செங்கல்பட்டு கொளவாய் ஏரி சுற்றுலா தலமாக மாறுகிறது
- கொளவாய் ஏரியை ஆழப்படுத்தி கரைகளை சீரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
- வருகிற 2025-ம் ஆண்டின் மத்தியில் கொளவாய் ஏரி சுற்றுலா தலமாக காட்சி அளிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு ரெயில் நிலையம் அருகே கொளவாய் ஏரி உள்ளது. இந்த ஏரி 2,179 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து கடல்போல் காட்சி அளிக்கிறது. இந்த ஏரியில் எப்போதும் தண்ணீர் நிரம்பி இருக்கும்.
இந்த நிலையில் கொளவாய் ஏரியை மேலும் சீரமைத்து சுற்றுலாத் தலமாக மாற்ற நீர்வளத்துறையினர் திட்டமிட்டு உள்ளனர்.
ஏரியின் நடுவில் செயற்கை தீவு, படகு சவாரி, பூங்கா, உணவு விடுதிகள் மற்றும் பொழுது போக்கு அம்சத்துடன் சிறந்த சுற்றுலா தலமாக மாற்றும் பணி ரூ.60 கோடி மதிப்பில் தொடங்க இருக்கிறது.
கொளவாய் ஏரி சுற்றுலா தலமாக மாறும்போது சென்னை புறநகர் பகுதியில் உள்ளவர்களுக்கு சிறந்த பொழுது போக்கு மையமாக அது மாறும்.
ஏற்கனவே கொளவாய் ஏரியை ஆழப்படுத்தி கரைகளை சீரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதன்பின்னர் சுற்றுலா தலமாக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று தெரிகிறது. வருகிற 2025-ம் ஆண்டின் மத்தியில் கொளவாய் ஏரி சுற்றுலா தலமாக காட்சி அளிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இதுகுறித்து அதிகாரிகளில் ஒருவர் கூறும்போது, கொளவாய் ஏரியை ஆழப்படுத்தி கரைகளை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.
ஏரியின் கொள்ளளவை 476 மில்லியன் கன அடியில் இருந்து 650 மில்லியன் கன அடியாக அதிகரிக்க உள்ளோம். மேலும் கொளவாய் ஏரியை சுற்றுலா தலமாக்கும் திட்டம் உள்ளது. இங்கு படகு சவாரி பொழுது போக்கு மையம் அமையும் என்றார்.