அரசியல் சாசனத்தை பாதுகாப்பதுபோல் ஆஸ்கார் லெவலில் நடிக்கிறார்: ராகுலை சாடிய பி.ஆர்.எஸ். தலைவர்
- ஒரு பக்கம் அரசியல் சாசனத்தின் நகலைப் பறைசாற்றிக் கொண்டிருக்கிறார் ராகுல் காந்தி.
- மறுபுறம் அவரது கட்சி அதை இழிவுபடுத்துகிறது என்றார் பி.ஆர்.எஸ் கட்சி தலைவர்.
ஐதராபாத்:
பாரத ராஷ்டிர சமிதி கட்சியில் இருந்து 7 எம்.எல்.ஏ.க்கள், 6 எம்.எல்.சி.க்கள் மற்றும் ஒரு மாநிலங்களவை எம்.பி. ஆகியோர் காங்கிரஸ் கட்சிக்கு மாறினர்.
இந்நிலையில், பி.ஆர்.எஸ். கட்சி தலைவரும், முன்னாள் முதல் மந்திரி சந்திரசேகர் ராவின் மகனுமான கே.டி.ராமாராவ் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
பாரதி ராஷ்டிர சமிதி கட்சியிலிருந்து விலகிய உறுப்பினர்களுக்கு எதிராக சட்டப் போராட்டத்திற்குத் தயாராகி வருகிறோம்.
இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளோம். சமீபத்திய கட்சித் தாவல்களின் பிரதிபலிப்பாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்புச் சட்டத்தின் பாதுகாவலர்களான அனைவரையும் சந்திப்போம்.
ஒரு பக்கம் அரசியல் சாசனத்தின் நகலைப் பறைசாற்றிக் கொண்டிருக்கிறார் ராகுல் காந்தி. மறுபுறம் அவரது கட்சி அதை இழிவுபடுத்துகிறது. அரசியல் சாசனத்தைப் பாதுகாப்பதுபோல் ஆஸ்கார் லெவலில் செயல்படுகிறார்.
பா.ஜ.க மற்றும் காங்கிரசால் பாதிக்கப்பட்ட அனைவரும் கட்சி மாறுதலுக்கு எதிராக ஒன்றுபட வேண்டும் என தெரிவித்துள்ளார்.