தமிழ்நாடு

நிதி ஆயோக் கூட்டத்தில் மம்தா பேச அனுமதி மறுப்பு- முதலமைச்சர் கண்டனம்

Published On 2024-07-27 09:02 GMT   |   Update On 2024-07-27 09:02 GMT
  • மேற்குவங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி இந்த நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
  • எதிர்க்கட்சிகள் நமது ஜனநாயகத்தின் ஒரு அங்கம் என்பதை மத்திய பாஜக அரசு புரிந்துகொள்ள வேண்டும்.

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மாநில முதல் மந்திரிகள் கலந்துகொள்ளும் நிதி ஆயோக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில முதல் மந்திரிகளில் பலர் புறக்கணித்துள்ளனர்.

ஆனால் மேற்குவங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி இந்த நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

பிரதமர் மோடி தலைமையிலான நிதி ஆயோக் கூட்டத்தில் இருந்து மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி வெளிநடப்பு செய்தார்.

"எதிர்க்கட்சிகளில் இருந்து ஒரே முதலமைச்சராக பங்கேற்ற எனக்கு முழுமையாக பேச வாய்ப்பு அளிக்கப்படவில்லை. எனக்கு முன் பேசியவர்கள் 20 நிமிடங்கள் வரை பேச அனுமதிக்கப்பட்டார்கள். ஆனால் 5 நிமிடம் மட்டும் தான் எனக்கு பேச அனுமதிக்கப்பட்டது. மேற்கு வங்கத்திற்கு மத்திய அரசின் நிதி வழங்கப்படாததை குறித்து நான் பேசி கொண்டிருக்கும் போதே என்னுடைய மைக்கை ஆஃப் செய்து என்னை அவமதித்துவிட்டார்கள்" என்று தெரிவித்தார்.

இந்நிலையில் நிதி ஆயோக் கூட்டத்தில் மேற்குவங்க முதல்வரை பேச அனுமதிக்காதது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார். அவர் தனது எக்ஸ் தளத்தில்,

நிதி ஆயோக் கூட்டத்தில் ஒரு முதல்வரை இப்படித்தான் நடத்துவதா? இதுதான் கூட்டாட்சியா?

எதிர்க்கட்சிகள் நமது ஜனநாயகத்தின் ஒரு அங்கம் என்பதை மத்திய பாஜக அரசு புரிந்துகொள்ள வேண்டும்.

கூட்டாட்சியில் எதிர்க்கட்சிகளின் கருத்துகளையும் கேட்டு மரியாதை அளிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News