தமிழ்நாடு (Tamil Nadu)

நெல்லையில் கடைக்குள் புகுந்து இளைஞர் படுகொலை- போலீசார் விசாரணை

Published On 2024-08-06 02:08 GMT   |   Update On 2024-08-06 06:28 GMT
  • இரவு வீடு திரும்பாததால் கடைக்கு வந்து தந்தை பார்த்தபோது தான் சையது படுகொலை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது.
  • கடைக்குள் புகுந்த மர்ம நபர்கள் சையது தமீமை வெட்டிக்கொன்று தப்பி ஓடியது தெரிய வந்துள்ளது.

நெல்லை:

நெல்லையை அடுத்த மேலப்பாளையம் ஆமீன் புரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் அமீர் அம்சா. இவரது மகன் செய்யது தமீம் (வயது 31).

இவர் மேலப்பாளையம் வி.எஸ்.டி. பள்ளிவாசல் அருகே அம்பை சாலையில் ஆன்லைன் சர்வீஸ் சென்டர் நடத்தி வருகிறார். அதன் மூலமாக பட்டா, சிட்டா உள்ளிட்ட பத்திரப்பதிவு தொடர்பான ஆன்லைன் சேவைகளையும் இவர் செய்து வருகிறார்.

நேற்று இரவு தனது வழக்கமான பணிகளை முடித்துவிட்டு வீடு திரும்பிய செய்யது தமீம் இரவு உணவு சாப்பிட்டுள்ளார். பின்னர் சாப்பிட்டு முடித்துவிட்டு கடையில் சிறிய வேலை இருப்பதாக வீட்டில் இருந்தவர்களிடம் சொல்லிவிட்டு மீண்டும் அவர் கடைக்கு சென்றுள்ளார்.

ஆனால் நீண்ட நேரம் ஆகியும் தமீம் வீடு திரும்பாத நிலையில் அவரது தந்தை அமீர் அம்சா சந்தேகம் அடைந்து கடைக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது கடையில் உள்ள கண்ணாடி கதவுகள் திறந்த நிலையில் இருந்துள்ளது.

உடனே அவர் அவசரம் அவசரமாக உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது அங்கு பின் கழுத்து பகுதியில் பலத்த வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் செய்யது தமீம் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அமீர் அம்சா கதறி அழுதார். பின்னர் சம்பவம் குறித்து மேலப்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். உடனே சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் செய்யது தமீம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து அவரை கொலை செய்த கும்பல் யார்? எதற்காக கொலை செய்தார்கள்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு மேற்கொண்டதுடன் கொலை நடந்த இடத்திற்கு நெல்லை மாநகர போலீஸ் மோப்ப நாய் பரணி வரவழைக்கப்பட்டு கொலையாளிகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

மேலும் தடய அறிவியல் துறையினர் மற்றும் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் தடயங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. நள்ளிரவில் நடந்த இந்த கொலை சம்பவத்தினால் மேலப்பாளையம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளதால் அங்கு பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

செய்யது தமீமின் குடும்பத்திற்கு தூத்துக்குடி, கயத்தாறு, நெல்லை உள்ளிட்ட இடங்களில் ஏராளமான சொத்துக்கள் உள்ளன. சமீபத்தில் தூத்துக்குடியில் உள்ள ஒரு சொத்தை விற்றுள்ளனர்.

அப்போது அவர்களுக்கும், ஒரு கும்பலுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதனால் இடப்பிரச்சனை தொடர்பாக அந்த கும்பல் இந்த கொலையை செய்திருக்கலாமா?அல்லது வேறு ஏதேனும் காரணமா என பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாநகர போலீஸ் கமிஷனர் மூர்த்தி உத்தரவின்பேரில் போலீசார் தனிப்படை அமைத்து கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News