'லியோ'- திரைத்துறையை முடக்குகிறதா தி.மு.க. அரசு? : அமைச்சர் ரகுபதி பதில்
- திரையுலகம் எங்களுடைய நட்பு உலகம்.
- திரைத்துறையை முடக்க இந்த அரசு எந்த முயற்சியையும் செய்யவில்லை
சென்னை:
லியோ சிறப்பு காட்சி தொடர்பாக நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு அமைச்சர் ரகுபதி பதில் அளித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-
கேள்வி:- லியோ படம் தொடர்பாக அரசியல் நடப்பதாக சொல்கிறார்கள். ஒருசில ஆளும் கட்சி சார்ந்த தயாரிப்பு நிறுவனம் கேட்டால் சிறப்பு காட்சி உடனே கொடுக்கும் வாய்ப்பு இருப்பதாக சொல்கிறார்களே?
பதில்:- எங்களை பொறுத்தவரை 6 காட்சி சிறப்பு காட்சி வேறு. 5 காட்சி சிறப்பு காட்சிகள் என்பது வேறு. எனவே 6 சிறப்பு காட்சி கொடுக்கிற போதுதான் காலையில் 4 மணிக்கு, 5 மணிக்கு என்பது போன்ற பிரச்சனை வருகிறது.
5 காட்சிகள் என்பது 9 மணியில் இருந்து 1.30 மணிக்குள் முடித்து விடலாம். அதோடு கூடுதல் காட்சிகள் கேட்கும் போது தான் அதை எப்படி கொடுப்பது என்பது நிர்ணயிக்கப்படுகிறது.
கேள்வி:-காலை 9 மணி காட்சியை முன் கூட்டியே கேட்கிறார்களே?
பதில்:-ரசிகர் மன்றம் என்று சொல்லி கேட்கிற போது எத்தனை மணி என்றாலும் அவர்களது ரசிகர்கள்தான் பார்க்க போகிறார்கள்.
எங்களை பொருத்தவரை அரசாங்கம் எடுக்கிற முடிவுதான். நாங்கள் என்றைக்குமே சினிமாவில் எந்தவிதமான தடைகளும் போடுவதில்லை.
திரையுலகம் எங்களுடைய நட்பு உலகம். திரையுலகத்தோடு நாங்கள் நெருங்கிய நட்பாகத்தான் இருப்போமே தவிர அவர்களது விரோதத்தை நாங்கள் சம்பாதித்து கொள்ள எங்கள் தலைவர் முதலமைச்சர் விரும்ப மாட்டார்.
கேள்வி:- தி.மு.க. அரசு திரைத்துறையை முடக்க பார்ப்பதாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ ஒரு குற்றச்சாட்டை வைத்துள்ளாரே?
பதில்:- அவர்கள் அன்றைக்கு திரையுலகை என்ன பாடுபடுத்தினார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். போகிற போக்கில் அவர் பேசுகிறார்.
திரைத்துறையை முடக்க இந்த அரசு எந்த முயற்சியையும் செய்யவில்லை. அவர்களை ஊக்கப்படுத்தி கொண்டுதான் இருக்கிறோம். நாங்கள் நன்றாக உதவி செய்து கொண்டுதான் இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.