தமிழ்நாடு

தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து பொட்டாஷ் உரத்தை கடத்தி பதுக்கிய குடோனுக்கு சீல் வைக்க நடவடிக்கை

Published On 2023-05-18 06:50 GMT   |   Update On 2023-05-18 07:44 GMT
  • ரூ.60 லட்சம் மதிப்புள்ள 120 டன் பொட்டாஷ் உரம் மாயமானது.
  • கடத்தல் பொருட்களை பதுக்கி வைத்த குடோனுக்கு அதிகாரிகள் சீல் வைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி புதிய துறைமுகத்தில் கப்பல் மூலம் ஏராளமான உணவு பொருட்களும் மற்றும் பல்வேறு பொருட்களும் கொண்டு வரப்படுகிறது. அவைகளை நூற்றுக்கணக்கான லாரிகள் மூலம் தினசரி குடோன்கள் மற்றும் சேமிப்பு கிடங்குகளில் சேமித்து வைக்கப்படுகிறது.

இதில் கடத்தல் கும்பல்கள் ஈடுபட்டு கோடிக்கணக்கில் சம்பாதித்து வருவதாகவும், இவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் உதவியாக இருந்து வருவதாகவும் குற்றச்சாட்டுகள் இருந்து வருகிறது.

இந்நிலையில் ரஷியாவில் இருந்து கப்பல் மூலம் தூத்துக்குடிக்கு கொண்டு வரப்பட்ட 33 ஆயிரம் டன் பொட்டாஷ் உரத்தை பல்வேறு குடோன்களுக்கு பிரித்து அனுப்பும் பணி நடைபெற்றது. இதில் ரூ.60 லட்சம் மதிப்புள்ள 120 டன் பொட்டாஷ் உரம் மாயமானது.

இதனை முத்தையாபுரம் பகுதியில் உள்ள தனியார் குடோனில் பறிமுதல் செய்த முத்தையாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப் -இன்ஸ்பெக்டர் சுந்தர் மகாராஜன், தனிப்பிரிவு காவலர்கள் ஜான்சன், செல்வின் ராஜா, மற்றும் அருணாச்சலம் உள்ளிட்ட போலீசார் கடத்தலில் ஈடுபட்ட மாதவன், மதியழகன் ஆகிய 2 பேரை கைது செய்து கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரியையும் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக தலைமறைவான 3 பேரை வலை வீசி தேடி வருகின்றனர்.

கடத்தல் நடவடிக்கைகள் குறித்து தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின்படி டி.எஸ்.பி. சத்யராஜ் நேரடியாக விசாரணை நடத்தி வருகின்றார். இதற்கிடையே கடத்தல் பொருட்களை பதுக்கி வைத்த குடோனுக்கு அதிகாரிகள் சீல் வைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News