இந்தியா

பகவந்த் மான், ஆம் ஆத்மி கட்சியினர்

டெல்லி மக்கள் வெறுப்பு அரசியலை விரும்புவதில்லை: மாநகராட்சி தேர்தல் முடிவு குறித்து பஞ்சாப் முதல்வர் பேட்டி

Published On 2022-12-07 07:47 GMT   |   Update On 2022-12-07 07:47 GMT
  • ஆம் ஆத்மி கட்சி 104 இடங்களை வென்றதுடன் 31 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
  • பாஜக 83 வார்டுகளில் வெற்றி பெற்றதுடன், 19 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

டெல்லி மாநகராட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் ஆரம்பம் முதலே ஆம் ஆத்மி கட்சி முன்னிலை பெற்றுள்ளது. பகல் 12.30 மணி நிலவரப்படி அந்த கட்சி 104 வார்டுகளில் வெற்றி பெற்றிருந்தது. மேலும் 31 வார்டுகளில் முன்னிலையில் உள்ளது, இதன் மூலம் மொத்தம் 135 வார்டுகளில் அந்த கட்சி வெற்றி பெறும் என தெரிகிறது. டெல்லி மாநகராட்சியை கைப்பற்ற 126 வார்டுகளில் வெற்றி பெற்றால் போதும்.

இதனையடுத்து 15 ஆண்டு காலமாக பாஜகவின் வசம் இருந்த டெல்லி மாநகராட்சி தற்போது ஆம் ஆத்மி கைப்பற்றுவது உறுதியாகி உள்ளது. இந்த தேர்தலில் மதியம் 12.30 மணி நிலவரப்படி பாஜக 83 வார்டுகளை வென்று 19 வார்டுகளில் முன்னிலையில் இருந்தது. காங்கிரஸ் கட்சி ஐந்து இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 6 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் டெல்லி மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி பெற்றுள்ள வெற்றி குறித்து பேசிய பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் கூறியுள்ளதாவது:  டெல்லியில் 15 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியை அரவிந்த் கெஜ்ரிவால் அகற்றினார். தற்போது மாநகராட்சியில் 15 ஆண்டு கால பாஜக ஆட்சியையும் அவர் அகற்றி உள்ளார். டெல்லி மக்கள் வெறுப்பு அரசியலை விரும்புவதில்லை, பள்ளிகள், மருத்துவமனைகள், மின்சாரம், தூய்மை மற்றும் உள்கட்டமைப்புக்காக வாக்களிக்கிறார்கள் என்பதை இந்த தேர்தல் காட்டுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News