அவுரங்கசீப் பெருமையை புகழ்ந்து பேசும் காங்கிரஸ்: பிரதமர் மோடி தாக்கு
- மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் வரும் 20-ம் தேதி நடைபெறுகிறது.
- அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.
மும்பை:
மகாராஷ்டிர மாநில சட்டசபைத் தேர்தல் வரும் 20-ம் தேதி நடைபெறுகிறது. இதையடுத்து அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தின் சத்ரபதி சம்பாஜி நகரில் பா.ஜ.க. சார்பில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
இந்தத் தேர்தலில் ஒருபுறம் சம்பாஜி மகாராஜை நம்பும் தேசபக்தர்களும், மறுபுறம் அவுரங்கசீப்பைப் புகழ்ந்து பேசுபவர்களும் உள்ளனர்.
மஹாயுதி அரசாங்கம் இந்த நகரத்துக்கு சத்ரபதி சாம்பாஜி நகர் என்று பெயரிட்டது. உங்கள் விருப்பத்தை நாங்கள் நிறைவேற்றினோம், பால் தாக்கரேவின் விருப்பத்தை நிறைவேற்றினோம்.
மஹாயுதி அரசு உருவான பிறகு அதிகபட்ச அன்னிய முதலீட்டை ஈர்த்துள்ளது. முதலீட்டால் மக்கள் பயன் அடைந்துள்ளனர்.
விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க நமது அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.
காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைப்பதற்கு வளர்ச்சிக்கான திட்டங்களை அல்லாமல், பிரிவினையையே நம்பியுள்ளது.
தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர் முன்னோக்கிச் செல்வதை காங்கிரஸ் தடுக்கிறது. அதனாலேயே காங்கிரஸ் கட்சி ஆரம்பத்திலிருந்தே இட ஒதுக்கீட்டை எதிர்க்கிறது.
காங்கிரஸ் இளவரசர் (ராகுல் காந்தி) வெளிநாடுகளுக்குச் சென்று இடஒதுக்கீட்டை ஒழிப்போம் என வெளிப்படையாக அறிவிக்கிறார்.
இதற்காக, தற்போது எஸ்சி, எஸ்டி, ஓபிசி சமூகத்தை சிறு சிறு சாதிகளாகப் பிரிக்க சதி செய்கின்றனர்.
ஓபிசியை சாதி ரீதியாகப் பிரித்துவிட்டால் அதன் பலம் குறையும். அது நிகழ்ந்தால்தான் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரும் என அக்கட்சி கருதுகிறது.
காங்கிரஸ் ஆட்சிக்கு வர வாய்ப்பு கிடைத்தால் எஸ்சி, எஸ்டி, ஓபிசி-க்கான இடஒதுக்கீட்டை நிறுத்திவிடும். எனவே, அதற்கு பலியாகாமல் விழிப்புணர்வுடன் ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.