என் மலர்
இந்தியா

விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்தார் வி.கே.பாண்டியன் மனைவி சுஜாதா ஐ.ஏ.எஸ்.. சர்ச்சைப் பின்னணி
- ஐஏஎஸ் அதிகாரியான வி.கே. பாண்டியன், ஒடிசா முதல்வராக இருந்த நவீன் பட்நாயக்கின் நெருங்கிய உதவியாளராக இருந்தார்
- விடுப்பை நீடிப்பதற்காக அவரது விண்ணப்பத்தை புதிதாக அமைந்த பாஜக அரசு நிராகரித்தது
கடந்த வருடம் ஒடிசா மாநில சட்டமன்றத் தேர்தலின்போது அங்கு அரசியல் களத்தில் அதிகம் ஒலித்த பெயர் வி.கே. பாண்டியன். தமிழரான இவரை முன்வைத்தே பெரிய பிரச்சாரங்களை பாஜக முன்னெடுத்தது.
24 வருடங்களாக ஒரிசாவை ஆட்சி செய்து வந்த நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தள அரசு கடந்த தேர்தலில் பாஜகவிடம் தோல்வியடைய முக்கிய காரணங்களில் அதுவும் ஒன்று.
ஐஏஎஸ் அதிகாரியான வி.கே. பாண்டியன், ஒடிசா முதல்வராக இருந்த நவீன் பட்நாயக்கின் நெருங்கிய உதவியாளராக இருந்தார். பின் 2023 இல் தனது சொந்த விருப்பத்தின் பேரில் ராஜினாமா செய்த வி.கே. பாண்டியன் பிஜு ஜனதா தளத்தில் சேர்ந்தார்.
"நவீன் பட்நாயக் அவரது அரசியல் வாரிசாக வி.கே. பாண்டியனை அறிவிப்பார், ஒடிசா ஒரு தமிழனின் கையில் சென்றுவிடும்" என்பதே பாஜக தேர்தல் பிரசாரத்தில் மீண்டும் மீண்டும் ஒடிசா மக்களிடம் பதிய வைத்த பிம்பம். ஆனால் நவீன் பட்நாயக் அதை முற்றிலுமாக மறுத்தார்.
நவீன் பட்நாயக் ஆட்சியை இழந்து பாஜக கோட்டையை பிடித்த பின்னர், தீவிர அரசியலில் இருந்து விலகி இருப்பதாக பாண்டியன் அறிவித்தார்.
இந்நிலையில் தற்போது வி.கே. பாண்டியனின் மனைவியும், மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான சுஜாதா ஆர். கார்த்திகேயன், விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்துள்ளார்.
2000 பேட்ச் ஒடிசா கேடர் அதிகாரியான சுஜாதா, தற்போது அம்மாநில நிதித்துறையில் சிறப்பு செயலாளராக பணியாற்றி வருகிறார். தகவலின்படி, அவர் தனது தனிப்பட்ட காரணங்களுக்காக ஓய்வு பெற விண்ணப்பித்துள்ளார்.
சர்ச்சை என்ன?
கடந்த வருடம் வரை மிஷன் சக்தி துறையில் ஆணையர் மற்றும் செயலாளராகப் பணியாற்றி வந்த சுஜாதா, மே 2024 இல், பதவியை தவறாகப் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.
இதன் காரணமாக சுஜாதாவை பொதுமக்கள் சாராத துறைக்கு மாற்ற தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
இதற்குப் பிறகு, தேர்தலில் பிஜு ஜனதா தளம் தேர்தலில் தோல்வியடைந்ததால் 6 மாத விடுப்பு எடுத்தார் சுஜாதா. கடந்த வருடம் நவம்பர் 26 வரை அவர் விடுப்பில் இருந்தார்.
அதன்பிறகு விடுப்பை நீடிப்பதற்காக அவரது விண்ணப்பத்தை புதிதாக அமைந்த பாஜக அரசு நிராகரித்தது. இந்நிலையில் சுஜாதா விருப்ப ஓய்வு கோரி விண்ணப்பித்துள்ளார்.