ஜெயலலிதா மரணம்: சிபிஐ விசாரணை கோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்
- ஆறுமுகசாமி ஆணையம் தாக்கல் செய்த அறிக்கையில் சசிகலா உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்த பரிந்துரை
- மாநில காவல்துறையை நியமிப்பது நியாயமான விசாரணைக்கு வழிவகுக்காது என மனுதாரர் கூறி உள்ளார்.
சென்னை:
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் கடந்த 2016-ம் ஆண்டு மரணமடைந்தார். ஜெயலலிதாவின் மரணமும் அதற்கு முன்பு அவருக்கு 75 நாட்கள் அளிக்கப்பட்ட சிகிச்சைகளும் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியதை அடுத்து, ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுக சாமி தலைமையில் குழு அமைத்து கடந்த 2017-ம் ஆண்டு தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.
ஐந்து ஆண்டுகள் விசாரணைக்கு பின், ஆறுமுகசாமி ஆணையம் தாக்கல் செய்த அறிக்கையில், சசிகலா, டாக்டர். கே.எஸ்.சிவகுமார், அப்போதைய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோரிடம் விசாரணை நடத்த வேண்டும் என பரிந்துரைத்தது.
இந்நிலையில், ஆறுமுகசாமி விசாரணை ஆணைய அறிக்கையின் அடிப்படையில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த சிபிஐ-க்கு உத்தரவிடக் கோரி சென்னை ஐகோர்ட்டில் ஆர்.ஆர்.கோபால்ஜி என்பவர் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். அந்த மனுவில், ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சையில் ரகசியம் இருப்பதாகவும், வெளிப்படைத்தன்மை பின்பற்றப்படவில்லை எனவும் ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் கூறியுள்ளதைச் சுட்டிக்காட்டி, முழுமையாக நியாயமாக விசாரணை நடத்த வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக அரசின் உயரதிகாரிகள், அமைச்சர்கள் சம்பந்தப்பட்டுள்ளதால், மாநில காவல்துறையை விசாரிக்க நியமிப்பது நியாயமான விசாரணைக்கு வழிவகுக்காமல், உண்மை நீர்த்துப்போகும் என்பதால் சிபிஐ விசாரிக்க வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி கிருஷ்ணகுமார் அமர்வு, இது தொடர்பாக தமிழக அரசு மற்றும் சிபிஐ-க்கு மனு அளிக்க வேண்டும் என்றும், மனு அளிக்காமல் தாக்கல் செய்யபட்ட இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல எனவும் தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.