இந்தியா
null

அடுத்த கல்வி ஆண்டில் இருந்து 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு 10 பாடங்கள்- அதிர்ச்சி அறிவிப்பு

Published On 2024-06-20 13:31 GMT   |   Update On 2024-06-20 13:31 GMT
  • முதல் மாற்றமாக தேர்வுக்கான பாடங்களில் எண்ணிக்கை 6-ல் இருந்து 10-ஆக மாற்றப்பட்டுள்ளது.
  • ஒவ்வொரு மாணவரும் குறைந்த பட்சம் 3 மொழிகளில் பாடங்களை கற்ற வேண்டும்.

தேசிய கல்விக் கொள்கை 2020-ன் கீழ் உத்திரபிரதேசத்தில் 9, 10- ம் வகுப்பு பாடத்திட்டங்களில் 2025-26-ம் ஆண்டு முதல் சில மாற்றங்களை அந்த மாநில அரசு கொண்டு வர உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அந்த வகையில் முதல் மாற்றமாக தேர்வுக்கான பாடங்களில் எண்ணிக்கை 6-ல் இருந்து 10-ஆக மாற்றப்பட்டுள்ளது.

இதில் ஒவ்வொரு மாணவரும் குறைந்தபட்சம் 3 மொழிகளில் பாடங்களை கற்ற வேண்டும் என அமல்படுத்தப்பட்டுள்ளது.

வாரியத்துடன் தொடர்புடைய 27 பள்ளிகளில் 9, 10-ம் வகுப்புகளில் படிக்கும் 50 லட்சம் மாணவர்களுக்கு இந்த திட்டம் படிபடியாக செயல்படுத்த அனைத்து பங்குதாரர்களிடம் வாரியம் ஜூன் 29-ந் தேதிக்குள் ஆலோசனைகளை நடத்த கோரிக்கை விடுத்துள்ளது.

அதிகாரிகளின் அறிக்கைப்படி, 2025-26 முதல் 9-ம் வகுப்பிலும், 2026-27 முதல் 10-ம் வகுப்பிலும் மும்மொழி கொள்கை நடைமுறைப்படுத்தப்படும். இந்த கொள்கையில் கீழ், அனைத்து மாணவர்களுக்கும் ஹிந்தி கட்டாயமாக இருக்கும்.

கூடுதலாக, மாணவர்கள் சமஸ்கிருதம், குஜராத்தி, உருது, பஞ்சாபி, பெங்காலி, மராத்தி, அஸ்ஸாமி, ஒரியா, கன்னடம், காஷ்மீரி, சிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், நேபாளி, பாலி, அரபு, பாரசீகம் மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் இரண்டு மொழிகளைத் தேர்வு செய்வார்கள்.

கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களும் கட்டாயப் பாடங்களாக இருக்கும் என்று உத்தரப் பிரதேச வாரியச் செயலர் திவ்யகாந்த் சுக்லா தெரிவித்தார்.

வீட்டு அறிவியல், மானுடவியல், வணிகம், என்சிசி, கணினி, வேளாண்மை அல்லது சுற்றுச்சூழல் அறிவியல் ஆகியவற்றிலிருந்து ஒரு பாடத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். கலைக் கல்வித் துறையில் ஓவியம், இசை, பாடுதல் அல்லது இசை வாசித்தல் ஆகியவை அடங்கும்.

உடற்கல்வி மற்றும் சுகாதாரக் கல்வியில் நீதிநெறி கதைகள், யோகா, விளையாட்டு மற்றும் உடற்கல்வி மற்றும் சமூகப் பயனுள்ள உற்பத்திப் பணிகள் ஆகியவை அடங்கும். தொழிற்கல்விக்கு, மாணவர்கள் 31 பாடங்களில் இருந்து தேர்வு செய்யலாம்.

30 மதிப்பெண்களுக்கு எழுத்துத் தேர்வும், உடற்கல்வி, கலை, தொழிற்கல்வி ஆகிய பாடங்களில் 70 மதிப்பெண்களுக்கு உள்மதிப்பீடும் நடத்தப்படும். மற்ற பாடங்களுக்கு 80 மதிப்பெண்களுக்கு எழுத்துத் தேர்வும், 20 மதிப்பெண்களுக்கு உள்மதிப்பீடும் இருக்கும்.

உயர்நிலைப் பள்ளி மதிப்பெண் பட்டியலின் மொத்த மதிப்பெண்கள், முந்தைய 600 மதிப்பெண்களிலிருந்து இப்போது 1,000 ஆக இருக்கும். ஒவ்வொரு பாடத்திற்கும் 100 மதிப்பெண்கள், இறுதித் தேர்வுக்கு 80 மதிப்பெண்கள் மற்றும் உள் மதிப்பீட்டிற்கு 20 மதிப்பெண்கள்.

புதிய பாடத்திட்ட மாற்றங்களுடன் தர நிர்ணய முறை அறிமுகப்படுத்தப்படும். மேலும் வினாத்தாள் வடிவமும் மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News