர்ஷினியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    கிளாம்பாக்கத்தைச் சேர்ந்த மாணவி தர்ஷினி ஏற்கனவே இருமுறை நீட் தேர்வு எழுதியும் போதிய மதிப்பெண்களை பெற முடியாததால் மருத்துவப் படிப்பில் சேர முடியவில்லை.

    இந்த முறையாவது மருத்துவப் படிப்பில் சேர்ந்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் சென்னை அண்ணாநகரில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் தர்ஷினி பயின்று வந்தார்.

    நீட் தேர்வுக்கு இன்னும் ஒரு மாதம் மட்டுமே உள்ள நிலையில், தம்மால் போதிய மதிப்பெண் பெற முடியாதோ? என்ற அச்சத்தில் தான் அவர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

    தமிழ்நாட்டில் நீட் தேர்வு அச்சத்தால் நடப்பு மார்ச் மாதத்தில் தற்கொலை செய்து கொண்ட இரண்டாவது மாணவி தர்ஷினி ஆவார். இதற்கு முன் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தையடுத்த தாதாபுரம் கிராமத்தைச் சேர்ந்த இந்துமதி என்ற மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டு 8 ஆண்டுகளாகியும் தற்கொலைகள் தொடர்வது பெரும் கவலையளிக்கிறது.

    நீட் தேர்வு தமிழகத்துக்கு தேவையில்லாத ஒன்று. மருத்துவக் கல்வியின் தரத்தை அதிகரிக்கவோ, மருத்துவக் கல்வி வணிகமயமாவதைத் தடுக்கவோ நீட் தேர்வு எந்த வகையிலும் உதவவில்லை என்பது கடந்த 8 ஆண்டுகால புள்ளிவிவரங்களில் இருந்து உறுதியாகிறது.

    இதை உணர்ந்து நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று பாமக தொடர்ந்து வலியுறுத்தி வரும் போதிலும் அதை மத்திய அரசு செவிமடுக்கவில்லை.

    தமிழகத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அடுத்த நாளே நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்தவர்கள் இன்று வரை நீட் தேர்வை ரத்து செய்யவில்லை. மாணவ, மாணவிகளின் தற்கொலைக்கு மத்திய, மாநில அரசுகள் தான் பொறுப்பேற்க வேண்டும்.

    மாணவச் செல்வங்களைக் காக்க நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்கொலை செய்து கொண்ட மாணவி தர்ஷினியின் குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • காவலர் முத்துக்குமாரை கல்லால் அடித்து கொன்ற வழக்கு.
    • தேனி மாவட்டம் கம்பம் அருகே தலைமறைவாக இருந்த ரவுடி பொன்வண்ணனை சுட்ட போலீசார்.

    மதுரை உசிலம்பட்டியில் காவலரை கல்லால் அடித்து கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த நபர் மீது போலீசார் என்கவுண்ட்டர் நடத்தினர்.

    காவலர் முத்துக்குமாரை கல்லால் அடித்து கொன்ற வழக்கில் தேடப்பட்டு வந்த கஞ்சா வியாராரி பொன்வண்ணன் மீது போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்.

    இதில், படுகாயமடைந்த பொன்வண்ணனை மீட்டு போலீசார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, பொன்வண்ணனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில்,  பொன்வண்ணன் உயிருக்கு போராடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.



    ×