தமிழ்நாடு செய்திகள்

தி.மு.க.வின் போராட்டத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் தவிக்கிறது கமலாலயம்- கனிமொழி

Published On 2025-03-29 21:41 IST   |   Update On 2025-03-29 21:41:00 IST
  • எளியவன் உழைத்தாலும் கூலியைக் கொடுக்காமல் வயிற்றில் அடி என்கிறது ஒன்றிய அரசின் புதுமொழி.
  • பைசா கூட ஒதுக்காத ஒன்றிய அரசைக் கண்டித்து தமிழ்நாடு முழுக்க திமுக போராட்டம் நடத்தியது.

தி.மு.க எம்.பி கனிமொழி தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

"உழைப்பவன் கூலியை வியர்வை உலர்வதற்கு முன்பு கொடுத்துவிடு" எனச் சொல்கிறது ஒரு பொன்மொழி.

ஆனால், எளியவன் உழைத்தாலும் கூலியைக் கொடுக்காமல் வயிற்றில் அடி என்கிறது ஒன்றிய அரசின் புதுமொழி.

100 நாள் வேலைத் திட்டத்திற்கான சம்பளப் பாக்கி 4,034 கோடி ரூபாயை நிறுத்தி வைத்து கொடுங்கோல் ஆட்சியாகவே மாறிவிட்டது ஒன்றிய அரசு.

வறுமையின் காரணமாக 100 நாள் வேலையில் இணைந்து உழைப்பவர்கள் அனைவரையும் ஊழல்வாதிகள் போலச் சித்தரித்து ஊதியப் பணத்தைக் கொடுக்க மாட்டோம் என்பது கொடுங்கோல் ஆட்சியில் கூட நடக்காதது.

ஏழைகள் உழைப்பிற்குக் கூலி கொடுக்க மனமில்லாத ஒன்றிய பாஜக அரசு, உழைக்கும் மக்களையே ஊழல்வாதிகள் என முத்திரை குத்த தமிழ்நாடு பாஜகவினர் களமிறக்கப்பட்டிருக்கிறார்கள்.

100 நாள் வேலைத் திட்டத்திற்கான நிதியை ஒதுக்கச் சொல்லி முதலமைச்சர் அவர்கள் கடிதம் எழுதி வலியுறுத்தினார்; நாடாளுமன்றத்தில் திமுக மற்றும் திமுக கூட்டணி உறுப்பினர்கள் குரல் எழுப்பினார்கள்.

பைசா கூட ஒதுக்காத ஒன்றிய அரசைக் கண்டித்து தமிழ்நாடு முழுக்க திமுக போராட்டம் நடத்தியது. மோடி அரசுக்கு எதிரான போராட்டத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் தவிக்கிறது கமலாலயம்!

தமிழ்நாட்டின் ஏழைகள் ஊதியமின்றி தெருவில் நிற்கும் போது ஒன்றிய அரசிடம் போராடி பணத்தைப் பெற்றுத் தருவதுதானே தமிழ்நாட்டைச் சார்ந்தவர்களின் கடமையாக இருக்க வேண்டும்?

கல்வி நிதி, பேரிடர் நிதியை எல்லாம் தராத ஒன்றிய அரசு, இப்போது 100 நாள் வேலை பணியாளர்களின் ஊதியத்தை நிறுத்தி அவர்களைப் பட்டினி போடுகிறது.

உழைப்பை உறிஞ்சிக்கொண்டு ஊதியத்தைக் கேட்பவர்களையே கொச்சைப்படுத்தும் பாஜகவினருக்குத் தமிழ்நாட்டு மக்கள் தக்கப் பாடம் புகட்டுவார்கள்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News