உதயநிதி மகன் இன்பநிதி வந்தாலும் ஆதரிப்போம்- அமைச்சர் கே.என்.நேரு பேச்சு
- சேலம் கோட்டை மைதானத்தில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடந்தது.
- தி.மு.க.வில் வாரிசு அரசியல் என்று எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்து வருகிறார்.
சேலம்:
சேலம் கோட்டை மைதானத்தில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடந்தது. சேலம் மத்திய மாவட்ட தி.மு.க செயலாளர் ராஜேந்திரன் எம்.எல்.ஏ தலைமை வகித்தார்.
கூட்டத்தில் தி.மு.க முதன்மைச் செயலாளரும் அமைச்சருமான கே.என்.நேரு பேசியதாவது:-
மு.க.ஸ்டாலினை கட்சியின் செயல் தலைவராக, முதல்-அமைச்சராக முன்மொழிந்த வர் பேராசிரியர் அன்பழகன். மறைந்த ஜெயலலிதாவிற்காக அ.தி.மு.க.வினர் ஒரு இரங்கல் கூட்டம் கூட நடத்தாத நிலையில், பேராசிரியருக்காக 100 இடங்களில் நூற்றாண்டு பொதுக் கூட்டங்களை நடத்தி தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தனது அன்பை வெளிப்படுத்தி உள்ளார்.
அனைவரையும் சமமாக மதிக்கக்கூடிய பேராசிரியர் அன்பழகன் நமக்கு முன்னோடியாக விளங்குகிறார்.
தி.மு.க.வில் வாரிசு அரசியல் என்று எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்து வருகிறார். இது வாரிசு அரசியல் அல்ல. கலைஞர் கருணாநிதியின் குடும்பத்திற்கும் தி.மு.க.வினர் எப்போதும் நன்றி விசுவாசமாக இருப்போம். தி.மு.க.,வைக் கட்டிக்காத்து எங்களை உருவாக்கிய தலைவர் குடும்பத்துக்கும் தலைவருக்கும் என்றும் நேர்மையோடு அவர்களோடு இருந்து பாடுபடுவோம்.
அதன் அடிப்படையில் உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. உதயநிதி மட்டுமல்ல, அவரது மகன் வந்தாலும் ஆதரிப்போம். வாழ்க என்று சொல்வோம். நன்றியோடு இருப்பவர்கள் தி.மு.க.வினர். எங்களை வாரிசு அரசியல் என்று சொல்லி மிரட்ட முடியாது.
முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சேலம் அ.தி.மு.க கோட்டை என்று பேசி வருகிறார். சேலம் இனி எப்போதும் தளபதியின் கோட்டையாக இருக்கும். பல வழக்குகள் கொண்ட எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டவர்களை முதல்-அமைச்சர் கைது செய்யாமல் உள்ளார். இதேபோன்று தொடர்ந்து அவதூறாக பேசி கைது செய்ய வேண்டிய நிலைக்கு கொண்டு வந்து விடாதீர்கள்.
தி.மு.க ஆட்சியில் முதல்-அமைச்சர் பல்வேறு சாதனைகளை செய்து வருகிறார். விரைவில் சேலத்திற்கு வந்து பல திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார். அனைத்து சமுதாய மக்களுக்கும் வாய்ப்பு அளிக்கும் இயக்கம் தி.மு.க. நிதி சுமையை ஏற்றி வைத்த அ.தி.மு.க.விற்கு சொத்து வரி, மின் கட்டணம் உயர்வு பற்றி பேச தகுதியில்லை.
கடந்த ஆட்சியில் 110 விதியின் கீழ் 537 திட்டங்களை அறிவித்து 143 மட்டும் அரசாணை வெளியிட்டனர். தி.மு.க கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மட்டும் 28 திட்டங்களை நிறைவேற்றி உள்ளது. வரும் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று சேலத்தை தி.மு.க.வின் கோட்டையாக மாற்றுவோம். இதற்காக தீவிரமாக பணியாற்றுவோம் என்று பேராசிரியர் நூற்றாண்டு விழாவில் சபதம் ஏற்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.