search icon
என் மலர்tooltip icon

    மயிலாடுதுறை

    • எஞ்சிய 2 படகுகளில் மீன்பிடித்து கொண்டிருந்த 6 மீனவர்கள் நேற்று காலை பூம்புகார் துறைமுகம் வந்தடைந்தனர்.
    • மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் மக்கள் கூட்டம் இன்றி மீன்பிடி துறைமுகம் வெறிச்சோடி காணப்படுகிறது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே பூம்புகார் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து அதே கிராமத்தை சேர்ந்த செல்லத்துரை (வயது 60) என்பவருக்கு சொந்தமான விசைப்படகு மற்றும் பைபர் படகுகளில் 43 மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.

    இவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தபோது எல்லைதாண்டி வந்ததாக கூறி ஒரு விசைப்படகு , பைபர் 4 படகுகளில் மீன்பிடித்து கொண்டிருந்த பூம்புகார் கிராமத்தை சேர்ந்த 21 மீனவர்கள், சின்னமேடு கிராமத்தை சேர்ந்த 3 மீனவர்கள் மற்றும் சந்திரபாடி கிராமத்தை சேர்ந்த 13 பேர் என 37 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இதனை அறிந்த மீனவர்களின் குடும்பத்தினர் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்தனர். இந்நிலையில் எஞ்சிய 2 படகுகளில் மீன்பிடித்து கொண்டிருந்த 6 மீனவர்கள் நேற்று காலை பூம்புகார் துறைமுகம் வந்தடைந்தனர்.

    இந்நிலையில், சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுதலை செய்யக்கோரியும், இலங்கை கடற்படையை கண்டித்தும் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை பூம்புகார் மீனவர்கள் நேற்று முதல் தொடங்கி உள்ளனர். இந்த போராட்டத்தால் 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 500-க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் பூம்புகார் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    தொடர்ந்து, மீனவர்கள் இன்று 2-வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் மக்கள் கூட்டம் இன்றி மீன்பிடி துறைமுகம் வெறிச்சோடி காணப்படுகிறது.

    • நண்பர்கள் ஒன்று சேர்ந்து 100 ரூபாய் பத்திரத்தில் ஒப்பந்தம் ஒன்றை போட்டனர்.
    • என்ஜினீயரிங் முடித்து விட்டு, தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

    கல்யாணம் முடிந்து விட்டால் புது மாப்பிள்ளைக்கு கால் கட்டு போட்டாச்சு என்பார்கள். அது நூற்றுக் நூறு சதவீதம் உண்மையான வார்த்தைதான். திருமணத்துக்கு முன்பு வரையில் எந்தவித கட்டுப்பாடுமின்றி சுற்றித் திரிந்த பலர் திருமணமான பிறகு வேலை... வீடு... குடும்பம் என நான்கு சுவற்றுக்குள் முடங்கிப் போய் விடுகிறார்கள்.

    திருமணத்துக்கு முன்பு ஊர் சுற்றியது போல நண்பர்களுடன் வெளியில் எங்கேயாவது செல்ல வேண்டும் என்றால் மனைவிமார்களிடம் அனுமதி பெறுவதற்குள் பலருக்கு போதும் போதும் என்றாகி விடுகிறது என புலம்பிக் கொண்டிருக்கிறார்கள் பல கணவர்மார்கள். 'என்ன... வெளியூர் டூர் வேண்டி கிடக்கு? பேசாம வீட்ல இருங்க.." என்று மனைவிமார்கள் போடும் சத்தத்தில் சப்தநாடி அடங்கி வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கும் கணவன்மார்கள் பலர் ஒரு நாளைக்காவது நண்பர்களோடு தனியாக வெளியில் செல்ல முடியுமா?" என்கிற ஏக்கத்துடனேயே காலம் கழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

    இது போன்ற சிக்கல் எதுவும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக புதிதாக திருமணமான மாப்பிள்ளைக்கு தடை போடக் கூடாது என மணப்பெண்ணிடம் அவரது நண்பர்கள் பத்திரத்தில் எழுதி வாங்கி இருக்கும் ருசிகர சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

    மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே தென்பாதி கிராமத்தை சேர்ந்தவர் முத்துக்குமார். இவர் என்ஜினீயரிங் முடித்து விட்டு, தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

    இவருக்கும் குறிஞ்சிப்பாடி கிராமத்தை சேர்ந்த பவித்ராவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, தென்பாதி கிராமத்தில் திருமணம் நடைபெற்றது.

    விழாவில் பங்கேற்ற நண்பர்கள் முத்துக்குமாருக்கு திருமணம் ஆகிவிட்டது. இனி நாம் அனைவரும் முன்பு போல் சுதந்திரமாக வெளியில் சுற்ற முடியாதே, என நினைத்து அதற்காக அவர்கள் புதுவித யுக்தியை கையாண்டனர்.

    அதன்படி, நண்பர்கள் ஒன்று சேர்ந்து 100 ரூபாய் பத்திரத்தில் ஒப்பந்தம் ஒன்றை போட்டனர்.

    அதில் "திருமணத்திற்கு பிறகு எப்போதும் போல் நண்பர்களுடன் சேர்ந்து வெளியே செல்வதற்கும், வெளியூர் சுற்றுலா செல்வதற்கும் தடை விதிக்காமல் நண்பர்களுடன் சந்தோஷமாக வெளியில் சுற்றுவதற்கு தடையாக இருக்க மாட்டேன்" என குறிப்பிடப்பட்டிருந்தது.

    இதனை படித்து பார்த்த மணப்பெண் பவித்ராவும் அதற்கு ஆட்சேபனை தெரிவிக்காமல் புன்சிரிப்புடன் பத்திரத்தில் கையெழுத்திட்டார்.

    மேலும், இதுகுறித்து நண்பர்கள் கூறுகையில்:-

    பிரபல தமிழ் சினிமாவில் (மைனா) வரும் காட்சிகளை போல் வெளியில் செல்லும் கணவனிடம் எப்ப வருவீங்க... எப்ப வருவீங்க... என கேள்வி எழுப்பக்கூடாது என்பதற்காக தான் மணப் பெண்ணிடம் கையெழுத்து வாங்கியுள்ளோம் என்றனர்.

    திருமணம் முடிந்த கையோடு பத்திரத்தில் கையெழுத்தும் வாங்கியதால், இனி நம் நட்பிற்குள் எந்த பிரிவும் ஏற்படாது என நண்பர்கள் உற்சாகம் அடைய, திருமணத்திற்கு வந்திருந்த பழைய கணவன்மார்கள் சிலர் தங்கள் திருமணத்தின் போதும் தனது நண்பர்கள் இது போல் பத்திரத்தில் கையெழுத்து வாங்காமல் விட்டு விட்டார்களே.. என ஏக்கம் அடைந்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • திருப்பணிகள் மற்றும் குடமுழுக்கிற்கு முதன்மையான ஆட்சியாக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமைந்துள்ளது.
    • முத்தமிழ் முருகன் மாநாடு இவ்வளவு சிறப்பாக நடைபெறும் என யாரும் எதிர்பார்க்கவில்லை

    தரங்கம்பாடி:

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின் 2000-வது குடமுழுக்கு விழா மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே பரசலூர் கிராமத்தில் உள்ள தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான வீரட்டேஸ்வரர் கோவிலில் நடைபெற்றது.

    இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு இன்றுடன் 2005 கோவில்களுக்கு குடமுழுக்குகள் நிறைவு பெற்றுள்ளது. திருப்பணிகள் மற்றும் குடமுழுக்கிற்கு முதன்மையான ஆட்சியாக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமைந்துள்ளது.

    ஆதீனங்கள் ஒருசேர இந்த ஆட்சியோடு இணக்கமாக இருந்து பக்தி பரவசத்தோடு ஆட்சியை ஆதரிப்பது கடந்த காலங்களில் இல்லை.

    முருகன் மாநாட்டில் இயற்றப்பட்ட தீர்மானங்களை அனைவரும் எப்படி ஆதரிப்பார்கள் என கேள்வி எழுப்பினார்? எதிர்தரப்பினரின் கருத்தையும் நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். அதற்கு எதிர்மறையாக வினையாற்ற இந்து சமய அறநிலையத்துறை தயாராக இல்லை.

    முத்தமிழ் முருகன் மாநாடு இவ்வளவு சிறப்பாக நடைபெறும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. உலகமே பாராட்டும் அளவிற்கு முத்தமிழ் மாநாடு சிறப்பாக நடைபெற்று இருக்கிறது.

    இதுவரை ரூ.6,750 கோடி கோவில் நிலங்கள் மீட்கப்பட்டு இருக்கிறது.

    கோவில் நகைகளை உருக்கி டெபாசிட் செய்வதற்கு பல்வேறு வகையில் எதிர்ப்புகள் வந்தாலும், அந்தத் திட்டம் பயன் தரக்கூடிய திட்டமாகவே உள்ளது. பயன்பாட்டில் இருக்கக்கூடிய பாரம்பரிய நகைகளை தவிர்த்து புதிதாக பக்தர்கள் வழங்கிய நகைகள் மத்திய அரசின் நகை உருக்கு ஆலைக்கு கொண்டு சென்று உருக்கி எந்த கோவிலில் இருந்து எடுத்துச் சென்றோமோ அதே கோவிலில் டெபாசிட் செய்வதாகவும், இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.5 கோடி ரூபாய் வருமானம் கிடைப்பதாகவும் கூறினார். மேலும் ரூ.15 கோடிக்கு வருவாய் வரும் அளவில் கோவில் நகைகள் மதிப்பீடும் செய்யும் பணிகள் தொடர்ந்து நடந்து வருவதாகவும் தெரிவித்தார்.

    • லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
    • பக்தர்கள் பாதயாத்திரையாக வேளாங்கண்ணிக்கு வர தொடங்கி உள்ளனர்.

    சீர்காழி:

    நாகை மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் ஆண்டு பெருவிழா வருகிற 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    விழாவில் தமிழகம் மட்டுமின்றி, வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    பெருவிழாவை யொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வேளாங்கண்ணிக்கு வரத் தொடங்கி உள்ளனர்.

    இவர்கள் வெயில் நேரங்களில் ஓய்வு எடுத்தும், காலை மற்றும் மாலை நேரங்களில் மாதா பாடல்களை பாடியவாறும் நடைபயணம் மேற்கொள்வர்.

    அதன்படி, கடலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில் இருந்து பாதயாத்திரை வரும் பக்தர்கள் மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியை கடந்து பேராலயம் சென்றடைவர்.

    அவ்வாறு, இரவில் சாலையில் செல்லும் பக்தர்கள் பாதுகாப்பாக விபத்தில்லாமல் சாலைகளில் நடந்து செல்லும் வகையில் அவர்களது பைகள், உடைமைகளில் இரவில் ஒளிரும் பிரதிபளிப்பு ஸ்டிக்கர்களை போக்குவரத்து போலீசார் ஓட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    இதன் மூலம் எதிர்பாராத வகையில் ஏற்படும் அசம்பாவிதங்கைளை தடுக்கலாம். இதற்கு மக்கள் பக்தர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 

    • விசாரணை மயிலாடுதுறை அமர்வு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
    • வழக்கை அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 27-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.

    குத்தாலம்:

    மயிலாடுதுறையில் மதமாற்ற தடைச்சட்டத்துக்கு எதிராக 2003-ம் ஆண்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி, மயிலாடுதுறை ரெயிலடி பகுதியில் இருந்து வி.சி.க. தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் பேரணி நடந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக கலவரம் ஏற்பட்டது.

    இது தொடர்பான விசாரணை மயிலாடுதுறை அமர்வு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், இன்று (புதன்கிழமை) இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் தொல்.திருமாவளவன் ஆஜராகவில்லை. இதனால் அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து மாவட்ட அமர்வு நீதிபதி விஜயகுமாரி உத்தரவு பிறப்பித்தார்.

    மேலும், வக்கீல்கள் நடத்தி வரும் வேலைநிறுத்த போராட்டம் காரணமாக இந்த வழக்கு தொடர்பாக வி.சி.க. தரப்பில் வக்கீல்கள் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யவில்லை. இதனால் நீதிபதி பிடிவாரண்டு பிறப்பித்து, இந்த வழக்கை அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 27-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.

    • மாணவர்கள் 83 நிமிடங்களில் 83 அடி நீளம் கொண்ட ஏவுகணை வடிவில் நின்று உருவாக்கி மரியாதை செய்தனர்.
    • மாணவர்கள் உருவாக்கிய ஏவுகணையை பள்ளி நிர்வாகிகள் பார்வையிட்டு வாழ்த்தினர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவிலில் முன்னாள் குடியரசு தலைவர் விஞ்ஞானி அப்துல் கலாம் 9-ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

    இதனை முன்னிட்டு அப்துல் கலாமை நினைவு கூரும் விதமாக வைத்தீஸ்வரன் கோவில் முத்துராஜம் பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் 210 மாணவ-மாணவிகள் அப்துல் கலாமின் உருவப்படத்தினை தனித்தனியே ஏ4 பேப்பரில் வரைந்து, வண்ணமிட்டு அவற்றை இணைத்து 83 நிமிடங்களில் 83 அடி நீளம் கொண்ட ஏவுகணை வடிவில் நின்று உருவாக்கி மரியாதை செய்தனர்.

     

    83 அடி நீளத்தில் மாணவர்கள் ஏவுகணை வடிவில் நின்று அப்துல் கலாமுக்கு மரியாதை செலுத்திய காட்சி.

    83 அடி நீளத்தில் மாணவர்கள் ஏவுகணை வடிவில் நின்று அப்துல் கலாமுக்கு மரியாதை செலுத்திய காட்சி.

    இதனை பள்ளியின் தாளாளர் சிவசங்கர் தலைமையில் நிர்வாகிகள் கீர்த்திமதி மனோஜ் நிர்மல், மதன், வரலட்சுமி தேவேந்திரன் ஆகியோர் மாணவர்கள் வரைந்து உருவாக்கிய 83 அடி நீளம் கொண்ட அப்துல் கலாம் ஏவுகணையை பார்வையிட்டு, வாழ்த்தினர். இதில் பள்ளி முதல்வர் சீனிவாசன் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    • அனுமதியின்றி சவுடு மண் எடுத்து கொண்டிருந்த நபர்களை சுற்றி வளைத்தனர்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து இதில் தொடர்புடைய மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம், வைத்தீஸ்வரன் கோவில் அருகே நத்தம் பகுதியில் அனுமதியின்றி சவுடு மண் எடுப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மீனாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மீனா மற்றும் போலீசார் நத்தம் பகுதிக்கு நள்ளிரவில் ஆய்வுக்கு சென்றனர்.

    அப்போது அங்கு அனுமதியின்றி சவுடு மண் எடுத்து கொண்டிருந்த நபர்களை சுற்றி வளைத்தனர். பின்னர் அவர்களிடம் விசாரித்ததில், அந்த இடம் நத்தம் பகுதியை சேர்ந்த ஊராட்சி தலைவரின் கணவர் செந்தில்குமார் என்பவருக்குரியது என்பதும், அதில் செந்தில்குமார் அரசு அனுமதி இன்றி மண் எடுத்துள்ளதும் தெரிய வந்தது.



    இதனை அடுத்து போலீஸ் சூப்பிரண்டு மீனா உத்தரவின்படி, செந்தில் குமார் மற்றும் ஆலவெளி பகுதியை சேர்ந்த டிராக்டர் டிரைவர் கார்த்திக், கதிராமங்கலம் பகுதியை சேர்ந்த நாகராஜன் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடம் இருந்து 3 டிராக்டர்கள், ஒரு ஹிட்டாச்சி எந்திரம் 2 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வைத்தீஸ்வரன்கோவில் போலீசார் வழக்குபதிவு செய்து இதில் தொடர்புடைய மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.

    • பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • சீர்காழி-வடரங்கம் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே நிம்மேலி கிராமத்தில் இரவில் மது போதையில் கடை மற்றும் கடைகளின் வாசல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விற்பனை ஸ்டால்கள், தெரு மின்விளக்குக்குகள் ஆகியவற்றை சேதப்படுத்தியதோடு வீடுகள் மீது கற்களையும் தூக்கி எறிந்து மர்ம நபர்கள் அட்டகாசம் செய்துள்ளனர். மேலும் சிமெண்ட் கடை ஒன்றின் பெயர் பலகையை கிழித்து வெளியில் வைக்கப்பட்டிருந்த ஸ்டாலை அடித்து சேதப்படுத்தி உள்ளனர்.

    இந்த நிலையில் தொடர்ச்சியாக இது போன்ற குற்ற சம்பவங்கள் நடைபெறுவதாக கூறி ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் இன்று திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்து அங்கு வந்த சீர்காழி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்களிடம் தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வரும் நபர்களை குறிப்பிட்டு அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

    உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று போலீசார் தெரிவித்ததின் அடிப்படையில் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் சீர்காழி-வடரங்கம் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • சம்பவம் தொடர்பாக மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் ஆரோக்கியராஜ் பெரம்பூர் போலீசில் புகார் அளித்தார்.
    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மீனா காவலர் திருநாவுக்கரசை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே பெரம்பூர் காவல் நிலையத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு முதல் நிலைக்காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள போலீஸ் குடியிருப்பில் தங்கியுள்ளார்.

    இந்நிலையில் சம்பவதன்று அதே பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவர் ஆடு மேய்க்க வந்துள்ளார். அந்த சிறுமிக்கு, திருநாவுக்கரசு குளிர்பானத்தில் மதுபானம் கலந்து கொடுத்து அவரை மயக்கி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

    இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் ஆரோக்கியராஜ் பெரம்பூர் போலீசில் புகார் அளித்தார்.

    இது குறித்த புகாரின் பேரில் பெரம்பூர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸ்காரர் திருநாவுக்கரசை கைது செய்து மயிலாடுதுறை கோர்ட்டில் ஆஜர்படுத்தி நாகை கிளைச் சிறையில் அடைத்தனர்.

    இதைத்தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மீனா காவலர் திருநாவுக்கரசை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    இவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் போலீஸ்காரர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • நீரை பயன்படுத்த முடியாமல் மக்கள் அவதியடைந்து வந்தனர்.
    • சீர்காழி- திருமுல்லைவாசல் சாலையில் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருமுல்லைவாசல் ஊராட்சிக்கு உட்பட்ட வழுதலைக்குடி கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இந்நிலையில் இந்த பகுதியில் நிலத்தடி நீர் உப்பு நீராக மாறியதால் திருமுல்லைவாசல் ஊராட்சியில் இருந்து கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்த நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக சீரான முறையில் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. வருகின்ற குடிநீரும் அழுக்காக நிறம் மாறி வந்தது. இதனால் அந்த நீரை பயன்படுத்த முடியாமல் மக்கள் அவதியடைந்து வந்தனர்.

    இது குறித்து சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரம் அடைந்த பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் இன்று காலை வழுதலைக்குடி கிராமத்தில் காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அறிந்து வந்த சீர்காழி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டது. கொள்ளிடம் வட்டார வளர்ச்சி அலுவலர் வந்து சுத்தமான குடிநீர் விநியோகம் செய்யப்படும் என உறுதி அளித்தால் மட்டுமே மறியலை கைவிடுவதாக பெண்கள் கூறினர். தொடர்ந்து சாலை மறியல் நடந்து வருகிறது.

    இந்த போராட்டத்தால் சீர்காழி- திருமுல்லைவாசல் சாலையில் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • முதல் முறையாக சைக்கிள் கண்டுபிடிக்கும் பொழுது ஒரு சக்கரம் பொருத்தி சைக்கிள் தயாரிக்கப்பட்டது.
    • ஸ்ரீதரன் என்ற முதியவர் ஒருசக்கர சைக்கிள் வாகனத்தை தானே வடிவமைப்பு ஒட்டி வருகிறார்.

    ஆரம்பக் காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஒற்றை சக்கர சைக்கிளை ஓட்டி அசத்தும் முதியவரை கண்டு பொதுமக்கள் ஆச்சரியப்பட்டனர்.

    மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் பகுதியில் காப்பகத்தில் வசிக்கும் ஒரு ஸ்ரீதரன் என்ற முதியவர் ஒருசக்கர சைக்கிள் வாகனத்தை தானே வடிவமைப்பு ஒட்டி வருகிறார்.

    தினந்தோறும் காலை மற்றும் மாலை நேரத்தில் முக்கிய சாலைகளில் அந்த சக்கர சைக்கிளை அவர் ஓட்டி வரும் நிலையில் அதனை பலரும் வியந்து பார்த்து ஆச்சரியத்துடன் பாராட்டி வருகின்றனர்.

    வயது மூப்பிலும் தன்னால் ஒரு சக்கர சைக்கிளை ஓட்ட முடிவது மற்றவர்களுக்கு முன் உதாரணமாக திகழ்வதாகவும் ஆரம்ப கால பாரம்பரியத்தை நினைவு கூறும் வகையிலும் உள்ளதாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

    முதல் முறையாக சைக்கிள் கண்டுபிடிக்கும் பொழுது ஒரு சக்கரம் பொருத்தி சைக்கிள் தயாரிக்கப்பட்டது. ஆனால் ஒரு சக்கர சைக்கிள் என்பது அனைவராலும் பயன்படுத்த முடியாத நிலையில் பின்பு படிப்படியாக மற்றொரு சிறிய சக்கரம் பொருத்தியும் பின்பு இரு சக்கரமாக சைக்கிள் வடிவமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • இன்று காலை மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு ஒரு மர்ம போன் வந்தது.
    • கோபுரத்தின் உள்புறம், வெளிப்புறம் பகுதிகளில் சோதனை கருவிகள் மூலம் சோதனையில் ஈடுபட்டனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் காந்திஜி சாலை - பட்டமங்கலம் சாலை சந்திப்பில் மணிக்கூண்டு கோபுரம் அமைந்து உள்ளது. இந்த மணிகூண்டு கோபுரம் மயிலாடுதுறையின் பழமையும் நினைவு கோபுர தூணாகவும் இருந்து வருகிறது.

    இந்நிலையில் இன்று காலை மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு ஒரு மர்ம போன் வந்தது.

    அதில் பேசிய மர்மநபர் மயிலாடுதுறை மணிக்கூண்டு கோபுரத்தில் வெடிகுண்டுகள் வைத்து இருப்பதாக கூறினார்.

    இதைத் தொடர்ந்து மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரியா தலைமையில் நாகை மாவட்ட வெடிகுண்டு நிபுணர்கள் மணிக்கூண்டு கோபுரத்திற்கு வந்து சோதனையில் ஈடுபட்டனர்.

    அவர்கள் கோபுரத்தின் உள்புறம், வெளிப்புறம் பகுதிகளில் சோதனை கருவிகள் மூலம் சோதனையில் ஈடுபட்டனர். சோதனையில் முடிவில் எதுவும் சிக்கவில்லை. இதனால் வெடிகுண்டு புரளி என தெரிய வந்தது.

    வெடிகுண்டு உள்ளதாக புரளியை பரப்பியவர் யார்? என போலீசார் விசாரித்து தேடி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் மணிக்கூண்டு பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    ×