search icon
என் மலர்tooltip icon

    தஞ்சாவூர்

    • போலீசார் கஞ்சாவையும், கடத்தலுக்கு பயன்படுத்தியதாக கூறி ஒரு காரையும் பறிமுதல் செய்தனர்.
    • லாரியில் கஞ்சா கடத்தி வரப்பட்ட சம்பவம் பேராவூரணி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே லாரியில் கஞ்சா கடத்தப்படுவதாக தஞ்சை சிறப்பு போலீஸ் படைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் பேரில், போலீசார் பேராவூரணி முடச்சிக்காடு கலைஞர் நகர் பகுதியில் இன்று அதிகாலை தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பேராவூரணி- ஊமத்தநாடு சாலையில் பணியில் ஈடுபட்ட போது, அவ்வழியாக வந்த லாரியை மறித்து சோதனை செய்தனர். அப்போது லாரியில் கஞ்சா பொட்டலங்கள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. கடத்தி வரப்பட்ட கஞ்சாவின் மொத்த எடை 300 கிலோ ஆகும்.

    தொடர்ந்து, போலீசார் கஞ்சாவையும், கடத்தலுக்கு பயன்படுத்தியதாக கூறி ஒரு காரையும் பறிமுதல் செய்தனர். மேலும், கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட காரங்குடா பகுதியை சேர்ந்த அண்ணாத்துரை (வயது 44), தென்காசி மாவட்டம், ஆலங்குளம் பகுதியை சேர்ந்த தர்மராஜ் (34), அம்மணிச்சத்திரம் பகுதியை சேர்ந்த முத்தையா (60) ஆகியோரை கைது செய்தனர்.

    அவர்களிடம் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். லாரியில் கஞ்சா கடத்தி வரப்பட்ட சம்பவம் பேராவூரணி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • அரசு சார்பில் ரூ.5 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
    • முரசொலி எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் அண்ணாதுரை, அசோக்குமார் மற்றும் பலர் உடனிருந்தனர்.

    பட்டுக்கோட்டை:

    தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினத்தில் அரசு பள்ளி வளாகத்தில் ஆசிரியை ரமணி குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொடூர செயலில் ஈடுபட்ட மதன்குமாரை போலீசார் கைது செய்தனர்.

    இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட ரமணியின் குடும்பத்திற்கு அரசு சார்பில் ரூ.5 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

    அதன்படி இன்று முதலமைச்சர் உத்தரவுப்படி பட்டுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் ரமணியின் பெற்றோரிடம் ரூ.5 லட்சத்திற்கான காசோலையை உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் வழங்கினார்.

    அப்போது முரசொலி எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் அண்ணாதுரை, அசோக்குமார் மற்றும் பலர் உடனிருந்தனர். 

    • வாடகை செலுத்தாத கடைகளின் மின் இணைப்பை மாநகராட்சி அதிகாரிகள் துண்டித்தனர்.
    • வியாபாரிகளின் இந்த திடீர் ஆர்ப்பாட்டத்தால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாநகரின் மையப்பகுதியில் காமராஜ் காய்கறி மார்க்கெட் அமைந்துள்ளது. இந்த மார்க்கெட்டில் சிறிய கடைகள் 200, பெரிய கடைகள் 300 என 500-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.

    இதில் பெரிய கடைகளுக்கு மாதந்தோறும் ரூ.18 ஆயிரம் வரையும், சிறிய கடைகளுக்கு ரூ.6000 வரையும் மாநகராட்சி சார்பில் வாடகை வசூலிக்கப்பட்டு வருகிறது. இருந்த போதிலும் கடைகளுக்கு வாடகை அதிகமாக உள்ளது எனவும் அதனைக் குறைக்க வேண்டும் என வியாபாரிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

    இந்த நிலையில் காமராஜ் மார்க்கெட்டில் சில கடை வியாபாரிகள் சில மாதங்களாக வாடகை செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து வாடகை செலுத்தாத கடைகளின் மின் இணைப்பை மாநகராட்சி அதிகாரிகள் துண்டித்தனர்.

    கால அவகாசம் வழங்காமல் மாநகராட்சி அதிகாரிகள் எப்படி மின் இணைப்பை துண்டிக்கலாம்? எனக்கூறி இன்று காமராஜ் மார்க்கெட் வியாபாரிகள் ஒன்று திரண்டு திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அவர்கள் முன்னறிவிப்பு இன்றி மாநகராட்சி அதிகாரிகள் மின் இணைப்பை துண்டித்ததை கண்டித்தும், ஓராண்டுக்கான வாடகையை மொத்தமாக செலுத்த வேண்டும் என கூறியதை கண்டித்தும், கடை வாடகைகளை குறைக்க கோரியும் கோஷங்கள் எழுப்பினர்.

    வியாபாரிகளின் இந்த திடீர் ஆர்ப்பாட்டத்தால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. தகவல் அறிந்து தஞ்சை மேற்கு போலீசார் உடனே விரைந்து வந்து வியாபாரிகளிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து வியாபாரிகள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    • துணை பேராசிரியர், உதவி பேராசிரியர் என 40 பணியிடங்களை நிரப்ப பணம் வாங்கியதாக புகார்.
    • திருவள்ளுவனின் பதவி காலம் வரும் டிசம்பர் 12ம் தேதி நிறைவடைய உள்ள நிலையில் நடவடிக்கை.

    தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வி.திருவள்ளுவன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

    தஞ்சை பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள், துணை பேராசிரியர், உதவி பேராசிரியர் என 40 பணியிடங்களை நிரப்ப பணம் வாங்கியதாக புகார் எழுந்தது.

    இதை அடுத்து, உரிய தகுதி இல்லாத 40 பேர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று ஆளுநர் மாளிகை துணை வேந்தரிடம் விளக்கம் கேட்டது.

    முறையான பதிலை தராமல் காலம் கடத்திய திருவள்ளுவனின் பதவி காலம் வரும் டிசம்பர் 12ம் தேதி நிறைவடைய உள்ள நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக, புகார் தொடர்பாக 2019ம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

    • பள்ளியில் நேரில் ஆய்வு மேற்கொண்ட பிறகு அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி அளித்தார்.
    • கவுன்சிலிங் மூலம் மாணவர்கள், ஆசிரியர்களிடையே அச்சமற்ற நிலை உருவாக்கப்படும்.

    தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்துள்ள மல்லிப்பட்டினம் கிராமத்தில் அரசு மேல் நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

    இந்த பள்ளியில் மல்லிப்பட்டினம் அருகே உள்ள சின்னமனை கிராமத்தை சேர்ந்த ரமணி (வயது26) என்பவர் தமிழ் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில், ஒரு தலை காதல் விவகாரத்தால், மதன்குமார் என்கிற இளைஞர் பள்ளிக்குள் நுழைந்து வகுப்பறையில் இருந்த ஆசிரியை குத்தி கொலை செய்யதார்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பள்ளிக்கு இந்த வாரம் முழுவதும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    பள்ளியில் நேரில் ஆய்வு மேற்கொண்ட பிறகு அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி அளித்தார். அப்போது, பள்ளிக்கு விடுமுறை குறித்து அறிவித்தார்.

    மேலும் அவர், "பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கப்படும். வேறு ஒரு இடத்தில் அவர்களுக்கு முழுமையாக கவுன்சிலிங் கொடுக்கப்படும்.

    கவுன்சிலிங் மூலம் மாணவர்கள், ஆசிரியர்களிடையே அச்சமற்ற நிலை உருவாக்கப்படும். அதன் பிறகே பள்ளி திறக்கப்படும்.

    • மதன்குமார் என்ற வாலிபர் மாணவர்கள் கண்முன்னே கத்தியால் குத்தி உள்ளார்.
    • போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஒரு தலைகாதலால் ஆசிரியை குத்தி கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.

    பட்டுக்கோட்டை:

    பள்ளி ஆசிரியை ஒருவர் இன்று வகுப்பறைக்குள் கத்தியால் குத்தி கொல்லப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

    ஒருதலைக்காதலால் இந்த விபரீத சம்பவம் நடந்து இருக்கிறது. இது பற்றிய விவரம் வருமாறு:-

    தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்துள்ள மல்லிப்பட்டினம் கிராமத்தில் அரசு மேல் நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இந்த பள்ளியில் மல்லிப்பட்டினம் அருகே உள்ள சின்னமனை கிராமத்தை சேர்ந்த ரமணி (வயது26) என்பவர் தமிழ் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். இவரை அதே கிராமத்தை சேர்ந்த மதன்குமார் என்ற வாலிபர் ஒருதலையாக காதலித்து வந்தார்.

    அவரது காதலை ஆசிரியை ரமணி ஏற்காமல் தனது பணிகளில் கவனம் செலுத்தி வந்தார்.

    ஆசிரியை ரமணி வழக்கம்போல் இன்று (புதன் கிழமை) காலை வகுப்பறையில் பாடம் நடத்தி விட்டு ஆசிரியர் அறையில் அமர்ந்து ஓய்வு எடுத்துக் கொண்டு இருந்தார். அப்போது மதன்குமார் திடீரென பள்ளிக்குள் வந்தார்.

    ஓய்வு எடுத்துக் கொண்டு இருந்த ஆசிரியை ரமணியை சந்தித்து பேசினார். தனது காதலை ஏற்கும்படி மீண்டும் வலியுறுத்தினார்.

    அவரை ஆசிரியை ரமணி கண்டித்தார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது மதன்குமார் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஆசிரியை ரமணியை சரமாரியாக குத்தினார்.

    கத்திக்குத்து விழுந்ததால் ஆசிரியை ரமணி நிலை குலைந்தார். ரத்த வெள்ளத்தில் அலறி துடித்தார். அவரது கழுத்து மற்றும் உடலில் 2 இடங்களில் கத்திக்குத்து காயம் ஏற்பட்டது.

    ஆசிரியை ரமணியின் அலறல் கேட்டு மற்ற ஆசிரியர்-ஆசிரியைகள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் ஓய்வு அறைக்கு ஓடி வந்தனர். அங்கு ஆசிரியை ரமணி ரத்த வெள்ளத்தில் சரிந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    அப்போது ஆசிரியையை கத்தியால் குத்திய மதன்குமார் அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்தார். அவரை ஆசிரியர்கள் விரட்டி மடக்கி பிடித்தனர்.

    இதற்கிடையே ரத்த வெள்ளத்தில் சரிந்து கிடந்த ஆசிரியை ரமணியை மீட்டு, உடனடியாக ஆம்புலன்சு மூலம் பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

    ஆனால், ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் ஆசிரியை ரமணி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது கழுத்தில் கத்திக்குத்து ஆழமாக விழுந்ததால் நரம்புகள் துண்டிக்கப்பட்டு அவர் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது.

    இதை அறிந்ததும் பள்ளி ஆசிரியர்-ஆசிரியைகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து சேதுபாவாசத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஆசிரியை ரமணியை கொலை செய்த வாலிபர் மதன்குமாரை கைது செய்தனர். அவர்கள் நடத்திய முதல்கட்ட விசாரணையில் மதன்குமார், ரமணியை ஒரு தலையாக காதலித்து வந்ததும், இதுகுறித்து ரமணி வீட்டிற்கு பெண் கேட்க சென்றதும், அதற்கு ரமணி, மதன் குமாரை திருமணம் செய்வதில் விருப்பம் இல்லை எனக்கூறியதும் தெரியவந்தது.

    இதனால் மனமுடைந்த வாலிபர் ரமணியை சரமாரியாக குத்திக் கொன்றதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வாலிபரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டப்பகலில் பள்ளி வகுப்பறையில் ஆசிரியை குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மாவட்டத்தில் பல இடங்களில் நடவு செய்யப்பட்ட சம்பா, தாளடி இளம் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளன.
    • மழையால் பாதிக்கப்பட்ட வயல்களை அதிகாரிகள் பார்வையிட்டு சேதமதிப்பை கணக்கீட்டு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றனர்.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை கொட்டி வருகிறது. அதன்படி தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாகவே தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று பகலில் விட்டு விட்டு மழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக தஞ்சையில் நேற்று மாலை 2 மணி நேரம் தொடர்ந்து கனமழை பெய்தது. பின்னர் இரவில் விட்டு விட்டு பெய்தன. தொடர்ந்து பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடின. தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது.

    தொடர் மழையால் மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பின்பட்ட சம்பா, தாளடி நெற்பயிர்கள் மழைநீரால் சூழப்பட்டுள்ளது. குறிப்பாக பாபநாசம் தாலுகா புளியக்குடி, அருந்தவபுரம், கூனங்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழையால் வயல்களில் மழைநீர் புகுந்துள்ளது. இதனால் பயிர்கள் மூழ்கி சேதமடைந்துள்ளன.

    இதேபோல் ஓட்டை வாய்க்கால் என்னும் பாசன வடிகால் வாய்க்கால் தூர்வாரப்படாமல் செடி கொடிகள் வளர்ந்து காடு போல் காட்சியளிக்கிறது. இதனால் மழை முழுவதும் வயல் வழியே செல்வதால் நூற்றுக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்ட சம்பா, தாளடி நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.

    இது பற்றி விவசாயிகள் கூறும்போது, தளிகையூர் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட கதவணை திறக்கப்படாமல் உள்ளதால் வயல்களில் தண்ணீர் தேங்கி உள்ளன. எனவே விவசாயிகளின் நலன் கருதி கதவணையை உடனடியாக திறந்தும், ஓட்டை வாய்க்காலை தூர்வார மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் மாவட்டத்தில் பல இடங்களில் நடவு செய்யப்பட்ட சம்பா, தாளடி இளம் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளன. வடிகால் சரிவர தூர்வாரப்படாததால் மழைநீர் வடிவதற்கு வழியில்லாமல் தேங்கி காணப்படுவதால் பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.

    எனவே மழையால் பாதிக்கப்பட்ட வயல்களை அதிகாரிகள் பார்வையிட்டு சேதமதிப்பை கணக்கீட்டு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றனர்.

    வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் கனமழை இருக்கும் பகுதிகளில் பள்ளியின் தலைமையாசிரியரே விடுமுறை அளிப்பது தொடர்பாக முடிவு எடுக்கலாம் என கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான பாமினி, கொக்காலாடி, ஆதிரெங்கம், கட்டிமேடு, வேலூர், மணலி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை கொட்டி தீர்த்தது.

    • பல்வேறு பகுதிகளிலும் நாற்று நடப்பட் இளம் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கின.
    • வாய்கால்களை முறையாக தூர்வார வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தஞ்சாவூர்:

    டெல்டா மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக பெய்து வரக்கூடிய கனமழை காரணமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் பூதலூர், அம்மாபேட்டை, வெட்டிக் காடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் நாற்று நடப்பட் இளம் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கின.

    மேலும், அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை நெற்பயிர்களும் மிகவும் பாதிக்கப்பட்டது. மாவட்டத்தின் கடைமடை பகுதியான அம்மாபேட்டை, விழுதியூர், உக்கடை, புத்தூர், கோவிந்தநல்லூர் ஆகிய பகுதிகளில் நடப்பட்டிருந்த சுமார் 50 ஏக்கர் சம்பா, தாளடி பயிர்கள் நீரில் மூழ்கின.

    வயல்களில் தண்ணீர் தேங்கியதற்கும், மழைநீர் வடியாததற்கும் தஞ்சை-நாகை தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள வடிகால் வாய்க்கால்கள் முறையாக தூர்வாராததே காரணம் எனக்கூறி விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

    உடனடியாக வாய்கால்களை முறையாக தூர்வார வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இல்லாவிடில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

    • மானாவாரி சாகுபடிக்கு ஏற்ற மழையென விவசாயிகள் மகிழ்ச்சி.
    • கலெக்டர் ஆகாஷ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்தது பல்வேறு மாவட்டங்களில் பெய்து வருகிறது. தஞ்சை மாவட்டத்திலும் கடந்த இரண்டு வாரமாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று பகல் முழுவதும் விட்டு விட்டு மழை பெய்தது.

    பின்னர் மீண்டும் நள்ளிரவில் மழை பெய்ய தொடங்கியது. இன்று காலை வரை விடிய விடிய தொடர்ந்து மழை கொட்டியது.

    இதே போல் வல்லம் ,திருவையாறு, பூதலூர், ஒரத்தநாடு, பாபநாசம், திருவிடைமருதூர், பேராவூரணி, பட்டுக்கோட்டை, கும்பகோணம் உள்பட பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்தன.

    தொடர்ந்து பெய்த மழையால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கின.

    தொடர் மழையால் இன்று தஞ்சை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து கலெக்டர் பிரியங்காபங்கஜம் உத்தரவிட்டார்.

    மாவட்டத்தில் இன்று காலை 7 மணியுடன் முடிவடைந்த மழையின் அளவு விவரம் தாலுகா வாரியாக வருமாறு :-

    பேராவூரணி-39, பட்டுக்கோட்டை-24, திருவிடைமருதூர்-12.80, பாபநாசம்-10.40, ஒரத்தநாடு-10.30, கும்பகோணம்-6.80, திருவையாறு-4.80, தஞ்சாவூர்-2.50 மி.மீ.

    இதைப்போல் பட்டுக்கோட்டை, பேராவூரணி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான சூரப்பள்ளம், ஆத்திக்கோட்டை, பொன்னவராயன் கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முதல் மழை விட்டு விட்டு பெய்தது. இந்த மழையினால் குடியிருப்பு பகுதிகளில் உள்ள சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

    இந்த மழையால் பட்டுக்கோட்டை மணிகூண்டு, தலைமை தபால் நிலையம் மற்றும் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது. பேருந்து நிலையத்தில் பயணிகள் நடந்து செல்ல முடியாத அளவிற்கு தண்ணீர் நிரம்பி இருக்கிறது. இன்று காலையிலும் பட்டுக்கோட்டை பகுதியில் மழை பெய்து வருகிறது.

    இதைப்போல் திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம், கூத்தாநல்லூர், வடபாதிமங்கலம், மாங்குடி, வடகரை, திருத்துறைப்பூண்டி, நீடாமங்கலம், மன்னார்குடி, வலங்கைமான், கொரடாச்சேரி, சேந்தமங்கலம், வண்டாம் பாலை, தண்டலை, புலிவலம், வாழவாய்க்கால் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் நேற்று காலை முதல் பரவலாக விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது.

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவு முதல் தற்போது வரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமானது முதல் கனமழை வரை தொடர்ந்து பெய்து வருகிறது.

    கடந்த 24 மணி நேரத்தில் திருவாரூர் மாவட்டத்தில் 31.8 சென்டிமீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக திருத்துறைப்பூண்டியில் மட்டும் 9.9 சென்டிமீட்டரும், குறைந்தபட்சமாக குடவாசலில் 1 சென்டிமீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது.

    இதே போன்று திருவாரூரில் 3.9, நன்னிலத்தில் 3.1, வலங்கைமானில் 3, நீடாமங்கலத்தில் 2.4 சென்டிமீட்டர் என மழை அளவு பதிவாகியுள்ளது.

    நாகை மாவட்டம் வேதாரண்யம், ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், கோடியக்கரை வாய்மேடு, ஆயக்காரன்புலம், கருப்பம்புலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

    இதனால் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கியது. மேலும் மழைநீர் தேங்கிய இடங்களில் கலெக்டர் ஆகாஷ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


    இந்த கன மழையால் வேதாரண்யம் பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சுமார் 10,000 ஹெக்டர் மானாவாரி சாகுபடிக்கு ஏற்ற மழையென விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். இன்றும் மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    • தஞ்சை மாவட்டத்தில் இன்று தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
    • சிவகங்கையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது தொடர்பாக தலைமை ஆசிரியர்கள் முடிவெடுக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. இதன் தொடக்க காலத்தில் சில நாட்கள் மழை பெய்தது. அதன் பின்னர் விட்டு விட்டு அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

    வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

    அதன்படி பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. தஞ்சை மாவட்டத்திலும் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை 11 மணி அளவில் மழை பெய்யத்தொடங்கியது.

    இந்நிலையில் தஞ்சை மாவட்டத்தில் இன்று தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

    கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து அம்மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டுள்ளார். மழை தொடரும் என்பதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    சிவகங்கையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது தொடர்பாக தலைமை ஆசிரியர்கள் முடிவெடுக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மழை பெய்யும் இடங்களில் விடுமுறை அளிப்பது குறித்து தலைமை ஆசிரியர்களே முடிவெடுக்கலாம் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

    • லாரியில் ஏற்றி வந்த நிலக்கரியும் தீப்பிடிக்க அதில் இருந்து அதிக புகை வந்தது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தஞ்சாவூர்:

    காரைக்காலில் இருந்து 35 டன் நிலக்கரியை ஏற்றிக்கொண்டு டாரஸ் லாரி ஒன்று பெரம்பலூருக்கு புறப்பட்டது. லாரியை மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே ஓதவந்தான் குடிகாட்டை சேர்ந்த அந்தோணி ஆனந்தராஜ் (வயது 40) என்பவர் ஓட்டி வந்தார்.

    வரும் வழியில் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே கோவில்வெண்ணி சுங்கச்சாவடி அருகில் லாரி டயர் பஞ்சர் ஆனது. இதனை சரி செய்து விட்டு அந்தோணி ஆனந்தராஜ் லாரியை தஞ்சாவூர் நோக்கி ஓட்டி வந்தார். நள்ளிரவில் தஞ்சை மாரியம்மன் கோவில் எதிரில் வந்த போது சாலையில் வைக்கப்பட்டிருந்த பேரிகார்டு அருகில் டிரைவர் அந்தோணி ஆனந்தராஜ் பிரேக் அடித்துள்ளார். அப்பொழுது திடீரென லாரி டயர்கள் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.

    புகை வருவதை கண்டவுடன் லாரிலிருந்து அந்தோணி ஆனந்தராஜ் உடனடியாக இறங்கி குதித்தார். 10 டயர்களும், டீசல் டாங்கும் பற்றி எரிய ஆரம்பித்தது. லாரியில் ஏற்றி வந்த நிலக்கரியும் தீப்பிடிக்க அதில் இருந்து அதிக புகை வந்தது. அந்த பகுதியே தீப்பிளம்பாகவும், புகை மூட்டமாகவும் காட்சியளித்தது.

    இது பற்றி தகவல் அறிந்த தஞ்சாவூர் தீயணைப்பு துறை வீரர்கள் விரைந்து வந்து தண்ணீர் பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருந்தாலும்பாதி அளவு நிலக்கரி எரிந்து சாம்பலானது. லாரியின் பெரும்பகுதியும் சேதமானது. இது குறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சரசுவதி மகால் நூலகத்திலுள்ள பழங்கால ஓலைச்சுவடிகளைப் பாா்வையிட்டாா்.
    • பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றனா்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூருக்கு தமிழக கவர்னர் ஆா்.என். ரவி, தனது மகன் ராகுல்ரவியுடன் நேற்று வந்தாா்.

    சுற்றுலா மாளிகையில் தங்கிய இருவரும் தஞ்சாவூா் அரண்மனைக்குச் சென்றனா். அங்கு கலெக்டர் பிரியங்காபங்கஜம் பூங்கொத்து கொடுத்து கவர்னரை வரவேற்றார்.

    பின்னா் அரண்மனை வளாகத்திலுள்ள சந்திரமௌலீசுவரா் கோயிலுக்கு சென்று கவர்னர் ஆர்.என்.ரவி வழிபட்டாா். இதையடுத்து, அருகிலுள்ள சரசுவதி மகால் நூலகத்திலுள்ள பழங்கால ஓலைச்சுவடிகளைப் பாா்வையிட்டாா்.

    மாலையில் தஞ்சாவூா் பெரிய கோயிலுக்குச் சென்றாா். அங்கு அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலா் பாபாஜிராஜா போன்ஸ்லே, உதவி ஆணையா் கவிதா உள்ளிட்டோா் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றனா்.

    வராஹி அம்மன், மராட்டா விநாயகா், பெருவுடையாா், பெரியநாயகி அம்மன் ஆகிய சன்னதிகளுக்கு சென்று கவர்னர் ஆர்.என்.ரவி வழிபட்டாா்.

    பின்னா், தாண்டவ மாடியின் மீது ஏறி பாா்வையிட்ட அவா், மகா நந்திகேசுவரரை வழிபட்டு, சுற்றுலா மாளிகைக்கு புறப்பட்டாா்.

    இதையடுத்து, காா் மூலம் திருச்சி விமான நிலையத்துக்கு சென்று அங்கிருந்து விமானத்தில் சென்னை சென்றார்.

    இதற்கிடையே தஞ்சை பெரிய கோவிலில் கவர்னர் ஆர்.என்.ரவியை ஒரு வாலிபர் பின்தொடர்ந்து சென்றார். சந்தேகம் அடைந்த போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    அதில் அவர் தஞ்சை கீழவாசல் ஆட்டுமந்தை தெருவை சேர்ந்த ஜாபர்தீன் (வயது 35) என்பதும் ஆர்வமிகுமியால் கவர்னரை பின்தொடர்ந்து சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து ஜாபர்தீனை போலீசார் எச்சரித்து அனுப்பினர். 

    ×