அரசு பள்ளி வளாகத்தில் மேஸ்திரி தற்கொலை- கள்ளக்காதலி வேறு ஒருவருடன் பழகியதால் விபரீத முடிவு
- திருமணம் செய்யாமல் கணவன்-மனைவி போல் ஒன்றாக வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.
- சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போச்சம்பள்ளி:
போச்சம்பள்ளியில் அரசு பள்ளி வளாகத்தில் மேஸ்திரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரித்ததில், கள்ளக்காதலி வேறுநபருடன் பழகியதால் அவர் இந்த விபரீத முடிவு எடுத்ததாக தெரிகிறது.
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் இருமத்தூரைச் சேர்ந்தவர் தங்கவேல். இவரது மகன் வெற்றிவேல் (வயது32).
கட்டிட மேஸ்திரியான இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
இவர் வேலைக்காக தனது உறவினரான தருமபுரியைச் சேர்ந்த இளம்பெண்ணை சேர்த்து கொண்டார்.
அவருக்கு ஏற்கனவே திருமணமாகி கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வசித்து வந்தார்.
இந்த நிலையில் வெற்றிவேலும், அவரது உறவினர் பெண்ணும் ஒன்றாக வேலைக்கு செல்வதால் அடிக்கடி பழகி வந்தனர். இந்த பழக்கம் நாளாடைவில் கள்ளக்காதலாக மாறியது.
இதன்காரணமாக கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் உள்ள ஜம்புக்குட்டப்பட்டி பகுதியில் பழனியாண்டவர் கோவில் நகரில் தனியாக வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து திருமணம் செய்யாமல் கணவன்-மனைவி போல் ஒன்றாக வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அந்த இளம்பெண் அடிக்கடி செல்போனில் வேறு வாலிபருடன் பேசி வந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவலறிந்த வெற்றிவேல் அந்த பெண்ணிடம் சென்று எதற்காக வேறுநபருடன் செல்போனில் பேசி வருகிறாய் என்று தட்டி கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.
இதனால் மனமுடைந்து காணப்பட்ட வெற்றிவேல் இன்று அதிகாலை தான் வசித்து வந்த பகுதியின் அருகே அரசு தொடக்க பள்ளி வளாகத்தில் உள்ள புளியமரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைத்தொடர்ந்து இன்று காலை விடிந்ததும் அந்த வழியாக சென்றவர்கள் மரத்தில் வெற்றிவேல் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் இந்த சம்பவம் குறித்து அப்பகுதி பொது மக்கள் போச்சம்பள்ளி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்த போச்சம்பள்ளி போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்து கிடந்த வெற்றிவேலின் உடலை மீட்க முயன்றனர். அப்போது வெற்றிவேல் உயரமான மரத்தில் தூக்குப்போட்டு கொண்டதால் உடலை மீட்க சிக்கல் ஏற்பட்டதால் போலீசார் உடனே தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மரத்தில் பிணமாக கிடந்த வெற்றிவேலின் உடலை கயிறு மூலம் கீழே இறக்கினர். பின்னர் போலீசார் அந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த தற்கொலை சம்பவம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றதால், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், தாசில்தார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்காதலி வேறு நபருடன் பழகியதால் கட்டிட மேஸ்திரியான வெற்றிவேல் அரசு பள்ளி வளாகத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.