புதுச்சேரி, காரைக்காலில் அடுத்து 2 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை
- புயல் உருவானாலும் பின்னர் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக கரையை கடக்கிறது.
- கனமழை மற்றும் புயல் எச்சரிக்கை காரணமாக, கல்வி அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. தற்போது வங்கக் கடலில் உருவாகியுள்ள தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு-வடமேற்கு திசையில் தொடர்ந்து நகர்ந்து இன்று அல்லது நாளை சூறாவளி புயலாக மாற வாய்ப்புள்ளது என இந்திய வானிலை மையம் தெரிவித்து இருக்கிறது.
புயல் உருவானாலும் பின்னர் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதையடுத்து கடலூர் பகுதியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை, நாளை மறுநாளும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை மற்றும் புயல் எச்சரிக்கை காரணமாக, கல்வி அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.
இதேபோல், கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்திலும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.