தமிழ்நாடு

கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று இரவு ஈஸ்டர் பண்டிகை சிறப்பு வழிபாடு

Published On 2024-03-30 07:01 GMT   |   Update On 2024-03-30 07:01 GMT
  • கத்தோலிக்க திருச்சபைகளில் இன்று இரவு 11 மணி முதல் அதிகாலை 2 மணி வரை ஈஸ்டர் பண்டிகை சிறப்பு வழிபாடு நடக்கிறது.
  • ஆலயங்கள் மலர்கள் மற்றும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்படுகிறது.

சென்னை:

கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் முடிந்துவிட்டது. இதையொட்டி இயேசு சிலுவையில் அறையப்பட்ட புனித வெள்ளி தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. 3-வது நாள் அவர் உயிர்த்தெழுவார் என்ற அடிப்படையில் உலகம் முழுவதும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடு நடக்கிறது.

சென்னையில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் ஈஸ்டர் பண்டிகை சிறப்பு வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. கத்தோலிக்க திருச்சபைகளில் இன்று இரவே ஈஸ்டர் பண்டிகை சிறப்பு வழிபாடு தொடங்குகிறது. சென்னையில் உள்ள கத்தோலிக்க திருச்சபைகளில் இன்று இரவு 11 மணி முதல் அதிகாலை 2 மணி வரை ஈஸ்டர் பண்டிகை சிறப்பு வழிபாடு நடக்கிறது. மேலும் சி.எஸ்.ஐ., பெந்தெகொஸ்தே, இ.சி.ஐ., லுத்ரன், மெத்தடிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு திருச்சபைகளில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4 மணி முதல் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. கிறிஸ்தவ ஆலயங்களில் ஆயர்கள் இயேசு உயிர்த்தெழுந்தது குறித்த சிறப்பு செய்தியை வழங்குவார்கள்.

சென்னையில் உள்ள சாந்தோம் பேராலயம், பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி ஆலயம், எழும்பூர் தூய இருதய ஆண்டவர் ஆலயம், பெரம்பூர் லூர்து அன்னை ஆலயம், மாதவரம் புனித அந்தோணியார் ஆலயம், ராதாகிருஷ்ணன் சாலை கதீட்ரல் பேராலயம், மயிலாப்பூர் நல்மேய்ப்பர் ஆலயம், ராயப்பேட்டை வெஸ்லி ஆலயம், சூளை ஆன்ட்ரூஸ் ஆலயம், வேப்பேரி தூய பவுல் ஆலயம், சின்னமலை ஆலயம், அண்ணாநகர் ஆலயம் என சென்னையில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் ஈஸ்டர் பண்டிகை சிறப்பு வழிபாடு நடக்கிறது.

இதையொட்டி ஆலயங்கள் மலர்கள் மற்றும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்படுகிறது. ஈஸ்டர் வழிபாட்டில் கிறிஸ்தவர்கள் புத்தாடை அணிந்து கலந்து கொள்கிறார்கள். வழிபாடு முடிந்ததும் ஒருவருக்கொருவர் ஈஸ்டர் வாழ்த்துகளை பகிர்ந்து கொள்கிறார்கள்.

ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி இன்று இரவு முதல் சென்னையில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது.

ஈஸ்டர் பண்டிகையையொட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், தொழில் அதிபர் வி.ஜி.சந்தோசம் உள்ளிட்ட பலர் ஈஸ்டர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News