தமிழ்நாடு

பெண்களை சாதிக்க வைப்பது கல்வி தான்: முன்னாள் டி.ஜி.பி. சைலேந்திரபாபு

Published On 2023-10-26 08:14 GMT   |   Update On 2023-10-26 09:33 GMT
  • உலகில் அதிசயம் என்பது சாதிக்க நினைக்கும் மனிதர்கள் தான்.
  • வாழ்க்கை என்பது ஒரு போர்க்களம். ஏதாவது ஒரு திறமையை வளர்த்துக்கொண்டால் நாம் பிழைத்துக் கொள்ள முடியும்.

நெல்லை:

பாளையங்கோட்டை ஜான்ஸ் கல்லூரியில் தமிழ்க்கனவு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. கலெக்டர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். இதில் முன்னாள் டி.ஜி.பி. சைலேந்திர பாபு கலந்து கொண்டு தலைமை தாங்குவோம் என்ற தலைப்பில் பேசியதாவது:-

பெண்கள் உயர்கல்வி கற்பது ஒரு காலத்தில் கனவாக இருந்தது. இன்று சமத்துவம், சமூகநீதி கொள்கை அடிப்படையில் பெண்கள் உயர்கல்வி கற்று கல்வி தரத்தில் உயர்ந்து வருகிறார்கள். கல்வி தான் நம்முடைய வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கிறது.

உலகில் அதிசயம் என்பது சாதிக்க நினைக்கும் மனிதர்கள் தான். ஒரு குறிக்கோளுடன் தன்னம்பிக்கை, திட்டமிடுதலுடன் ஒரு மனிதன் வாழ்ந்தால் அதுவே ஒரு அதிசயமாகும். ஒரு கால கட்டத்தில் பெண்கள் கல்வி மேதை என்பது மறுக்கப்பட்டு வந்தது. சுதந்திரம் இருந்தபோதும் அதனை நாம் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தோம். சமத்துவம், சமூகநீதி கொள்கையின் அடிப்படையில் அனைவரும் சமம். நமது முன்னோர்கள் உயர்கல்வி கற்பது என்பது சாத்தியமற்ற நிலையில் இருந்தது. ஏற்றத்தாழ்வு இல்லாத சமூகம் உருவாக்க வேண்டுமென்ற எண்ணத்தில் நம் முன்னோர்கள் வகுத்த பல்வேறு நல்ல திட்டங்கள் மூலம் இன்று நாம் அனைவரும் உயர்கல்வி கற்று வருகிறோம். தற்போதுள்ள பெண்கள் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். படிக்கலாம். வேலை பார்க்கலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

வாழ்க்கை என்பது ஒரு போர்க்களம். ஏதாவது ஒரு திறமையை வளர்த்துக்கொண்டால் நாம் பிழைத்துக் கொள்ள முடியும். கல்வி என்பது மிகப்பெரிய பேராற்றல் மிக்க ஆயுதம் என்றார் நெல்சன் மண்டேலா. கல்வி என்ற பேராயுதத்தை ஏந்தினால் இந்த உலகத்தில் வெற்றி பெறலாம். மாணவர்களாகிய உங்களுக்கு உடல் பலமும் மன பலமும் மிக முக்கியமாகும்.

எனவே, மாணவ, மாணவிகள் ஒரு குறிக்கோளுடன் வாழ்க்கையை வழி நடத்த வேண்டும். எதிர்காலத்தை எதிர்பார்ப்புடன், திட்டமிட்டு, ஒரு கனவு கண்டு, அந்த கனவின் குறிக்கோளை நிறைவேற்றும் வகையில் வாழ வேண்டும். ஒரு மனிதன் உயர்ந்த நிலைக்கு செல்வது உயர்கல்வியே. கல்வி என்பது மாபெரும் ஆயுதம் ஆகும். பெண்களை சாதிக்க வைப்பது கல்வி தான். கல்வி கற்பதின் மூலம் உலகில் தலைசிறந்தவர்களாக தலைமை தாங்கலாம். அதற்கு கல்வி முக்கிய பங்காற்றுகிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News