என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
விருதுநகர்
- இசக்கி, ராம்குமார் வைத்திருந்த லத்தி, கம்புகளை பிடுங்கி அவர்களையே சரமாரியாக தாக்கினர்.
- படுகாயமடைந்த 2 பேரும் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
ராஜபாளையம்:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வடக்கு ஆவரம்பட்டி பாரதியார் தெருவில் புகார் மனு தொடர்பாக வடக்கு போலீஸ் நிலைய தலைமை காவலர்கள் இசக்கி, ராம்குமார் ஆகியோர் விசாரணை நடத்த சென்றனர்.
அப்போது அங்கிருந்த 6 பேர் கொண்ட கும்பல் போலீஸ்காரர்களை தடுத்து வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது. அவர்களை போலீசார் எச்சரித்தனர். இருப்பினும் அந்த கும்பல் அத்துமீறி நடந்து கொண்டதோடு இசக்கி, ராம்குமார் வைத்திருந்த லத்தி கம்புகளை பிடிங்கி அவர்களையே சரமாரியாக தாக்கினர்.
இதில் படுகாயமடைந்த 2 பேரும் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. விசாரணைக்கு சென்ற போலீஸ்காரர்கள் லத்தியால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக இன்ஸ்பெக்டர் அசோக்பாபு, சப்-இன்ஸ்பெக்டர் அஜித்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீஸ்காரர்களை தாக்கியவர்களை தீவிரமாக தேடி வந்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக கீழ பால்பாண்டி (வயது 31), கிளிராஜன் (24), பாஞ்சாலி ராஜா (40) பாண்டியராஜ்(22) ஆகிய 4 பேரை தட்டிதூக்கி கைது செய்தனர்.
மேலும் தலைமறைவாக இருந்த ராமநாதன் மகன் சரவணகார்த்திக்(33), சேவகன் மகன் முத்துராஜ்(34) ஆகியோரை போலீசார் தேடி வந்த நிலையில் நேற்று 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.
மதுபோதையில் போலீசார் மீது தாக்குதல் - 7 பேர் கைது | MaalaimalarLocation : ராஜபாளையம்WEBSITE LINK : https://t.co/3U5lJAXKK7#PoliceOfficer #Rajapalayam #ViralVideos #Maalaimalar pic.twitter.com/ejYTb4oEZM
— Maalai Malar தமிழ் (@maalaimalar) November 16, 2024
- பராமரிக்க என்ன முறைகளை விவசாயிகள் கையாள்கிறார்கள்.
- அவர்களது ஆய்வு பணிகளிலும் தொய்வு ஏற்பட்டது.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த பகுதிகளில் என்ன பயிர் பயிரிடப்படுகிறது, அதனை பராமரிக்க என்ன முறைகளை விவசாயிகள் கையாள்கிறார்கள் என்று ஆய்வு செய்து வருகின்றனர்.
இதற்காக 192 மாணவிகள் மற்றும் 8 பேராசிரியர்கள் உள்ளடங்கிய குழு காரியாபட்டியில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்கி அருகிலுள்ள கிராமங்களுக்கு சென்று வந்தனர். ஆனால் அங்கு போதிய வசதிகள் இல்லாததால் மாணவிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளனர். இதனால் அவர்களது ஆய்வு பணிகளிலும் தொய்வு ஏற்பட்டது.
இந்நிலையில், மாணவியர்களின் சிரமம் குறித்து நிதி மற்றும் சுற்றுச்சுழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து உடனடியாக தன்னுடைய மல்லாங்கிணறு ராஜாமணி திருமண மண்டபத்தை மாணவியர்கள் பயன்படுத்தி கொள்ள வழங்கினார்.
மேலும், வருகின்ற 20ஆம் தேதி வரை மாணவியர் தங்குவதற்கு ஏதுவான அடிப்படை வசதிகள் மற்றும் உணவு ஏற்பாடுகளையும் செய்து கொடுத்துள்ளார். இதனிடையே, மாணவியரை நேரில் சந்தித்த அமைச்சர் அவர்களுடன் உரையாடி அனைத்து வசதிகளும் போதுமானதாக உள்ளதா என கேட்டறிந்தார்.
- ஊரக வளர்ச்சிபணிகளை கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தொடங்கி வைத்து பேசினார்.
- உதவித்தொகை வராத ஒவ்வொரு ரேஷன் கார்டுக்கும் மகளிர் உதவித்தொகை வழங்கப்படும்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை கஞ்சநாயக்கன்பட்டியில் ஊரக வளர்ச்சிபணிகளை கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தொடங்கி வைத்து பேசினார்.
அப்போது," வரும் ஜனவரி மாதம் முதல் அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் கூறிய அவர், "வரும் ஜனவரி மாதம் முதல் ரேஷன் கார்டு வைத்துள்ள அனைவருக்கும் ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும்.
உதவித்தொகை வராத ஒவ்வொரு ரேஷன் கார்டுக்கும் மகளிர் உதவித்தொகை வழங்கப்படும்.
முதியோர் உதவித்தொகைக்கு விண்ணப்பித்து ஆணை பெற்றுள்ள அனைவருக்கும் விரைவில் முதியோர் உதவித்தொகை வழங்கப்படும்" என்றார்.
இத்திட்டத்தின் மூலம் 1.16 கோடி பெண்கள் மாதந்தோறும் உரிமைத் தொகை பெறுகின்றனர். இதில் தகுதி இருந்தும் பலருக்கு ரூ.1,000 கிடைக்கவில்லை என புகார் எழுந்த நிலையில், அனைத்து மகளிருக்கும் ரூ.1,000 வழங்கப்படும் என அமைச்சர் அறிவித்துள்ளார்.
- இன்று முதல் வருகிற 16-ந்தேதி வரை 4 நாட்கள் அனுமதி.
- அபிஷேகம் மற்றும் அலங்காரம் சிறப்பு பூஜை நடைபெற உள்ளது.
வத்திராயிருப்பு:
வத்திராயிருப்பு அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தரமகா லிங்கம் கோவில் உள்ளது. அமாவாசை, பவுர்ணமிக்கு தலா மூன்று நாட்கள் பிரதோஷத்திற்கு இரண்டு நாட்கள் என மாதம் எட்டு நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.
இன்று முதல் வருகிற 16-ந்தேதி வரை நான்கு நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இன்று ஐப்பசி மாத பிரதோஷத்தையொட்டி பக்தர்கள் காலை 6 மணிக்கு பிறகு குறைவான எண்ணிக்கையில் தாணிப்பாறை வனத்துறை கேட் முன்பு நின்றனர்.
பின்னர் கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய சென்றனர். வானிலை ஆய்வு மைய அறிவிப்பின்படி மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட் டது.
மழை பெய்தால் அனுமதிக்க மாட்டார்கள் என்பதாலும், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து வருவதாலும் பக்தர்கள் எண்ணிக்கை மிக மிக குறைவான எண்ணிக்கையில் இருந்தது.
இன்று ஐப்பசி மாத பிரதோஷத்தை யொட்டி மாலை 4.30 மணியிலிருந்து 6 மணிக்குள் சுந்தர மகாலிங்கம் சாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. அபிஷேகம் முடிந்ததும் சாமி அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெறுகிறது.
நாளை மறுநாள் ஐப்பசி மாத பவுர்ணமியில், சுந்தர மகாலிங்கம் சாமிக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரம் சிறப்பு பூஜை நடைபெற உள்ளது. நாளை மறுநாள் அதிகளவில் பக்தர்கள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
- உங்கள் ஆணவத்திற்காக தான் இனிமேல் தமிழக மக்கள் உங்களை தோற்கடித்து கொண்டே இருப்பார்கள்.
- உங்களின் வாழ்க்கைக்கும், வளர்ச்சிக்கும் ஒரு சேவகனாக எனது பணிகள் தொடரும்.
விருதுநகரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் கள ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, விருதுநகர் விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:-
ஏழை எளிய மக்களுக்காக எண்ணற்ற திட்டங்களை தி.மு.க. அரசு செயல்படுத்தி வருகிறது. அதனை இந்த மேடையில் மணிக்கணக்கில் என்னால் சொல்ல முடியும். தமிழர்களின் வீர விளையாட்டான அரங்கம் அமைத்தது பயனற்ற திட்டமா? மதுரையில் மாணவ-மாணவிகள் கல்வியாளர்கள் பயன்படுத்தும் வகையில் கலைஞர் நூலகம் அமைத்தது பயனற்ற திட்டமா? கிண்டியில் சிறப்பு மருத்துவமனை அமைத்து பயனற்ற திட்டமா? தமிழகம் முழுவதும் 1 கோடியே 20 லட்சம் பெண்களுக்கு ரூ.1000 கலைஞர் மகளிர் உரிமை தொகை வழங்குவது பயனற்ற திட்டமா? இதில் எதை சொல்கிறார் எடப்பாடி பழனிசாமி.
இப்படி வாய்தொடுக்காகவும் ஆணவத்துடன் பேசி பேசித்தான் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருகிறீர்கள். நான் உறுதியாக சொல்கிறேன். உங்கள் ஆணவத்திற்காக தான் இனிமேல் தமிழக மக்கள் உங்களை தோற்கடித்து கொண்டே இருப்பார்கள்.
தமிழக மக்கள் மனதில் கலைஞர் தவிர்க்க முடியாதவர். அவரது கொள்கைகளையும், சிந்தனைகளையும் செயல்படுத்தி வருகிறேன். கலைஞர் பிள்ளை என்பது மட்டுமல்லாமல் அவரது தொண்டனாகவும் வாழ்ந்து வருவதில் பெருமிதமடைகிறேன். அவரது புகழ் வெளிச்சம் இந்தியா முழுவதும் வீசுகிறது. அந்த வௌிச்சம் எடப்பாடியின் கண்களை கூச செய்கிறது.
எப்போதும் உங்களுக்கு உறுதுணையாக உங்களின் வாழ்க்கைக்கும், வளர்ச்சிக்கும் ஒரு சேவகனாக எனது பணிகள் தொடரும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- விருதுநகர் மாவட்டத்திற்கு திராவிட மாடல் ஆட்சியில் ஏராளமான திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
- தமிழ்நாட்டை உயர்த்த என்னுடைய சக்தியை மீறி உழைப்பேன்.
விருதுநகர்:
விருதுநகரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் கள ஆய்வு மேற்கொண்டார். 2-வது நாளான இன்று ரூ.77.11 கோடி மதிப்பீட்டில் 6 தளங்களுடன் கட்டப்பட்டு உள்ள புதிய கலெக்டர் அலுவலகத்தை அவர் திறந்து வைத்தார்.
பின்னர் பட்டம்புதூரில் நடைபெற்ற விழாவில் 58 ஆயிரம் பேருக்கு ரூ.417 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
விருதுநகர் மாவட்டத்திற்கு திராவிட மாடல் ஆட்சியில் ஏராளமான திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. கடந்த 3 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள திட்டங்களை ஆய்வு செய்தேன்.
இதில் 1786 கிராமங்களுக்கு ரூ.1387.73 கோடி மதிப்பீட்டில் கூட்டு குடிநீர் திட்டம் விரைவில் செயல் பாட்டுக்கு கொண்டு வரப்படும். ஸ்ரீவில்லிபுத்தூரில் புதிய பஸ் நிலையம் உள்ளிட்ட பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளேன்.
அதேபோல் சமூக நலத்திட்டங்கள் மக்களை எவ்வாறு சென்று சேர்ந்திருக்கிறது என்றும் ஆய்வு செய்தேன். விருதுநகர் மாவட்டத்தில் 95 சதவீதத்திற்கும் மேல் பிளஸ்-2 மாணவர்கள் உயர் கல்வியில் சேர்ந்திருக்கிறார்கள்.
நேற்றைய கள ஆய்வில் பட்டாசு தொழிற்சாலைக்கு சென்றிருந்தேன். அங்கு பணியில் இருந்த தொழிலாளர்களை சந்தித்தபோது பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.
அதன்படி பட்டாசு ஆலையில் ஏற்படும் விபத்தில் உயிரிழக்கும் தொழிலாளர்களுடைய குழந்தைகளின் அனைத்து உயர்கல்வி வரையிலான அனைத்து செலவையும் அரசே ஏற்கும். இதனை மாவட்ட அளவில் முடிவு செய்து வழங்ககூடிய வகையில் கலெக்டரின் கீழ் தனி நிதியம் ஒன்று உருவாக்கப்படும். அதற்கு முதல் கட்ட நிதியாக ரூ.5 கோடியை தமிழக அரசு வழங்கும்.
காரியாபட்டி, திருச்சுழி பகுதிகளில் உள்ள கண்மாய்கள் ரூ.17 கோடி மதிப்பில் மேம்படுத்தப்படும். காரியாபட்டி வட்டத்தில் உள்ள தெற்கு ஆற்றில் ரூ.21 கோடி மதிப்பில் புதிய அணை கட்டப்படும்.
காளிங்கபேரி, வெம்பக்கோட்டை, அனைக்குட்டம், கோல்வார்பட்டி அணைகள் ரூ.23 கோடியே 30 லட்சம் மதிப்பில் சீரமைக்கப்படும். அணைகளின் அருகே ரூ.2 கோடியே 73 லட்சம் மதிப்பில் சுற்றுலா பூங்காக்கள் அமைக்கப்படும்.
அருப்புக்கோட்டை அருகே 400 ஏக்கர் பரப்பில் ரூ.350 கோடி மதிப்பில் புதிய சிப்காட் தொழில் மையம் ஏற்படுத்தப்படும். இதன் மூலம் 10 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
சிவகாசி மாநகராட்சியில் ரூ.15 கோடி மதிப்பில் மாநாட்டு கூட்டரங்கம் அமைக்கப்படும். விருதுநகர் நகராட்சியில் ரூ.24.50 கோடி மதிப்பில் சாலை வசதி, மேம்படுத்தப்படும். சாத்தூரில் ரூ.2 கோடி மதிப்பில் சாலைகள், பூங்காக்கள் அமைக்கப்படும்.
ராஜபாளையம் நகராட்சியில் ரூ.13 கோடி மதிப்பில் மழைநீர் வடிகால் வசதி அமைக்கப்படும். அருப்புக்கோட்டை நகராட்சியில் ரூ.3 கோடியில் மழைநீர் வடிகால் மற்றும் பூங்காக்கள் அமைக்கப்படும்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் கழிவறை, வாகன நிறுத்துமிடம் ஆகியவை ரூ.2.10 கோடி மதிப்பில் ஏற்படுத்தப்படும். இந்த விழாவில் சுமார் 40 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது.
தி.மு.க. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு தமிழ்நாடு முழுவதும் நான் தேர்தல் பரப்புரை செய்தேன். உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற திட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றேன். தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றவுடன் 100 நாட்களில் அந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க தனித்துறையை உருவாக்கினேன். அதன் மூலம் மக்களின் மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அப்போது வந்த மனுக்களில் பெரும்பாலும் வீடு கட்ட வேண்டும். வீடு கட்டுவதற்கு பணம் இல்லை. புறம்போக்கு நிலத்தில் வசித்து வருகிறோம் என அதிகளவில் மனுக்கள் வந்தன.
இதையடுத்து வருவாய் துறைக்கு உத்தரவு பிறப்பித்தேன். அதில் மக்களுக்கு எந்தளவுக்கு இலவச வீட்டு மனை வழங்க முடியுமோ? அந்த அளவிற்கு வழங்க நடவடிக்கை எடுங்கள். தீவிர நடவடிக்கை எடுத்ததின்பேரில் 2021-ம் ஆண்டு திராவிட மாடல் ஆட்சி அமைந்ததில் இருந்து 10 லட்சத்து 3ஆயிரத்து 824 பேருக்கு வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது இது மிகப்பெரிய சாதனை. இன்றைக்கு உங்கள் முகத்தில் உள்ள மகிழ்ச்சி தான் எனக்கு கிடைக்க கூடிய பாராட்டு.
மு.க.ஸ்டாலின் எனும் நான் வீட்டுக்கு விளக்காக இருப்பேன். நாட்டுக்கு தொண்டனாக இருப்பேன். மக்களுக்காக கவலைப்படக் கூடிய முதல்வனாக இருப்பேன். அப்படி தான் செயல்பட்டு வருகிறேன். சில நாட்களுக்கு முன்பு இந்தியளவில் அதிக சக்தி வாய்ந்த தலைவர்களில் எனது பெயரை குறிப்பிட்டிருந்தார்கள். இந்த பெருமையும் புகழும் தமிழக மக்களையே சாரும்.
உங்களுடைய அன்பும் ஆதரவும் தான் ஸ்டாலினின் பலம். தமிழ்நாட்டை உயர்த்த என்னுடைய சக்தியை மீறி உழைப்பேன். இந்த உழைப்பினுடைய பயன்தான் எல்லா புள்ளி விவரங்களிலும் எதிரொலித்து வருகிறது.
முதலில் வந்து விட்டோம் என்று ஒருபோதும் நான் திருப்தியடைவில்லை. என்னை விட என்னை முந்தி செல்வதற்கு இன்னும் வேகமாக பலர் ஓடி வருகிறார்கள். அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைந்தள்ளதா? என்பதை அறிய மாவட்டந்தோறும் கள ஆய்வு நடத்தி வருகிறோம்.
ஆனால் இதைபற்றி எதுவும் அறியாத மக்களை பற்றி கிஞ்சிற்றும் கவலைபடாத எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி. மக்கள் நல திட்டங்களுக்கு மூலதன செலவுகளை அதிகமாக செய்து கலைஞர் பெயரில் தேவையில்லாத திட்டங்களுக்கு நிதியை வீணடித்து வருகிறோம் என உளறியிருக்கிறார். இதை கேட்டால் சிரிப்பு தான் வருகிறது. ஒருவர் பொய் சொல்லலாம். ஆனால் ஏக்கர் கணக்கில் பொய் சொல்ல கூடாது என்ற பேச்சு உள்ளது. பொய் சொல்லலாம். ஆனால் பழனிசாமி அளவிற்கு பொய் சொல்லக்கூடாது என கூறலாம். அந்த அளவிற்கு எடப்பாடி பழனிசாமி புளுகு மூட்டைகளை அவிழ்த்து வருகிறார்.
தமிழ் மொழி, தமிழ் இனம், தமிழ்நாட்டிற்காக 80 ஆண்டுகாலம் ஓயாமல் உழைத்தனர் கலைஞர். மக்கள் திட்டங்களுக்கு அவரது பெயரை வைக்காமல் பதவி சுகத்திற்காக கரப்பான் பூச்சி போல ஊர்ந்து சென்ற உங்களது பெயரையா வைக்க முடியும்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
- 40 ஆயிரத்து 148 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கினார்.
- ரூ.417.21 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.
விருதுநகர் சாத்தூர் சாலையில் உள்ள பட்டம்புதூரில் அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்த கொண்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 40 ஆயிரத்து 148 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கினார்.
மேலும் 16 ஆயிரத்து 852 பேருக்கு மகளிர் சுயஉதவிக்குழு கடன்கள் மற்றும் பல்வேறு துறைகள் சார்பில் மொத்தம் 57 ஆயிரத்து 556 பயனாளிகளுக்கு ரூ.417.21 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.
அப்போது, "விருதுநகருக்கு மருது சகோதரர்கள் போல் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர். ஆகியோர் உள்ளனர். நம் மாநிலத்திறஅகு தமிழ்நாடு என பெயர் சூட்டுவதற்கு உயிரை நீத்தவர் சங்கரலிங்கனார். அண்ணாவை உருவாக்கியது காஞ்சி, கலைஞரை உருவாக்கியது திருவாரூர், காமராஜருக்கு விருதுநகர்."
"என் திருமணத்திற்கு பெருந்தலைவவர் காமராஜர் வந்ததை மறக்கவே முடியாது. காமராஜரின் இறுதிச் சடங்கை ஒரு மகன் போல் இருந்து நடத்தியவர் கலைஞர் கருணாநிதி. காமராஜர் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்தவர் கலைஞர் கருணாநிதி."
"விருதுநகரில் நான் முதல்வன் திட்டத்தால் 92 சதவீதத்திற்கும் அதிகமான மாணவர்கள் உயர்கல்வியில் சேர்ந்துள்ளனர். தமிழ் புதல்வன், புதுமைப் பெண் திட்டங்களால் விருதுநகரில் அதிக அளவில் உயர்கல்வி சேர்க்கை நடைபெற்றுள்ளது," என்று பேசினார்.
- சூலக்கரைமேட்டில் உள்ள அரசு காப்பகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
- விருதுநகர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ராமமூர்த்தி சாலை வரை வாகனப் பேரணி மேற்கொண்டார்.
தமிழக அரசின் நலத் திட்டங்கள் மக்களை சென்று சேர்வதை உறுதி செய்யும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து மாவட்டங்களிலும் கள ஆய்வு மேற்கொள்ள முடிவு செய்தார்.
அதன்படி, 2 நாள் பயணமாக இன்று விருதுநகர் சென்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அங்குள்ள தனியார் பட்டாசு ஆலையில், பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் பட்டாசு தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார்.
இதைதொடர்ந்து, சூலக்கரைமேட்டில் உள்ள அரசு காப்பகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவர் மாணவிகளுடன் கலந்துரையாடினார். மாணவிகளுக்கு பரிசுகள், இனிப்புகள் வழங்கிய மு.க.ஸ்டாலின், காப்பகத்தில் அடிப்படிடை வசதிகள் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார்.
அப்போது, மாணவி ஒருவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அப்பா என்று அழைத்தார். இந்த நெகிழ்ச்சி சம்பவம் குறித்து முதலமைச்சர் தனது எக்ஸ் பக்கத்தில் நிறைவான நாள் என்று குறிப்பிட்டு பகிர்ந்துள்ளார்.
"அப்பா…"♥️நிறைவான நாள்♥️ pic.twitter.com/XQN9xt387Q
— M.K.Stalin (@mkstalin) November 9, 2024
இதையடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுநகர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ராமமூர்த்தி சாலை வரை வாகனப் பேரணி மேற்கொண்டார்.
சாலையின் இருபுறங்களிலும் திரண்டிருந்த மக்கள் முதலமைச்சருக்கு வரவேற்பை அளித்தனர்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து மாவட்டங்களிலும் கள ஆய்வு மேற்கொள்ள முடிவு செய்தார்.
- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் பட்டாசு தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார்.
தமிழக அரசின் நலத் திட்டங்கள் மக்களை சென்று சேர்வதை உறுதி செய்யும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து மாவட்டங்களிலும் கள ஆய்வு மேற்கொள்ள முடிவு செய்தார்.
அதன்படி, 2 நாள் பயணமாக இன்று விருதுநகர் சென்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அங்குள்ள தனியார் பட்டாசு ஆலையில், பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் பட்டாசு தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார்.
மேலும், பல்வேறு நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்துக் கொண்டு வருகிறார்.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது விருதுநகர் பயணம் தொடர்பாக எக்ஸ் தள பக்கத்தில் நெகிழ்ச்சி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், " தென்தமிழ்நாட்டுக்கே உரிய வாஞ்சையுடன் "அண்ணே… அண்ணே…" என்றும் - குலவையிட்டும் வரவேற்ற விருதுநகர் மக்கள்" என்று குறிப்பிட்டிருந்தார்.
தென்தமிழ்நாட்டுக்கே உரிய வாஞ்சையுடன் "அண்ணே… அண்ணே…" என்றும் - குலவையிட்டும் வரவேற்ற விருதுநகர் மக்கள்? pic.twitter.com/awBT71RRon
— M.K.Stalin (@mkstalin) November 9, 2024
மேலும் மற்றொரு பதிவில், "இன்று விருதுநகர் மாவட்ட ஆய்வின்போது, 2 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் பட்டாசுத் தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்களிடம் அவர்களது தேவைகள் குறித்து கலந்துரையாடினேன்" என்றார்.
இன்று விருதுநகர் மாவட்ட ஆய்வின்போது, 2 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் பட்டாசுத் தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்களிடம் அவர்களது தேவைகள் குறித்து கலந்துரையாடினேன்! pic.twitter.com/bmDAoqMcHL
— M.K.Stalin (@mkstalin) November 9, 2024
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தான் பயணம் செய்த வேனில் இருந்து இறங்கி சாலையில் நடந்து சென்றார்.
- ராமமூர்த்தி சாலை வரை சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரோடு-ஷோ செல்கிறார்.
விருதுநகர்:
தமிழக அரசின் நலத் திட்டங்கள் மக்களை சென்று சேர்வதை உறுதி செய்யும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து மாவட்டங்களிலும் கள ஆய்வு மேற்கொள்ள முடிவு செய்தார்.
அதன்படி தனது முதலாவது கள ஆய்வை கடந்த 5-ந்தேதி தெற்கு மண்டலமான கோவையில் நடத்தினார். அதன் தொடர்ச்சியாக இரண்டாவது கள ஆய்வு பணியை விருதுநகரில் மேற்கொள்ள முடிவு செய்தார்.
அதன்படி 2 நாள் பயணமாக சென்னையில் இருந்து இன்று காலை 11.30 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமானம் மூலம் மதுரை வந்தார். அங்கு அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, ஏ.வ.வேலு, மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, கலெக்டர் சங்கீதா, மேயர் இந்திராணி, மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கோ.தளபதி எம்.எல்.ஏ., சேடப்பட்டி மணிமாறன், நிர்வாகிகள் வரவேற்றனர்.
இதையடுத்து காரில் விருதுநகர் புறப்பட்டு சென்ற அவருக்கு மாவட்ட எல்லை மற்றும் பொதுப் பணித்துறை அலுவலகம் முன்பு சுமார் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சாலையில் இருபுறமும் திரண்டு நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர்.
சுமார் இரண்டரை கிலோ மீட்டர் தூரத்திற்கு கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் காத்திருந்தனர். அவர்களை பார்த்ததும் உற்சாகம் அடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தான் பயணம் செய்த வேனில் இருந்து இறங்கி சாலையில் நடந்து சென்றார்.
அப்போது அவருக்கு ஏராளமானோர் கைகுலுக்கினர். பதிலுக்கு மு.க.ஸ்டாலினும் கைகொடுத்து உற்சாகப்படுத்தினார். சிலர் கோரிக்கை மனுக்களையும் அளித்தனர். தொடர்ந்து மக்கள் வெள்ளத்தில் அங்கிருந்து சூலக்கரை பகுதியில் உள்ள அன்னை சத்யா குழந்தைகள் இல்லத்திற்கு சென்றார்.
அங்கு தங்கியுள்ள குழந்தைகளிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாடுகிறார். தொடர்ந்து விருதுநகர் ஆர்.ஆர்.நகர் அருகிலுள்ள கன்னிசேரிபுதூரில் செயல்பட்டு வரும் தனியார் பட்டாசு ஆலைக்கு செல்கிறார்.
அங்கு பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் பட்டாசு தொழிலாளர்களுடன் கலந்துரையாடுகிறார். பட்டாசு தயாரிப்பில் ஏற்படும் விபத்துகள், அதனை எதிர்கொள்ள தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கிறார். மேலும், தொழிலாளர்கள் சந்திக்கும் இன்னல்கள், குறைகளையும் கேட்டறிய உள்ளார்.
இதைத்தொடர்ந்து ஆர்.ஆர்.நகரில் உள்ள ராம்கோ விருந்தினர் மாளிகையில் மதிய உணவு முடிந்ததும், மாலையில் விருதுநகர் புதிய பஸ் நிலையம் பகுதிக்கு வருகிறார். அங்கிருந்து திறந்த காரில் எம்.ஜி.ஆர். சிலை ரவுண்டானா, அருப்புக்கோட்டை ரெயில்வே மேம்பாலம், அல்லம்பட்டி முக்கு ரோடு வழியாக ராமமூர்த்தி சாலை வரை சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரோடு-ஷோ செல்கிறார்.
ஒருசில இடங்களில் காரில் இருந்து இறங்கி நடந்து செல்லவும் திட்டமிட்டுள்ள அவர் பொதுமக்களிடம் மனுக்களையும் பெற்றுக்கொள்கிறார். பின்னர் அதே பகுதியில் உள்ள எஸ்.எஸ்.கே.சரஸ்வதி கிராண்ட் மண்டபத்தில் கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனைக்கூட் டம் நடைபெறுகிறது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசுகிறார்.
விருதுநகர் மாவட்டத்தை பொறுத்தவரை தி.மு.க.வின் நிர்வாக காரணங்களுக்காக வடக்கு மற்றும் தெற்கு மாவட்டமாக செயல்பட்டு வருகிறது. இங்குள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் ஸ்ரீவில்லிபுத்தூர் தவிர மற்ற 6 தொகுதிகளிலும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளாக ம.தி.மு.க., காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களே உள்ளனர்.
தேர்தல் வெற்றிக்கு ஆலோசனை 2026 சட்டமன்ற தேர்தலில் மாவட்டச் செயலாளர்கள் தலைமையில் தி.மு.க. நிர்வாகிகள் தீவிரமாக களப்பணியாற்ற தேவையான ஆலோசனைகளை வழங்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கருத்துவேறுபாடுகளை களைந்து தி.மு.க. அரசு கொண்டு வந்துள்ள மக்கள் நலத்திட்டங்கள் மக்களை சரியாக சென்று சேர்கிறதா என்று அறிந்து அதுபற்றிய விபரங்களை பொதுமக்களிடம் எடுத்துக்கூறி தி.மு.க.வுக்கு அவர்கள் வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் தற்போது முதலே பணிகளை தொடங்கவேண்டும் என்பது தொடர் பாக ஆலோசனைகளை அவர் வழங்க இருக்கிறார்.
கூட்டம் முடிந்ததும் இரவு ராம்கோ விருந்தினர் மாளிகையில் தங்கி ஓய்வெடுக்கிறார்.
- கலித்தொகை பாடல் மூலம் பழந்தமிழர்கள் அணிகலன்களை வடிவமைத்து அணிந்தனர் என்பது புலனாகிறது.
- விலங்குகளை வேட்டையாடப் பயன்படும் கருவிகள் தயாரிப்பின் மூலப்பொருட்களான ஜாஸ்பர், சார்ட் கற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
''சுறா ஏறுஎழுதிய மோதிரம் தொட்டாள்'' எனும் கலித்தொகை பாடல் மூலம் பழந்தமிழர்கள் அணிகலன்களை வடிவமைத்து அணிந்தனர் என்பது புலனாகிறது.
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை- விஜயகரிசல்குளத்தில் நடைபெற்று வரும் மூன்றாம் கட்ட அகழாய்வில், பழமையான அணிகலன் தயாரிப்பு மற்றும் விலங்குகளை வேட்டையாடப் பயன்படும் கருவிகள் தயாரிப்பின் மூலப்பொருட்களான ஜாஸ்பர், சார்ட் கற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இத்தகு சான்றுகள், அக்காலத்தில் வாழ்ந்த தமிழ்ப் பெருங்குடி மக்களின் வடிவமைப்பு கலையை மெய்ப்பிக்கும் விதமாக அமைந்துள்ளன என்று தெரிவித்துள்ளார்.
''சுறா ஏறுஎழுதிய மோதிரம் தொட்டாள்'' எனும் கலித்தொகை பாடல் மூலம் பழந்தமிழர்கள் அணிகலன்களை வடிவமைத்து அணிந்தனர் என்பது புலனாகிறது. விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை- விஜயகரிசல்குளத்தில் நடைபெற்று வரும் மூன்றாம் கட்ட அகழாய்வில், பழமையான அணிகலன் தயாரிப்பு மற்றும் விலங்குகளை… pic.twitter.com/1Au1l2k1ew
— Thangam Thenarasu (@TThenarasu) November 8, 2024
- பணத்தை வாங்கிய பின் ஒரு வாரம் ஆகியும் வேலை வாங்கி தரவில்லை.
- பொன்ஆனந்த், அவரது மனைவி சாந்தி ஆகியோர் மிரட்டல் விடுத்தனர்.
ராஜபாளையம்:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள வேப்பங்குளத்தை சேர்ந்தவர் ஜெயமாலா (வயது 48). இவர் கருத்து வேறுபாடு காரணமாக முதல் கணவரை பிரிந்து செல்வகுமார் என்பவரை 2-வது திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் ஜெயமாலா ராஜபாளையம் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
நான் கடந்த வாரம் கலங்காபுதூரில் உள்ள கோவிலுக்கு சாமி கும்பிட சென்றேன். பின்னர் அங்கிருந்து வீடு திரும்புவதற்காக பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருந்தேன்.
அப்போது கீழராஜகுலராமன் பகுதியை சேர்ந்த பொன்ஆனந்த் (வயது 50), அவரது மனைவி சாந்தி ஆகியோர் காரில் அங்கு வந்தனர். இருவரும் ஊருக்கு செல்ல அரசு பஸ் வர தாமதம் ஆகும். எனவே காரில் ஏறி கொள்ளுங்கள் வீட்டில் இறக்கி விடுகிறோம் என கூறினர்.
இதனை நம்பி நான் அவர்களுடன் சென்றேன். ஆனால் என்னை வீட்டில் இறக்கி விடாமல் அவர்கள் வீட்டிற்கு அழைத்து சென்றனர். அங்கு பொன் ஆனந்த் ரூ.2½ லட்சம் கொடுத்தால் உனக்கு அரசு வேலை வாங்கி தருகிறேன் என ஆசைவார்த்தை கூறினார்.
மறுநாள் தென்காசி ரோட்டில் உள்ள தனியார் வங்கிக்கு என்னை அழைத்து சென்ற பொன் ஆனந்த் எனது தாலி உள்பட 6 பவுன் நகையை அவரது பெயரில் அடகு வைத்து ரூ.2 லட்சம் கடன்பெற்றார்.
மேலும் எனது ஏ.டி.எம். கார்டு மூலம் வங்கி கணக்கில் இருந்த ரூ.55 ஆயிரத்தை எடுத்தார். பணத்தை வாங்கிய பின் ஒரு வாரம் ஆகியும் வேலை வாங்கி தரவில்லை. இதுகுறித்து கேட்டபோது, பொன்ஆனந்த், அவரது மனைவி சாந்தி ஆகியோர் மிரட்டல் விடுத்தனர். எனவே உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத்தர வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் செல்வி விசாரணை நடத்தி வருகிறார். மாவட்ட குற்ற பிரிவிலும் இதுதொடர்பாக புகார் செய்யப்பட்டுள்ளது.
பொன் ஆனந்த் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சின்னம்மா பேரவையில் மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்துள்ளார். பின்னர் அவர் அங்கிருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்ததாக கூறப்படுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்