தமிழ்நாடு

செங்கல்பட்டு மாவட்டத்தில் 5 லட்சம் பனைமரம் நட இலக்கு- அமைச்சர் தா.மோ. அன்பரசன் பேச்சு

Published On 2024-11-09 14:03 GMT   |   Update On 2024-11-09 14:03 GMT
  • "பனை நடவு திருவிழா 2024 - 2025" என்ற பெயரில் இன்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னிலையில் பனை விதைகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
  • மாமல்லபுரத்தில் 100 கோடி ரூபாய் செலவில் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணிகள் விரைவாக நடந்து வருகிறது.

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த அருங்குன்றம் ஊராட்சிக்கு உட்பட்ட ஏரியில், வனத்துறை சார்பில் ஒரு கோடி பனை மரம் நடும் நெடும் பணியின் ஒரு பகுதியாக "பனை நடவு திருவிழா 2024 - 2025" என்ற பெயரில் இன்று குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னிலையில் பனை விதைகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ச.அருண்ராஜ், காஞ்சிபுரம் பாராளுமன்ற உறுப்பினர் க.செல்வம், மாவட்ட கூடுதல் கலெக்டரும், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனருமான அனாமிகா ரமேஷ், மாவட்ட வன அலுவலர் ரவி மீனா, திருப்போரூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் எஸ்.எல்.ஆர்.இதயவர்மன், அருங்குன்றம் ஊராட்சி தலைவர் மற்றும், உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் பங்கேற்றனர்.

தொடர்ந்து, அமைச்சர் அங்கு நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி, மருத்துவ காப்பீடு திட்டம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்து, மருத்துவ முகாமை பார்வையிட்டார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் பேசியதாவது:-

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நமது தமிழக பாரம்பரிய மரமான பனை மரங்களை காக்கும் விதமாக ஆண்டிற்கு ஒரு கோடி பனை மரங்கள் வளர்க்கும் திட்டத்தை துவக்கி வைத்தார்.

இதை தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டத்தில் மட்டும் 5 லட்சம் விதைகள் நட முடிவு செய்துள்ளோம். இதுவரை 3.31லட்சம் விதைகள் இதுவரை நடவு செய்துள்ளோம். இன்று மட்டும் ஒரு லட்சம் நட்டுள்ளோம் மீதமுள்ள விதைகள் இம்மாதம் இறுதிக்குள் நடவுள்ளோம்.

மாமல்லபுரத்தில் 100 கோடி ரூபாய் செலவில் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணிகள் விரைவாக நடந்து வருகிறது. செங்கல்பட்டு நகருக்குள் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க அங்குள்ள அரசு பேருந்து பணிமனையை இடமாற்றம் செய்யும் பணிகள் நடந்து வருகிறது. கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்த சின்ன சின்ன வசதிகள் குறைபாடுகளை சரி செய்துள்ளோம்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News