சிறப்புக் கட்டுரைகள்
null

தாய் எட்டடி பாய்ந்தால் பிள்ளை பதினாறு அடி பாயும்

Published On 2023-12-22 10:39 GMT   |   Update On 2023-12-22 10:40 GMT
  • வாழையினைப் போல கடவுள் கைங்கரியங்களுக்கு தேங்காயும் பயன்படுகிறது.
  • மரபணுவியல் சோதனைகளின் அடிப்படையில் தென்கிழக்காசியாவே தென்னையின் தாயகமாக இருந்துள்ளது.

தாய் எட்டடி பாய்ந்தால் பிள்ளை பதினாறு அடி பாயும் என்று சொல்லுவார்கள்.

எட்டடி என்னங்க.. இப்போ உள்ள பிள்ளைகள் 100 அடி பாய்வாங்க. அத்தனையும் அவ்வளவு ஷார்ப். கை வைக்காமலே கீறும் அளவிற்கு.

அடடே உம்பிள்ளையா? என்ற வெற்றி இலக்கில் சிக்கிய பிள்ளையை உறவினர்களும், குடும்பத்தினர்களும் குறிப்பிடுவது உண்டு. அது யாரோட புள்ளை தாய் எட்டடி பாய்ந்தால் அவன் 16 அடி பாய மாட்டானா? என்று பாராட்டாகவும்..

ஆமா இதுக்கொன்னும் குறைச்சல் இல்லை ? அவன் ஸ்கூல் எந்த திசையிலே இருக்குன்னு தெரியுமா உங்களுக்கு , இத்தனை நாள் கரிச்சி கொட்டிட்டு இப்போ பர்ஸ்ட் மார்க் எடுத்ததும் பழமொழி சொல்லி எம்பிள்ளைன்னு பீத்திக்க வேண்டியது என்று சொல்வதையும் கேட்டிருப்போம்.

தாய்வழி சமூக அமைப்புக் கொண்டது இந்தியா. பெரும்பாலும் நல்லதுக்கும் கெட்டதுக்கும், ஏன் திட்டுவதற்கு கூட தாயினைப் பழித்தோ பாராட்டியோ வார்த்தைகளைக் கேட்டு இருப்போம். அப்படித்தான் இந்த பழமொழியும்.

ஒரு தாய், எட்டடியை அதாவது குருபிரம்மா, குரு விஷ்ணு, குருதேவோ, மகேஸ்வரா, குரு சாக்ஷாத், பரபிரம்மா, தஸ்மை, ஸ்ரீ குருவே நமக- இவைகள் தான் அந்த எட்டடி. இதனை தன் மகனுக்கு பயந்து அதாவது இங்கே பயந்து என்பதன் அர்த்தம் கற்றுக் கொடுத்து, அவனை குருகுலத்திற்கு அனுப்பினால், அவன் பதினாறு வகை செல்வங்களைப் பெற்று வென்று வருவான் என்று பொருள்.

இரண்டு விதமான அர்த்தங்கள் கொண்டதுதான் இந்த பழமொழி. அர்த்தம் சொல்வதற்கு முன்னாடி எதைப்பற்றி தெரிந்து கொள்ளப்போகிறோம்னு ஒரு ரவுண்ட் அடிப்போமா.

உடலில் எதையும் கழிக்காத மரமாக வாழையைச் சொல்லலாம். பூ, இலை, காய், கனி, தண்டு, நார்ப்பகுதி என எதுவும் வீணாகாது. வாழைப்பழக் கழிவுகள் காகிதமாக மாற்றப்படுகிறது. இந்த நார் இழைகளைக் கொண்டு பட்டுப் போன்ற மென்மையான துணிகள் நெய்யப்படுகின்றன.

இது மட்டுமல்ல வாழைமரம் ஒரு வளர்ந்த தாவரம். அதை மரம் என்ற இலக்கில் சேர்க்க முடியாது. ஒவ்வொரு வருஷமும் 170லட்சம் டன் வாழைப் பழம் உற்பத்தி செய்வதில் உலகத்திலேயே இந்தியாதான் நம்பர் ஒன்னாக இருக்கிறது.

வாழையடி வாழையா தழைத்து ஓங்கணுன்னு வாழ்த்துகளைப் பெற்றுத்தரும் வாழை மரம். இந்த வாழை மரத்தை தாய் என்றும் குறிப்பிடுவார்கள். வாழை மரக்கன்றுகளை நடும் போது எட்டடி இடைவெளியில் நடவேண்டும். தாய்க்கு அர்த்தம் சொல்லியாச்சு. அப்போ பிள்ளைக்கு.... அதுக்குத்தானே வர்றோம்.

தென்னையைப் பெத்தா இளநீரு பிள்ளையைப் பெத்தா கண்ணீருன்னு உணர்ச்சி பொங்கப் பாடியிருப்பார் சிவாஜி, கண்ணதாசனின் வரிகளை ... பெற்ற பிள்ளை போடாத சோத்தை வளர்த்த தென்னை தருமின்னு சொல்வாங்க.

சங்க இலக்கியத்தில் தெங்கு, தாழை என்றும் பெயர் உண்டு. ஒருமுறை பயிரிட்டால் வம்சத்திற்கும் பலன் தருவதால்தான் தென்னம் பிள்ளை என்று அழைக்கிறார்கள்.

வாழையினைப் போல கடவுள் கைங்கரியங்களுக்கு தேங்காயும் பயன்படுகிறது. சிவபெருமானின் அடையாளமாகவும், இறைவனுக்குப் படைக்கும் நிவேதானப் பொருளாக வும், மகாலட்சுமியின் அம்சமாகவும் இருக்கிறது.

இதையெல்லாம் தாண்டி ஒரு ருசிகரமான அனுபவம் தென்னம்பிள்ளைக் கல்யாணம். அட வாழைமரத்திற்கு தாலிகட்டுவதைப் போல தென்னைக்கும் கட்டுவார்களா என்று கேட்கறீங்க ? இதுவும் கல்யாணம்தான். நம் வீட்டுப் பெண் பிள்ளைகளுக்கு சடங்கு செய்வதைப் போலத்தான்.

எங்கட தென்னம்பிள்ளை பெரியாளாகித்து.. இத்தினி மணிக்கு தண்ணிவாக்கிறோம். எல்லாரும் வாருங்கோ என்று அடுத்த, பக்கத்து வீடுகளுக்கு அழைப்பு விடுவார்கள். அப்படி அழைப்பு விடுவது வட்டா எனப்படும்.

அழைப்பு வந்தவுடன் குடும்பமாக பெண்கள் கூடி பலகாரம் செய்வார்கள். குலவையிட்டு தென்னம்பிள்ளைக்கு குடம்குடமாக தண்ணீர் வார்த்து ஒரு நல்ல சேலையொன்றை எடுத்துவந்து சுற்றி, இருபுறமும் நிறைகுடம் விளக்கு வைத்து தென்னை மகளுக்கு ஆரத்தி எடுத்து கண்ணூறு கழிப்பார்கள். மஞ்சளும் குங்குமமும் அப்பி தன் தங்க நகைகளைப் பூட்டிய தென்னைப்பெண் நாணத்தில் ஓலைக்கூந்தல் விரித்து மதர்த்து நிற்பாள். இப்படித்தான் தென்னையின் கல்யாணம் நடைபெறுமாம்.

தென்னையை தாழை என்றழைக்கும் வழக்கம் நெடுநாளாக இருந்தது. மரபணுவியல் சோதனைகளின் அடிப்படையில் தென்கிழக்காசியாவே தென்னையின் தாயகமாக இருந்துள்ளது.

தென்னை வாழ வைப்பது மட்டும் இல்லைங்க.. போட்டுத் தள்ளவும் செய்யும்.

என்னாது? வடிவேலு வாய்ஸ்ல படிக்கவும்.

தலைக்கூத்தல் என்று ஒரு சொல்லாடல் உண்டு. உங்களுக்குத் தெரியுமா?!

இளநீரில் பொட்டாசியம் அதிகளவு உள்ளது. மிகச்சிறந்த உடலுக்கு தீங்கு விளைவிக்காத பானமாக கருதப்படும் இளநீர் கொலைபானமாகவும் இருக்கிறது என்றால் அதற்கு காரணம் பொட்டாசியம்தான்.

அட ஊர்லே ஒரு பெரிசு, இந்தா மண்டையைப் போடறேன்.. அந்தா மண்டையப் போடறேன்னு இழுத்துட்டுக் கிடக்கு, பாலூத்தி பாலூத்தியே கடனாளி ஆயிடுவேன் போலிருக்கு.. என்ன செய்யன்னு அலுத்துகிட்ட ஒரு அட்டிக்கு நம்மூரு பெரிசு ஒண்ணு சொல்லிக் கொடுத்ததுதான் இந்த இளநீர் டெக்னிக்.

இப்படி பொசுக்குன்னு போவாத உசுரை, இழுத்துப்பிடிச்சி நல்லெண்ணை வெச்சி.. தலைக்கு ஊத்தி.. அதே தலையைச்சீவிறா மாதிரி இரண்டு இளநீரை வெட்டி குடிக்க கொடு.. பொட்டுன்னு போயிடும்.

நிஜமாவா?

அட நானென்ன பொய்யாச் சொல்றேன்..

இழுத்துப் பறிச்சிட்டு கிடக்கிறதுக்கு போய்ச்சேர்ந்தா நல்லதுதானே என்று கூட்டுச்சதியை கருணைக்கொலை என்று பெயரிட்டுச் செய்வார்கள். இதற்குப் பெயர்தான் தலைக்கூத்தல்.

கோலாகல சடங்காக நடைபெற்று வந்த தலைக்கூத்தல் சமீபத்தில் சமூக அமைப்புகள், மற்றும் காவல்துறையால் குறைந்திருக்கிறது.

இதே அதிர்ச்சியோட பழமொழியின் அர்த்தத்தை பார்த்திடலாமா?

வாழை மரத்தினை தாய் என்றும், தென்னைமரத்தினை பிள்ளை யென்றும் அழைப்பார்கள்.

வாழை மரத்திற்கு எட்டடி இடைவெளியும், தென்னை மரத்திற்கு பதினாறடி இடைவெளியும் விட்டு நட வேண்டும். அப்போதுதான் அதன் வேர்கள் நீளும் என்பதையே இப்பழமொழி உணர்த்துகிறது.

நல்ல கதை....முருகனும் விநாயகனும் மாம்பழத்திற்காக ஊரையே சுற்றியது போல இருக்குன்னுதானே நினைக்கிறீங்க. ஒருவழியா எல்லாத்தையும் சுற்றிக்காட்டிட்டீங்கன்னுதானே சொல்றீங்க..

ஒரு குறிப்பு செய்தியும் சொல்றேன் கேளுங்க... நாகப்பட்டினம் திருத்தெங்கூர் அருள்மிகு வெள்ளிமலைநாதர், தஞ்சாவூர் பாபநாசம் தாலுகா, காவிரி ஆத்துக்கு வடக்கு கரையில் உள்ள வடகுரங்காடுதுறை தயாநிதீஸ்வரர் கோவில்களில் தென்னை மரம் தலவிருட்சமாக உள்ளது.

தாய் எட்டடி பாய்ந்தால் பிள்ளை பதினாறு அடி பாயும் என்ற பழமொழியின் விளக்கத்தோடு... அடுத்தவாரம் சந்திக்கலாம்.

-லதா சரவணன்

Tags:    

Similar News