மணமகளிடம் பத்திரத்தில் கையெழுத்து வாங்கிய மணமகனின் நண்பர்கள்
- நண்பர்கள் ஒன்று சேர்ந்து 100 ரூபாய் பத்திரத்தில் ஒப்பந்தம் ஒன்றை போட்டனர்.
- என்ஜினீயரிங் முடித்து விட்டு, தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
கல்யாணம் முடிந்து விட்டால் புது மாப்பிள்ளைக்கு கால் கட்டு போட்டாச்சு என்பார்கள். அது நூற்றுக் நூறு சதவீதம் உண்மையான வார்த்தைதான். திருமணத்துக்கு முன்பு வரையில் எந்தவித கட்டுப்பாடுமின்றி சுற்றித் திரிந்த பலர் திருமணமான பிறகு வேலை... வீடு... குடும்பம் என நான்கு சுவற்றுக்குள் முடங்கிப் போய் விடுகிறார்கள்.
திருமணத்துக்கு முன்பு ஊர் சுற்றியது போல நண்பர்களுடன் வெளியில் எங்கேயாவது செல்ல வேண்டும் என்றால் மனைவிமார்களிடம் அனுமதி பெறுவதற்குள் பலருக்கு போதும் போதும் என்றாகி விடுகிறது என புலம்பிக் கொண்டிருக்கிறார்கள் பல கணவர்மார்கள். 'என்ன... வெளியூர் டூர் வேண்டி கிடக்கு? பேசாம வீட்ல இருங்க.." என்று மனைவிமார்கள் போடும் சத்தத்தில் சப்தநாடி அடங்கி வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கும் கணவன்மார்கள் பலர் ஒரு நாளைக்காவது நண்பர்களோடு தனியாக வெளியில் செல்ல முடியுமா?" என்கிற ஏக்கத்துடனேயே காலம் கழித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இது போன்ற சிக்கல் எதுவும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக புதிதாக திருமணமான மாப்பிள்ளைக்கு தடை போடக் கூடாது என மணப்பெண்ணிடம் அவரது நண்பர்கள் பத்திரத்தில் எழுதி வாங்கி இருக்கும் ருசிகர சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே தென்பாதி கிராமத்தை சேர்ந்தவர் முத்துக்குமார். இவர் என்ஜினீயரிங் முடித்து விட்டு, தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
இவருக்கும் குறிஞ்சிப்பாடி கிராமத்தை சேர்ந்த பவித்ராவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, தென்பாதி கிராமத்தில் திருமணம் நடைபெற்றது.
விழாவில் பங்கேற்ற நண்பர்கள் முத்துக்குமாருக்கு திருமணம் ஆகிவிட்டது. இனி நாம் அனைவரும் முன்பு போல் சுதந்திரமாக வெளியில் சுற்ற முடியாதே, என நினைத்து அதற்காக அவர்கள் புதுவித யுக்தியை கையாண்டனர்.
அதன்படி, நண்பர்கள் ஒன்று சேர்ந்து 100 ரூபாய் பத்திரத்தில் ஒப்பந்தம் ஒன்றை போட்டனர்.
அதில் "திருமணத்திற்கு பிறகு எப்போதும் போல் நண்பர்களுடன் சேர்ந்து வெளியே செல்வதற்கும், வெளியூர் சுற்றுலா செல்வதற்கும் தடை விதிக்காமல் நண்பர்களுடன் சந்தோஷமாக வெளியில் சுற்றுவதற்கு தடையாக இருக்க மாட்டேன்" என குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனை படித்து பார்த்த மணப்பெண் பவித்ராவும் அதற்கு ஆட்சேபனை தெரிவிக்காமல் புன்சிரிப்புடன் பத்திரத்தில் கையெழுத்திட்டார்.
மேலும், இதுகுறித்து நண்பர்கள் கூறுகையில்:-
பிரபல தமிழ் சினிமாவில் (மைனா) வரும் காட்சிகளை போல் வெளியில் செல்லும் கணவனிடம் எப்ப வருவீங்க... எப்ப வருவீங்க... என கேள்வி எழுப்பக்கூடாது என்பதற்காக தான் மணப் பெண்ணிடம் கையெழுத்து வாங்கியுள்ளோம் என்றனர்.
திருமணம் முடிந்த கையோடு பத்திரத்தில் கையெழுத்தும் வாங்கியதால், இனி நம் நட்பிற்குள் எந்த பிரிவும் ஏற்படாது என நண்பர்கள் உற்சாகம் அடைய, திருமணத்திற்கு வந்திருந்த பழைய கணவன்மார்கள் சிலர் தங்கள் திருமணத்தின் போதும் தனது நண்பர்கள் இது போல் பத்திரத்தில் கையெழுத்து வாங்காமல் விட்டு விட்டார்களே.. என ஏக்கம் அடைந்தனர்.