இந்தியா

எதிர்ப்பு அரசியலை கைவிட்டு ஒன்றுபட்டு செயல்பட வாருங்கள்- பிரதமர் மோடி அழைப்பு

Published On 2024-07-22 08:39 GMT   |   Update On 2024-07-22 08:39 GMT
  • நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் நிச்சயம் நிறைவேற்றப்படும்.
  • நாட்டின் நலனுக்காக அடுத்து வரும் 5 ஆண்டுகளும் அனைவரும் ஒன்றிணைந்து உழைக்க வாருங்கள்.

புதுடெல்லி:

பாராளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதையொட்டி பிரதமர் மோடி பாராளுமன்ற வளாகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பாராளுமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. பட்ஜெட் கூட்டத்தொடரை ஒட்டுமொத்த நாடும் எதிர்பார்க்கிறது.

எனவே கூட்டத்தொடர் முழுவதும் ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டியது அவசியம். கூட்டத்தொடர் சுமூகமாக நடைபெற எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்.

2047-ல் வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற இலக்கை அடையும் வகையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. மக்களின் அனைத்து தேவைகளையும் கருத்தில் கொண்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.

நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் நிச்சயம் நிறைவேற்றப்படும். வளர்ச்சிக்கான பாதையில் நாடு மிக வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது.

கடந்த 5 ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரம் 8 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. உலகில் பொருளாதார வளர்ச்சி அடைந்த நாடுகளை விட இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது.

எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு அரசியலை கைவிட்டு நாட்டின் வளர்ச்சிக்காக பணியாற்ற முன் வர வேண்டும்.

கசப்பு அரசியலுக்கான நேரம் முடிந்து விட்டது. அரசியலை தேர்தல் நேரத்தில் பேசிக் கொள்ளலாம். பாராளுமன்றத்தின் பயனுள்ள நேரத்தை சிலர் வீணடிக்கிறார்கள். நம்மிடம் நாட்டு மக்கள் நிறைய எதிர்பார்க்கிறார்கள்.

நாட்டின் நலனுக்காக அடுத்து வரும் 5 ஆண்டுகளும் அனைவரும் ஒன்றிணைந்து உழைக்க வாருங்கள்.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

Tags:    

Similar News