இந்தியா

இந்து கோவில்களை திமுக அரசு நிர்வகிப்பதை காங்கிரஸ் தட்டி கேட்குமா? பிரதமர் கேள்வி

Published On 2023-10-04 07:29 GMT   |   Update On 2023-10-04 07:29 GMT
  • தெலுங்கானாவின் 119 இடங்களுக்கான தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது
  • மாநில அரசுக்கு கோவில்களின் நிர்வாகத்தில் தலையிட உரிமை உள்ளதா என கேட்டார்

தெலுங்கானாவில் 2018ல் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பாரத் ராஷ்டிர சமிதி (முன்னர் தெலுங்கானா ராஷ்டிர சமிதி) கட்சியை சேர்ந்த கே. சந்திரசேகர் ராவ் தலைமையிலான கட்சி வெற்றி பெற்று அவர் ஆட்சி அமைத்தார்.

இவ்வருட இறுதிக்குள் தெலுங்கானா மாநிலத்தில் 119 இடங்களுக்கான சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது.

வரவிருக்கும் தேர்தலில் தெலுங்கானாவில் ஆட்சியை பிடிக்க மத்தியில் ஆளும் பா.ஜ.க.வும் தீவிரம் காட்டி வருகிறது. இதனையொட்டி அம்மாநிலத்தில் உள்ள நிஜாமாபாத் நகரில் அக்கட்சி ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.

தனது நீண்ட உரையில் கே.சி.ஆர். ஆட்சியை விமர்சித்த மோடி, தமிழ்நாட்டின் ஆளும் தி.மு.க.வையும் தாக்கி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:

தமிழ்நாட்டில் இந்து கோவில்களை தி.மு.க. அரசாங்கமே எடுத்து நடத்தி வருகிறது. அரசின் முழு கட்டுப்பாட்டில் கோவில்கள் உள்ளன. அவ்வாறு அவர்கள் செய்யும் போது கோவில் சொத்துக்கள் நிலங்கள், வீடுகள், செல்வங்கள் மற்றும் பக்தர்கள் வழங்கும் காணிக்கைகள் கொள்ளை போவதையும் தடுக்க முடியாமல் அரசே அக்கொள்ளைக்கு துணை நிற்கிறது. கோவில்களை மாநில அரசாங்கமே எடுத்து நடத்த அரசுக்கு உரிமை உள்ளதா? மாநிலத்தில் உள்ள சிறுபான்மையினரின் வழிபாட்டு இடங்களை அரசு தொடுவதில்லை. ஆனால், தொன்று தொட்டு இருந்து வரும் இந்துக்களின் கோவில் நிர்வாகத்தில் மட்டும் தி.மு.க. அரசு தலையிடுவது ஏன்? தனது கூட்டணி கட்சியான தி.மு.க. இவ்வாறு செய்வதை காங்கிரஸ் தட்டி கேட்குமா? இந்துக்களுக்கே கோவில் நிர்வாகத்தை திருப்பி அளிக்கும்படி தி.மு.க.வை கேட்குமா?

இவ்வாறு மோடி கேள்வி எழுப்பினார்.

கோவில்களின் மாநிலம் என அழைக்கப்படும் தமிழ்நாட்டில் 1000 வருடத்திற்கு மேற்பட்ட கோவில்கள் மட்டுமே 400க்கும் மேல் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News