இந்தியா

பிரதமர் மோடிக்கு புது தனிச்செயலாளர் நியமனம்.. யார் இந்த நிதி திவாரி?

Published On 2025-03-31 20:57 IST   |   Update On 2025-03-31 20:57:00 IST
  • 2013 சிவில் சர்வீசஸ் தேர்வில் 96 வது இடத்தைப் பிடித்தார்.
  • இவரது ரிப்போர்ட்டிங் அதிகாரியாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இருந்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் தனிச் செயலாளராக ஐ.எஃப்.எஸ் அதிகாரி நிதி திவாரி நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய வெளியுறவு சேவை அதிகாரியான திவாரி, தற்போது பிரதமர் அலுவலகத்தில் (PMO) துணைச் செயலாளராகப் பணியாற்றி வருகிறார்.

மார்ச் 29 தேதியிட்ட உத்தரவில், அமைச்சரவையின் நியமனக் குழு அவரை நிரந்தர அடிப்படையில் பிரதமரின் தனி செயலாளராக நியமிக்க ஒப்புதல் அளித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

யார் இவர்?

நிதி திவாரி உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியில் உள்ள மஹ்மூர்கஞ்சை சேர்ந்தவர். இந்தப் பகுதி பிரதமர் மோடியின் மக்களவைத் தொகுதியின் கீழ் வருகிறது. யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு முன்பு, வாரணாசியில் கூடுதல் ஆணையராக (வணிக வரி) பணியாற்றினார். ஊடக அறிக்கைகளின்படி, பின் 2013 சிவில் சர்வீசஸ் தேர்வில் 96 வது இடத்தைப் பிடித்தார், அன்றிலிருந்து பொதுப் பணியில் ஈடுபட்டுள்ளார்.

நவம்பர் 2022 முதல் பிரதமர் அலுவலகத்தில் (PMO) துணைச் செயலாளராகப் பணியாற்றி வந்தார். இதற்கு முன்பு, அவர் வெளியுறவு அமைச்சகத்தின் ஆயுதக் குறைப்பு மற்றும் சர்வதேச பாதுகாப்பு விவகாரப் பிரிவில் துணைச் செயலாளராகப் பணியாற்றினார்.

 

இவரது ரிப்போர்ட்டிங் அதிகாரியாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இருந்துள்ளார். அணு சக்தி மற்றும் பாதுகாப்பு விவகாரம் ஆகியவற்றை வெளியுறவு விவகாரங்களில் இவர் கவனித்து வந்துள்ளார்.

மோடிக்கு தற்போது விவேக் குமார் மற்றும் ஹர்திக் சதிஷ்சந்திர ஷா ஆகிய இரண்டு தனி செயலாளர்கள் உள்ளனர். இந்நிலையில் நிதி திவாரியும் மோடியின் தனிச் செயலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த பணிக்கு மாத சம்பளமாக ரூ.2 லட்சம் வரை வழங்கப்படுகிறது.

Tags:    

Similar News