ரூ.40 லட்சம் மின் கட்டண பாக்கியால் இருளில் மூழ்கியுள்ள பாம்பன் பாலம்
- பாலத்தில் எரியும் மின் விளக்குகளுக்கு தேசிய நெடுஞ்சாலையினர் மின் கட்டணம் செலுத்தி வந்தனர்.
- மின்வாரிய அதிகாரிகள் மின் கட்டணத்தை செலுத்த தேசிய நெடுஞ்சாலைத் துறைக்கு தொடர்ந்து கடிதம் அனுப்பி வருகின்றனர்.
ராமேசுவரம்:
ராமநாதபுரம் மாவட்டத்தில் மண்டபம்-ராமேசுவரம் தீவுப்பகுதியை இணைக்கும் வகையில் 2.3 கிலோ மீட்டர் தொலைவுக்கு கடலின் மேல் பகுதியில் 1914 ஆண்டு கப்பல்கள் வந்து செல்லும் வகையில் ரெயில்வே பாலம் அமைக்கப்பட்டது. ராமேசுவரம் வருகை தரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ரெயில் பயணத்தை மட்டுமே நம்பி பயணித்து வந்தனர்.
இதன் பின்னர் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் கடந்த 1988 ஆம் ஆண்டு கப்பல்கள் பேருந்து பாலம் கீழ் பகுதியில் தடையின்றி கடந்து செல்லும் வகையில் பிரமாண்டமாக பாலம் அமைக்கப்பட்டது. இந்த பேருந்து பாலம் தேசிய நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. பேருந்து பாலத்தின் அழகை ரசிக்கும் வகையில் 181 மின் கம்பங்கள் அமைக்கப்பட்டு அனைத்து கம்பத்திலும் அதிக ஒளித்திறன் கொண்ட விளக்குகள் பொருத்தப்பட்டது. ராமேசுவரத்திற்கு வாகனங்களில் வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் பாலத்தில் அமைக்கப்பட்ட மின் விளக்குகளின் அழகை தொலைவில் இருந்து பார்த்து ரசித்தனர்.
இந்நிலையில் பாலத்தில் வழியாக ராமேசுவரம் செல்லும் வாகனங்களுக்கான சுங்கக் கட்டணம் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் மண்டபம் தோணித் துறை பகுதியில் தடுப்பு அமைத்து வசூல் செய்யப்பட் டது. இதன் பின்னர் அந்த உரிமை தனியாருக்கு வழங்கப்பட்டது. மேலும் பாலத்தில் எரியும் மின் விளக்குகளுக்கு தேசிய நெடுஞ்சாலையினர் மின் கட்டணம் செலுத்தி வந்தனர்.
இதற்கிடையே தேசிய நெடுஞ்சாலையில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் திட்டங்களுக்கு மட்டுமே சுங்கக் கட்டணம் வசூல் செய்ய வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. இதன் காரணமாக தோணித்துறையில் இயங்கி வந்த சுங்க கட்டணம் வசூல் மையம் 2017-ல் அகற்றப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, பாம்பன் பேருந்து பாலத்தின் பரமரிப்பு பணியில் தொய்வு ஏற்பட்டது. மேலும் உயர்கோபுர விளக்கு உள்ளிட்ட அனைத்தும் சேதமடைந்த நிலையில் நெடுஞ்சாலைத் துறை சார்பில் மீண்டும் புதிய கம்பங்கள் மாற்றப்பட்டு எல்.இ.டி. மின் விளக்குகள் பொருத்தப்பட்டது. ஆனால் கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து மின் கட்டணம் செலுத்தத்தப் படவில்லை.
தற்போது வரையில் ரூ.40 லட்சம் மின் கட்டண பாக்கி வைக்கப்பட்டுள்ளது. இதனால் பேருந்து பாலத்தில் ஒரு நாள் கூட 181 விளக்குகளும் எரிந்தது கிடையாது. பெரும்பாலான நேரங்களில் பாலம் முழுமையாக இருளில் தான் காணப்படும். மின்வாரிய அதிகாரிகள் மின் கட்டணத்தை செலுத்த தேசிய நெடுஞ்சாலைத் துறைக்கு தொடர்ந்து கடிதம் அனுப்பி வருகின்றனர்.
அதே வேளையில் மின் கட்டணம் செலுத்தும் அளவிற்கு பாம்பன் ஊராட் சியில் பணம் கட்ட நிதி இல்லை என ஊராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. ராமேசுவரம் நகராட்சி தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச் சாவடி அமைத்து அனைத்து வானகங்களுக்கும் ரூ.100 முதல் ரூ.150 வரை வசூல் செய்கிறது. இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.4 கோடி வரை வசூல் செய்து வருகின்றனர். பாம்பன் பேருந்து பாலத்தின் முழு பயனும் ராமேசுவரம் நகராட்சிக்கு மட்டுமே கிடைப்பதால் மின் கட்டணத்தை ராமேசுவரம் நகராட்சியே செலுத்த வேண்டும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
பாம்பன் பேருந்து பாலத்திற்கு மின் கட்டணம் செலுத்துவது, மின்பாக்கியை செலுத்துவது குறித்து மாவட்ட கலெக்டர் தலைமையில் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் மற்றும் நகராட்சி ஆணையர் உள்ளிட்டவர்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். பாம்பன் பேருந்து பாலத்தின் அனைத்து மின்விளக்கும் எரிவதற்கான நடவடிக்கையை காலதாமதம் இன்றி எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.