சிறப்புக் கட்டுரைகள்
null

வியப்பில் ஆழ்த்தும் விசாகப்பட்டினம்!

Published On 2025-04-27 12:15 IST   |   Update On 2025-04-27 12:16:00 IST
  • இயற்கைக் காட்சிகளையும் கீழே உள்ள கடற்கரையையும் பார்த்து மகிழலாம்.
  • லைட் ஹவுஸ் கண்டிப்பாக பார்த்து மகிழ வேண்டிய இடமாகும்.

ஆந்திரபிரதேசத்தில் ஒரு அழகிய காஷ்மீர் என்று அழைக்கப்படும் விசாகப்பட்டினம் கடற்கரைகள், நீர்வீழ்ச்சி, அருங்காட்சியகங்கள், அருமையான ஆலயங்கள் உள்ள இடமாகும். குறைந்த பட்ஜெட்டில் நிறைந்த மகிழ்ச்சி தரும். இங்கு பார்ப்பதற்கு நிறைய இடங்கள் உள்ளன. அவற்றில் சில இதோ:

கைலாச கிரி

நூறு ஏக்கர் பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தப் பூங்கா 360 அடி உயரத்தில் ஒரு குன்றில் அமைக்கப்பட்டுள்ளது. ரெயில் நிலையத்தில் இருந்து 9 கிலோமீட்டர் தூரத்தில் இது உள்ளது.


ச.நாகராஜன்

இங்கிருந்து இயற்கைக் காட்சிகளையும் கீழே உள்ள கடற்கரையையும் பார்த்து மகிழலாம். இங்குள்ள முக்கியமான ஈர்ப்பு வெண்மை வண்ணத்தில் உள்ள சிவ பார்வதியின் அழகிய சிலைகளாகும். 40 அடி உயரம் உள்ளவை இந்தச் சிலைகள்.

இங்கு ரோப் கார் வசதி உள்ளது. ஆகவே அதிக உயரத்தில் இருந்து கண்கொள்ளாக் காட்சிகளைக் கண்டு ரசிக்கலாம்.

ஆர்.கே.பீச்

ராமகிருஷ்ணா கடற்கரை என்பதன் சுருக்கமே ஆர்.கே.பீச். இதன் அருகே தான் டால்பின் நோஸ் உள்ளது. ரெயில் நிலையத்தில் இருந்து 4 கிலோ மீட்டர் தூரத்தில் இது உள்ளது. மக்கள் விரும்பி வரும் கடற்கரை இது.

சப்மரீன் மியூசியம்

இந்த அருங்காட்சியகம் நிஜமாகவே ஒரு சப்மரீனுக்குள்ளேயே அமைக்கப்பட்டிருக்கிறது. ஐ.என்.எஸ். குருசுரா என்ற இந்த சப்மரீன் இந்தியாவின் ஐந்தாவது சப்மரீன் ஆகும்.

இந்த மியூசியம் ஆர்.கே. கடற்கரை அருகில் வார் மெமோரியல் அருகே உள்ளது. நமது வலிமை, தேசபக்தி, வீரர்கள் ஆகியவற்றைச் சித்தரிக்கும் செய்திகள், கட்டுரைகள், படங்கள் இங்கு உள்ளன.

டால்பின் நோஸ்

விசாகப்பட்டினத்தின் தெற்குப் பக்கத்தில் அமைந்துள்ள டால்பின் நோஸ் பகுதியில் இருந்து வங்கக் கடலில் அழகைப் பார்த்து மகிழலாம்.1175 அடி உயரத்தில் இருந்து சூர்ய அஸ்தமனத்தையும் பார்த்து மகிழலாம்.

இங்குள்ள லைட் ஹவுஸ் கண்டிப்பாக பார்த்து மகிழ வேண்டிய இடமாகும். இது யாரடா மற்றும் கங்குவரம் துறைமுகத்திற்கு அருகில் அமைந்துள்ளது. டால்பினின் மூக்கை நினைவுபடுத்துவது போல் உள்ளதால் இதற்கு டால்பின் நோஸ் என்ற பெயர் ஏற்பட்டது.

ரிஷிகொண்டா கடற்கரை

வங்கக் கடலில் அமைந்துள்ள அழகிய கடற்கரை இது. 15 கிலோ மீட்டர் தூரத்தில் இது உள்ளது. பெயருக்கேற்றபடி இது கிழக்குக் கடற்கரையின் மணிமகுடமே தான்!

கடலில் பல்வேறு நீர் விளையாட்டுக்களை விளையாட விரும்புவோர் இங்கு அவற்றை விளையாடி மகிழலாம்.

போர்ரா குகைகள்

விசாகப்பட்டினத்தில் இருந்து 90 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது போர்ரா குகைகள்.

சுமார் 2600 அடி உயரத்தில் இருந்து 4300 அடி உயரம் வரை உள்ளன. அனந்தகிரி மலைத்தொடரில் 2310 அடி உயரத்தில் அமைந்துள்ளது போர்ரா குகைகள்.

இதைப் பற்றிய வரலாறு ஒன்று உண்டு. பசுக்களை மேய்க்கும் சிறுவன் பசு ஒன்றை மேய்த்துக் கொண்டிருந்த போது அது அங்கிருந்த துளை ஒன்றின் வழியே கீழே விழுந்து விட்டது. அதைத் தேடிச் சென்றவர்கள் இந்த குகையைக் கண்டு அதிசயித்தனர். அங்கு ஒரு சிவலிங்கமும் காணப்பட்டது. சிவபிரானே பசுவைக் காப்பாற்றியதாக ஐதீகம் நிலவுகிறது. இங்கு பின்னர் ஒரு ஆலயம் நிர்மாணிக்கப்பட்டது.

இந்தியாவில் உள்ள பெரிய குகைகளுள் இதுவும் ஒன்று.

யாரடா கடற்கரையில் சூர்ய அஸ்தமனக் காட்சி

யாரடா கடற்கரை விசாகப்பட்டினத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. கங்காவரம் கடற்கரை மற்றும் துறைமுக, டால்பின் மூக்கு, ஆகியவை இதன் அருகிலேயே உள்ளன.

இந்தக் கடற்கரையில் சூரியன் மறையும் காட்சி அழகிய காட்சி என்பதால் இங்கு ஏராளமானோர் திரள்வது வழக்கம்.


இங்கு படிந்துள்ள வண்டல் மண் பற்றிய ஆய்வில் இந்த மண்ணானது அருகில் உள்ள புறா மலை அமைந்திருப்பதன் விளைவால் தான் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. வண்டல்கள் சேர்வதும் பின்னர் அரிமானத்தால் அவை நீங்குவதுமாக இருக்கின்றன!

விசாகப்பட்டினம் மிருகக்காட்சி சாலை

விசாகப்பட்டினம் ரெயில் நிலையத்தில் இருந்து 11 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இது.


இங்கு அழகிய மான்கள், யானைகள், இமயமலைக் கருங்கரடிகள் உள்ளிட்ட வனவிலங்குகளையும், பட்டாம்பூச்சிகளையும் ஏராளமான பறவைகளையும் பார்த்து மகிழலாம். சிறுவர்கள் மகிழ்ச்சி அடைவர். மூன்று பக்கம் கிழக்குத்தொடர்ச்சி மலைகள் இருக்க நான்காவது பக்கம் வங்கக் கடல் திகழ 625 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டது இது.

சிம்மாச்சலம் கோவில்

விசாகப்பட்டினத்திற்கு வடக்கே பத்து மைல் தூரத்தில் உள்ள இந்தக் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இது சிம்மாச்சலம் மலையில் ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ளது. வராக நரசிம்மர் எழுந்தருளி அருளும் இந்தத் தலம் 32 நரசிம்மத் தலங்களில் ஒன்றாகும்.


5 வாயில்களுடன் அமைந்துள்ள இது ஒரு கோட்டையைப் போல காட்சியளிக்கிறது. இதைப் பற்றிய புராண வரலாறுகளும், சரித்திர வரலாறுகளும் ஏராளம் உள்ளன.

கடிகி நீர்வீழ்ச்சி

கடிகி நீர்வீழ்ச்சி இயற்கைச் சூழலில் அமைந்த ஒரு நீர்வீழ்ச்சி. கோஸ்தானி ஆற்றில் இருந்து வரும் நீர் 50 அடி உயரத்தில் இருந்து கடிகி என்ற கிராமத்தில் நீர்வீழ்ச்சியாக விழுகிறது. போர்ரா குகை அருகே உள்ளது இது.

இங்கு மலைமீது டிரெக்கிங் செய்ய வசதிகள் உண்டு. இங்கு முகாமிட்டும் தங்கலாம். நுழைவுக் கட்டணம் எதுவும் இங்கு கிடையாது. மேலே செல்ல ஜீப் வசதிகள் வாடகைக்குக் கிடைக்கும். போர்ரா குகைக்கும் இதற்கும் உள்ள தூரம் 5 கிலோமீட்டர் தான்!

அரக்கு பள்ளத்தாக்கு

கடிகி நீர்வீழ்ச்சிக்குச் செல்லும் வழியில் பார்க்க வேண்டிய இடம் அரக்குப் பள்ளத்தாக்கு என்ற மலை வாசஸ்தலம் ஆகும். காடுகள் அடர்ந்த இயற்கைச் சூழல் நிறைந்த பகுதி இது. இது காப்பித் தோட்டங்களுக்குப் பெயர் பெற்றது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3000 அடி உயரத்தில் இது உள்ளது. இந்தப் பகுதியில் தான் 30-க்கும் மேற்பட்ட போர்ரா குகைகள் உள்ளன.

பீம்லி பீச்

பீமுனிப்பட்டினம் கடற்கரை என்பதே பீம்லி பீச்சாக மருவி அழைக்கப்படுகிறது.

பஞ்ச பாண்டவரில் ஒருவரான பீமனின் பெயரைக் கொண்டது இது. கொஸ்தனி ஆறு வங்காள விரிகுடாவுடன் கலக்கும் இடத்தில் இந்தக் கடற்கரை உள்ளது. பக்கத்தில் உள்ள பவுரலகொண்டா மலைப்பகுதியில் ஏராளமான தேவதாரு மரங்களைக் கண்டு மகிழலாம். 32 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இந்தக் கடற்கரை விசாகப்பட்டினத்தில் பார்க்க வேண்டிய ஒரு இடமாகும்.

மொத்தத்தில் அழகிய கடற்கரைகள், ஆறு கடலில் கலக்கும் சங்கம இடம், கோவில், நீர்வீழ்ச்சி, அருங்காட்சியகங்கள் என பல்வேறு சுற்றுலா அம்சங்களைக் கொண்ட விசாகப்பட்டினம் சுற்றுலாப் பயணத்திற்கு ஏற்ற ஒரு இடமாகும்.

Tags:    

Similar News