சென்னை தீவுத்திடலில் அரசு பொருட்காட்சி 6-ந்தேதி தொடங்குகிறது
- சென்னையில் தொடர்ந்து பெய்து வந்த மழையால் நுழைவுவாயில், ஸ்டால்கள், அரங்குகள் அமைப்பதில் தாமதம் ஏற்பட்டது.
- கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நிர்ணயிக்கப்பட்ட கட்டணமே தற்போது வசூலிக்கப்பட உள்ளது.
சென்னை:
தமிழக சுற்றுலாத்துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சென்னை தீவுத்திடலில் அரசு தொழில் பொருட்காட்சி ஜனவரி முதல் வாரத்தில் தொடங்கி மார்ச் மாதம் வரை நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு பொருட்காட்சி அரங்குகள் அமைக்கும் பணி டிசம்பர் மாதம் இறுதியில் தொடங்கியது.
சென்னையில் தொடர்ந்து பெய்து வந்த மழையால் நுழைவுவாயில், ஸ்டால்கள், அரங்குகள் அமைப்பதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. மத்திய, மாநில அரசுகளின் 53 அரங்குகள் இடம் பெறுகின்றன.
பொழுதுபோக்கு விளையாட்டு சாதனங்கள், சிறுவர் ரெயில் உள்ளிட்டவை வழக்கம்போல இந்த வருடமும் இடம்பெறுகின்றன. நூற்றுக்கும் மேலான கடைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் மகிழ்விக்கும் வகையில் பொருட்காட்சி தயாராகி வருகிறது.
பொருட்காட்சியை பார்வையிட நுழைவுக் கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நிர்ணயிக்கப்பட்ட கட்டணமே தற்போது வசூலிக்கப்பட உள்ளது. பெரியவர்களுக்கு ரூ.40, சிறுவர்களுக்கு ரூ.25 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பொருட்காட்சி ஸ்டால்கள், அரங்குகள் அமைக்கும் பணி முடிந்தன.
இதையடுத்து பொருட்காட்சி வருகிற 6-ந்தேதி (திங்கட்கிழமை) மாலை 6 மணிக்கு திறக்கப்படுகிறது. அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு திறந்து வைக்கிறார்கள்.