பெட்ரோல், டீசல் விலை குறைப்பு- மத்திய அரசுக்கு ஜி.கே.வாசன் பாராட்டு
- பெட்ரோல், டீசலைப் பயன்படுத்தும் விவசாயிகள் உள்ளிட்ட சாமானிய மக்கள் பணத்தைச் சேமிக்கவும் உதவும்.
- பெட்ரோல், டீசல் விலை குறைப்பானது நாட்டு மக்களின் நலன் கருதி எடுக்கப்பட்ட நல்ல முடிவாகும்.
சென்னை:
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
மத்திய அரசு, நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையில் லிட்டருக்கு 2 ரூபாயைக் குறைத்து அறிவிப்பு வெளியிட்டிருப்பது பாராட்டுக்குரியது. பெட்ரோல், டீசல் விலை குறைப்பானது லிட்டருக்கு 2 ரூபாய் என்றாலும் அது சாதாரண மக்கள் மீதுள்ள பணச்சுமையைக் குறைக்க உதவும். அது மட்டுமல்ல வாகனங்களுக்கு பெட்ரோல், டீசலைப் பயன்படுத்தும் விவசாயிகள் உள்ளிட்ட சாமானிய மக்கள் பணத்தைச் சேமிக்கவும் உதவும். குறிப்பாக நாடு முழுவதும் எவ்வித பாகுபாடின்றி பெட்ரோல், டீசல் விலை குறைப்பானது நாட்டு மக்களின் நலன் கருதி எடுக்கப்பட்ட நல்ல முடிவாகும். மத்திய பா.ஜ.க அரசு தொடர்ந்து நாட்டு மக்கள் மீது அக்கறை கொண்ட அரசாக செயல்படுவதை நிரூபிக்கும் வகையில் பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்திருப்பதால் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் மத்திய அரசை பாராட்டி, வாழ்த்தி, நன்றி கூறுகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.