சிவகாசி அருகே குடிநீர் தொட்டிக்குள் கொன்று வீசப்பட்ட நாய்- கிராம மக்கள் அதிர்ச்சி
- நாய் அழுகிய நிலையில் காணப்பட்டதால் அது இறந்து பல நாட்கள் இருக்கலாம் என தெரிகிறது.
- தொட்டிக்குள் கிடந்த நாயை அகற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
சிவகாசி:
விருதுநகர் மாவட்டம் சிவகாசி யூனியனுக்கு உட்பட்ட புதுக்கோட்டை பஞ்சாயத்து பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக 4 இடங்களில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பிள்ளையார்கோவில் அருகில் உள்ள நீர்த்தேக்க தொட்டி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் கட்டப்பட்டது.
சுமார் 60 அடி உயரம் கொண்ட இந்த நீர்தேக்க தொட்டியில் 60 ஆயிரம் லிட்டர் தண்ணீர் சேமித்து வைக்கலாம். இந்த தொட்டியில் இருந்து அந்த பகுதியில் உள்ள 500-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.
பஞ்சாயத்து நிர்வாகத்தின் உத்தரவுப்படி இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சுத்தம் செய்ய அதன் ஆபரேட்டர் கடந்த சனிக்கிழமை தண்ணீர் ஏற்றாமல் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று காலை தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்ய வந்தபோது துர்நாற்றம் வீசி உள்ளது. இதனால் அச்சம் அடைந்த டேங்க் ஆபரேட்டர் இதுகுறித்து எம்.புதுப்பட்டி போலீசுக்கு தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது. போலீசார் விரைந்து வந்து தொட்டியின் மீது ஏறி பார்த்தபோது அதற்குள் நாய் இறந்து கிடந்துள்ளது. நாய் அழுகிய நிலையில் காணப்பட்டதால் அது இறந்து பல நாட்கள் இருக்கலாம் என தெரிகிறது.
இதுகுறித்து போலீசார், அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சம்பவ இடத்துக்கு சென்று மேல்நிலை நீர்தேக்க தொட்டியை ஆய்வு செய்தனர்.
தொட்டிக்குள் கிடந்த நாயை அகற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் தொட்டி சுத்தம் செய்யப்பட்டது.
இந்த சம்பவம் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவம் குறித்து பஞ்சாயத்து தலைவர் காளீஸ்வரி எம்.புதுப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார்.
நாயை கொன்று மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்குள் யாரேனும் போட்டுவிட்டு சென்றிருக்கலாம் என கருதப்படுகிறது. இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.