சிறப்புக் கட்டுரைகள்

மருத்துவம் அறிவோம் - மந்திரம் மனதை அமைதிப்படுத்தும்!

Published On 2025-03-31 14:55 IST   |   Update On 2025-03-31 14:55:00 IST
  • படிக்கும் குழந்தைகளுக்கு ஹயக்ரீவர் உபாசனையை செய்ய அறிவுறுத்துவார்கள்.
  • மனதில் எப்போதும் நல்ல எண்ணங்களும், ஆக்கப்பூர்வ சிந்தனைகளும் வேண்டும்.

குதிரை: நல்ல கம்பீரமான குதிரையை பார்க்கும்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஒருவித மகிழ்ச்சி ஏற்படும். பல ஆயிரக்கணக்கான வருடங்களாக குதிரைகளும் மனிதனுடன் வீட்டு விலங்காக இருந்து வருகின்றன. மனித சமுதாய வளர்ச்சியில் குதிரைகளுக்கும் பெரும் பங்கு உண்டு. குதிரைப் படை இல்லாத மன்னர்களே இல்லை.

வேகமும், சக்தியும் நிறைந்த இக்குதிரைகள் தாவர உணவினை உட்கொள்ளும். அதுவும் மிகச் சிறிய வயிறுதான் இவைகளுக்கு. மேம்புல் மேய்ந்தே வாழ்பவை.

குதிரைக்கு சிறப்பு பார்வைத் திறன் உண்டு. 3-ம் பார்வை திறன் உண்டு. இது குதிரையினை சுற்று வட்டாரத்தினைப் பற்றிய நல்ல விழிப்புணர்வோடு இருக்க உதவும். குதிரையின் வேக அசைவுகள் மின்னல் வேகத்தில் இருக்கும். நின்று கொண்டே கூட தூங்கும்.

மன்னர், மாவீரர் என சித்தரிக்கும்போது அநேகமாக அவர்கள் குதிரை மீது அமர்ந்து கையில் வீர வாளுடன் இருப்பது போலத்தான் வரைந்து இருப்பார்கள்.

இதனை ஆன்மீக ரீதியிலும் சக்தி, கட்டுப்பாடு இல்லாத சுதந்திரம், தன்னம்பிக்கை, ஆக்கப்பூர்வம் இவற்றினை குதிரை உணர்த்துவதாகக் கூறுவர்.

சுதந்திரம், கடமை இரண்டும் சேர்ந்தது. வீரம் மிக்கது.

கனவில் ஓடும் குதிரை வருவது வெற்றியினை குறிப்பதாகவும், நின்று கொண்டிருக்கும் குதிரை நாம் வெற்றியை அடைய முயற்சி எடுக்க வேண்டும் என்பதனை உணர்த்துவதாகவும் கூறுவர். இவைகளை நம்ப வேண்டும் என்ற அவசியம் இல்லை. மனித வாழ்வில் குதிரை பெறும் முக்கியத்துவத்தை அறியவே இவை குறிப்பிடப்படுகின்றன.

* உலகில் எந்த கலாசாரத்திலும் குதிரையினை அதிர்ஷ்டமாகவே கருதுகின்றனர்.

* சீனர்கள் குதிரை சக்தி, பலம், அதிர்ஷ்ட சின்னமாகும்.

* ஆப்பிரிக்கர்களுக்கு குதிரை செல்வம் தரும் சின்னம்.

* வீரத்தின் சின்னம்.

* இந்து கலாச்சாரத்தில் ஹயக்ரீவப் (குதிரை முகம் கொண்ட விஷ்ணு அமைப்பு) பெருமாளை வழிபடுகின்றனர்.

* சூரிய பகவான்- குதிரைகள் பூட்டிய ரதத்தில் வருவதாகவே குறிப்பிடப்படுகின்றது.

* வெற்றிக்கும், வேகமாக செயல்கள் முடிவதற்கும் அஸ்வரூடா தேவியினை வழிபடுவது வழக்கத்தில் உள்ளது.

7 குதிரைகள் வேகமாக ஓடி வருவது போன்ற படம், ஓவியம் இதனை ஒருவருக்கு திருமணம், புதுமனை புகுவிழா போன்ற நிகழ்வுகளில் பரிசாகக் கொடுப்பர். காரணம்- சில நம்பிக்கைகள் தான்.

* அதிர்ஷ்டம் * வளர்ச்சி ஆகும். * வெள்ளை நிறம் பளிச்சென்ற நிறம் (பிரவுன் போன்ற நிறங்களாயினும் நல்ல ஒளியோடு கூடிய படங்கள், ஓவியங்கள்). இதனை தொழில் செய்யும் இடங்களிலும் வைப்பார்கள்.

ஹயக்ரீவர்- விஷ்ணுவின் குதிரை முகம் கொண்ட அவதாரம் எடுத்தவர். மது என்ற அரக்கனை அழித்தவர். வேதங்களை காத்து மீட்டு பிரம்மனிடம் சேர்த்தவர்.

சரஸ்வதி தேவியின் குரு ஹயக்ரீவர்.

அறிவு, ஞானம் இவற்றினை அளிப்பவர். படிக்கும் குழந்தைகளுக்கு ஹயக்ரீவர் உபாசனையை செய்ய அறிவுறுத்துவார்கள்.

உடல் நலம், குறிப்பாக சரும பிரச்சினைகள் நீங்க இவரை வழிபடுவர்.

ஜபம் செய்தால் என்ன பலன்? இந்த கட்டுரையினை நான் படித்தேன். பகிர்ந்து கொள்கிறேன்.

திருவண்ணாமலையில் வாழ்ந்த சேஷாத்ரி சுவாமிகளை அநேகர் படித்திருப்பார்கள். அவரது ஆசிரமத்திற்கும் சென்றிருப்பார்கள். அவர் கூறிய அரிய கருத்தினை இங்கு பார்ப்போம்.

சேஷாத்ரி சுவாமிகள் இடைவிடாது மந்திரம் சொல்லிக்கொண்டே இருப்பார். அப்போது ஒருவர் அவரை அணுகி என்ன செய்து கொண்டிருக்கிறார் எனக் கேட்டார். அதற்கு சுவாமிகள். கர்மா ஒழிய வேண்டும். அதற்காக மந்திர ஜபம் செய்து கொண்டிருக்கின்றேன் என்றார். ஒரு லட்சம் ஆவிருத்தி பூர்த்தி ஆகி உள்ளது. இன்னும் அரை லட்சம் செய்ய வேண்டும். மந்திரம் சொல்லி சொல்லி கர்மாவை அழிக்கலாம் என்று மேலும் கூறினார்.

மேலும் 'வாழ்க்கைப் போக்கையே மாற்றி விடலாம். மந்திர ஜபம் மனசைச் சுத்தம் செய்யும். மனது சுத்தமாகி விட்டால் நீங்கள் எது கேட்டாலும் கிடைக்கும்' என்றும் ஜபத்தின் வலுவினை எடுத்துச் சொன்னார்.

கேட்டவர் ஆச்சரியப்பட்டனர். 'நாலு வார்த்தையை திருப்பித் திருப்பி சொல்வதால் எல்லா நன்மையும் கொண்டு வந்து தருமா?'

 

'அது வெறும் வார்த்தையல்ல. கந்தகம் என்பது ஒரு வகை மண்ணு. அது வெடிமருந்தாக மாறலாம். அந்த மாதிரி குறிப்பிட்ட சில வார்த்தைகள் உள்ளுக்குள் மாறுதல் நிகழ்த்தும்.

மந்திரம் சொல்ல சொல்ல மனசு ஒரு முகப்படும். ஒரு முகப்பட்ட மனசுக்கு அதிக சக்தி உண்டு.

சந்தேகப்படாம உடனே மந்திரம் சொல்ல ஆரம்பிக்கணும். உனக்கு என்ன ஆயுசு விதிச்சிருக்கோ தெரியாது. அதனால் இந்த ஆயுசுலேயே நல்லது நடக்க மனதில் தெளிவு கிடைக்க இப்பவே மந்திரம் சொல்ல ஆரம்பித்து விடு'- சுவாமிகள்.

'ஒரு மணி நேரத்துக்கு மேலே ஜபம் பண்ண முடியலையே. அந்த ஒரு மணி நேரமும் மனது எங்கெங்கோ சுத்துகின்றதே என பலர் கேட்டனர்.

'பண்ணித்தான் ஆவேன் என்று உட்கார்ந்து விட வேண்டும். அதுதான் வைராக்கியம். என்ன தடுத்தாலும் எது குறுக்கிட்டாலும் தினம் ஒரு மணி நேரம் ஜபம் பண்ண ஆரம்பிக்கணும். அக்கறையோடு செய்தால் ஒரு மணி நேரம் போதாது.

மனசுக்கு பசிக்க ஆரம்பிக்கும். இன்னொரு மணி நேரம் செய். இன்னொரு மணி நேரம் செய் என மனது கேட்கும். ஆரம்பத்தில் ஆர்வம் இருக்காது. கஷ்டப்பட்டு ஆரம்பித்தால் ஆர்வம் அதிகமாகும்.

நான் 7 வயதிலேயே காலை, மாலை இரு வேளையும் ஒரு மணி நேரம் ஜபம் பண்ண ஆரம்பித்தேன். எல்லா விருப்பங்களும் ஜபத்தால் நிறைவேறும். இப்போது 10, 12 மணி நேரம் ஜபம் செய்கிறேன்-சுவாமிகள்

'ஜபம் பண்ணி என்ன கிடைத்தது?'- அடுத்த கேள்வி

என்னென்ன கிடைக்கும் என்று சொல்கிறேன், கேள்.

* மனது அமைதி படும். கோபம் குறையும்.

* ஜபம் கூடும்போது கோபம் அறவே நீங்கும்.

* காதில் இனிமையான சங்கீதம் கேட்கும்.

* நோய் உபத்திரங்கள் இருக்காது.

* உணவில் கவனமாக சாப்பிடத் தோன்றும்.

* ருசிக்காக நாக்கு அலையாது.

* உணவு குறையும். உள்ளம் பலமாகும்.

* கண் கூர்மையாகும்.

* உடலில் இருந்து தேஜஸ் விசிறி விசிறி அடிக்கும்.

* வாக்கு பலிக்கும்.

* எட்டு மணி நேரம் ஜபம் பண்ணினா நீ வேற, மந்திரம் வேற இல்லை.

* எல்லாம் சந்தோஷம் தான்.

* பசிக்காது, தூக்கம் வராது, யாரையும் அடையாளம் தெரியாது.

* கடவுளிடம் நெருக்கமாக போய் விடலாம். அப்புறம் அதுவே நம்மை இழுத்து போகும்.

* மனசு கட்டிலில் இருந்து விடுபடலாம்.

* உனக்கு வேண்டும் என்பதனை கடவுள் கொடுப்பார்.

* உன் வார்த்தை எல்லாம் கடவுள் வார்த்தை.

* ஜபம் சுவாசம் போல் இயல்பாக மாறும்.

-திரு. சேஷாத்ரி சுவாமிகள் அருளிய பதில்.

நச்சுத்தன்மை கொண்ட மக்கள் உறவுகள், நட்பு என்ற பெயரில் நம்மை சுற்றி இருப்பார்கள். அருகிலேயே இருப்பார்கள். ஆனால் அவர்களிடம் இருந்து மீளத் தெரியாது. அநேகர் அந்த சூழ்நிலையில் மூழ்கி தவிப்போம். முதலில் அவர்களை அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்.

* உங்களை ஒருவர் ஓயாது குற்றம் சொல்லிக் கொண்டே இருக்கின்றார்களா? ஒரு காரணமும் இல்லாது கத்துவது, சண்டை போடுவது என இருக்கின்றார்களா?

* உங்களை வேலை சொல்லியோ அல்லது அலைய விட்டோ உடல் சக்தி, மன சக்தியினை பிழிந்து எடுத்து விடுகின்றார்களா?

* உங்களை குற்றவாளி போல் ஆக்கி விடுகின்றார்களா?

* இதனை செய்தும் ஒரு முறை கூட 'சாரி', 'வருந்துகிறேன்' என்று சொல்லாத ஜன்மங்களா?

* எதனையும் திரித்து பேசுகின்றார்களா?

* அழிவுப்பூர்வம் என்பதனைத் தவிர எதுவும் பேசுவதில்லையா?

* பிறரைப் பற்றி புரளி பேசுபவரா?

* பொய் மட்டுமே பேச்சாகக் கொண்டவரா?

* உங்கள் வெற்றி, சாதனை அவர்கள் நிம்மதியைக் கெடுக்கின்றதா?

* அவர்கள் பிரச்சினைக்கு நீங்களே காரணம் என்று கூறுபவரா? உன் முகத்தினை பார்த்து போனேன். போன காரியம் உருப்படவில்லை.

* உங்களை உலகில் எதுக்குமே லாயக்கு இல்லாதவர் போல் பேசுபவரா?

* தன்னுடைய பெருமைகளை தானே தட்பட்டம் அடிப்பவரா?

* மரியாதை என்ற சொல்லுக்கே அர்த்தம் தெரியாதவரா?

* உங்கள் நேரம், காலம் முக்கியம் என நினைக்காதவரா?

* உங்கள் தன்னம்பிக்கையினை கடப்பாரை கொண்டு உடைத்து நொறுக்குகின்றாரா?

 

கமலி ஸ்ரீபால்

இத்தனையும் போதாதா? இவர் கடும் நச்சுத்தன்மை மிக்கவர் என்று சொல்ல. இத்தகையோரிடம் தொடர்பு, பேச்சு எதுவுமே கூடாது. வாழ்க்கைக்கு அர்த்தமே இல்லாது ஆகி விடும். ஆக இந்த நச்சுதன்மை கொண்டவர்களை நம் எண்ணம், பேச்சு எதிலும் இல்லாது ஒதுக்கி விடுங்கள். ஒதுக்குவது என்றுமே மிக பலவீனப்படும். உங்கள் வாழ்க்கையை ஆக்கப்பூர்வமாக மாற்றி விடலாமே.

மனதில் எப்போதும் நல்ல எண்ணங்களும், ஆக்கப்பூர்வ சிந்தனைகளும் வேண்டும். கண்டிப்பாக இவை ஒருவரின் வாழ்வினை வளமானதாக ஆக்குகின்றது என விஞ்ஞான ஆய்வுகள் கூறு கின்றன.

ஒரு பிரிவு நபர்களிடம் அவர்கள் கையில் ஒரு நீர் நிறைந்த டம்ளர் கொடுத்து ஆக்கப்பூர்வமான நல்ல சிந்தனைகளை பேச, நினைக்கச் செய்தனர். அந்த நீரில் படிகங்கள் உருவாகின. அவை நேர்த்தியாக ஒளியுடன் இருந்தன.

மற்றொரு பிரிவு நபர்களிடம் அதே போல் ஒரு டம்ளர் நீர் கொடுத்து அழிவுப்பூர்வமான சிந்தனைகள் மற்றும் பேச்சு நிகழ்ச்சி செய்தனர். அந்நீரில் உருவான படிகங்கள் சிதறி ஒழுங்கற்று ஒளி இழந்து இருந்தன. நம் உடல் 70 சதவீதம் நீர் சத்து கொண்டது. அதன்படி நாம் நினைக்கும் நல்ல சிந்தனைகளும், பேச்சு, செயல்களும் நமக்கு நன்மையை அளிக்கும் அல்லவா. இந்த நிலை சிதறாமல் இருக்க வாழ்க்கையில் சிறந்த ஒழுக்க முறை தேவையாகின்றது.

Tags:    

Similar News