தமிழ்நாடு

தஞ்சை ராஹத் டிரான்ஸ்போர்ட் மோசடி வழக்கு: பிளக்ஸ் நிறுவன உரிமையாளர் கைது

Published On 2023-12-07 09:26 GMT   |   Update On 2023-12-07 09:26 GMT
  • தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் பாதிக்கப்பட்டவர்களால் புகார் அளிக்கப்பட்டது.
  • வழக்கில் 6,131 பேரிடம், சுமார் ரூ.410 கோடி வரை மோசடி செய்தது தெரிய வந்தது.

தஞ்சாவூர்:

தஞ்சை ரஹ்மான் நகரை சேர்ந்தவர் கமாலுதீன். இவர் ராஹத் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தை நடத்தி வந்தார். இவர் தனது நிறுவனத்தில் முதலீடு செய்தால் மாதம் வரும் லாபத்தில் பங்கு தருவதாக கூறியுள்ளார்.

இதை நம்பி இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருப்பவர்கள் பலரும் கோடிக்கணக்கான ரூபாய் வரை முதலீடு செய்தனர். இதில் முதலீடு செய்தவர்களுக்கு கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை பணம் வழங்கப்பட்டது. இந்நிலையில் கமாலுதீன் இறந்த பிறகு அவரது மனைவி ரஹானா பேகம், கமாலுதீன் சகோதரர் அப்துல் கனி ஆகியோரிடம் முதலீட்டாளர்கள் பணத்தை கேட்டுள்ளனர். ஆனால் அவர்களுக்கு பணம் வழங்கப்படவில்லை. இது தொடர்பாக தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் பாதிக்கப்பட்டவர்களால் புகார் அளிக்கப்பட்டது.

பின்னர் இந்த வழக்கு திருச்சி மாவட்ட பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் 6,131 பேரிடம், சுமார் ரூ.410 கோடி வரை மோசடி செய்தது தெரிய வந்தது. இந்த மோசடி வழக்கில் கமாலுதீன் சகோதரர் அப்துல் கனி, கமாலுதீன் மனைவி ரஹானா பேகம், மகன் அப்சல் ரகுமான், டிரான்ஸ்போர்ட் அலுவலக உதவியாளர்கள் என சிலரை போலீசார் ஏற்கனவே கைது செய்திருந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் கமாலுதீனின் நண்பரான தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் நகரை சேர்ந்த அங்குராஜா (வயது 41) என்பவரை திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு லில்லிகிரேஸ் தலைமையிலான போலீசார் கைது செய்து மதுரை சிறையில் அடைத்தனர்.

கைதான அங்குராஜா தஞ்சையில் பிளக்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் கமாலுதீனுடன் சேர்ந்து ராஹத் நிறுவனத்தில் முதலீடு செய்த முதலீட்டாளர்களின் முதலீட்டு பணத்தில் அசையா சொத்துக்கள் வாங்கியும் விற்பனை செய்தும் லாபம் சம்பாதித்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. அதன் அடிப்படையில் போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.

Tags:    

Similar News