தமிழ்நாடு (Tamil Nadu)

கொலை செய்யப்பட்ட சுரேஷ்.

ஸ்ரீரங்கத்தில் பழிக்குப்பழியாக நடந்த ரவுடி கொலை- 5 பேர் அதிரடி கைது

Published On 2024-09-23 05:41 GMT   |   Update On 2024-09-23 05:41 GMT
  • பிரபல ரவுடி தலை வெட்டி சந்துரு என்கிற சந்திரமோகன் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டார்.
  • கணவன், மனைவி இரண்டு பேரும் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினர்.

திருச்சி:

திருச்சி ஸ்ரீரங்கம் ரெயில்வே பி. கிளாஸ் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் என்கிற ஆட்டுக்குட்டி சுரேஷ் (வயது 33 ). பூ வியாபாரியான இவர் பாமக ஸ்ரீரங்கம் பகுதி முன்னாள் தலைவர்.

இவர் கடந்த 2020ம் ஆண்டு ஸ்ரீரங்கம் மேம்பாலத்தில் பிரபல ரவுடி தலை வெட்டி சந்துரு என்கிற சந்திரமோகன் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டார்.

பின்னர் சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்தார். அதன் பின்னர் பாதுகாப்பு கருதி வெளியூரில் சில நாட்கள் தங்கி இருந்தார்.

பின்னர் சொந்த ஊருக்கு வந்தார். அதன் பின்னர் நேற்று மாலை தனது மனைவியை அழைத்துக் கொண்டு ஏர்போர்ட் பகுதியில் உள்ள ஒரு கோவிலுக்கு சாமி தரிசனம் செய்தார். பின்னர் கணவன், மனைவி இரண்டு பேரும் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினர்.

ஸ்ரீரங்கம் அம்பேத்கர் நகர் பகுதியில் வந்தபோது 3 மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த 5 பேர் கும்பல் மோட்டார் சைக்கிளை வழி மறித்தனர்.

பின்னர் பட்டாகத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சுரேஷை சரமாரியாக வெட்டி சாய்த்தனர்.

அப்போது தடுக்க முயன்ற அவரது மனைவி ராகினியின் காலில் அரிவாள் விட்டு விழுந்தது. இந்த சம்பவத்தில் சுரேஷ் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்தில் இறந்தார். பின்னர் கொலை கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது.

இந்த சம்பவம் பற்றி அறிந்த ஸ்ரீரங்கம் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். பின்னர் கொலை வழக்கில் தேடப்பட்ட ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரவுடி தலைவெட்டி சந்துருவின் கூட்டாளிகள் நந்தகுமார், ஜம்புகேஸ்வரன், சூர்யா, பாலகிருஷ்ணன், விமல் ஆகிய 5 பேரை நள்ளிரவு சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் கோட்டை காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.

இதில் தலை வெட்டி சந்துரு என்கிற சந்திர மோகன் வழக்குக்கு பழிக்கு பழியாக இந்த கொலை நடந்தது தெரியவந்துள்ளது.

மேலும் இந்த கொலையில் வேறு நபர்களுக்கு தொடர்பு உள்ளதா என விசாரணை நடந்து வருகிறது. கைதான ஐந்து பேரையும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைக்க காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. 

Tags:    

Similar News