உலகம்

ஆப்கானிஸ்தானில் வெள்ளப்பெருக்கில் சிக்கி 50 பேர் பலி.. 2000 வீடுகள் நாசம்

Published On 2024-05-18 10:20 GMT   |   Update On 2024-05-18 10:20 GMT
  • ஆப்கானிஸ்தான் நாட்டில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை காரணமாக கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
  • கடந்த வாரம், கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் வடக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள கிராமங்களில் 315 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 1,600 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

ஆப்கானிஸ்தான் நாட்டில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை காரணமாக கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மத்திய ஆப்கானிஸ்தானில் உள்ள கோர் மாகாணப் பகுதிகளில் இதுவரை கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி 50 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெள்ளப்பெருக்கால் சாலைப் போக்குவரத்து முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ள நிலையில் காயமடைந்தவர்களளுக்கு சிகிச்சை அளிப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. கோர் மாகாணத்தின் நகர்ப்பகுதிகளில் சுமார் 2,000 வீடுகள் முற்றிலுமாக அழிந்துவிட்டதாகவும் 2000க்கும் மேற்பட்ட கடைகள் தண்ணீருக்கு அடியில் மூழ்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

முன்னதாக விமானப்படை ஹெலிகாப்டர் மூலம், கோர் மாகாண ஆற்றில் விழுந்தவர்களின் உடல்களை மீட்கும் முயற்சியின் போது தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக விபத்துக்குள்ளானது, ஒருவர் கொல்லப்பட்டார். கடந்த வாரம், கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் வடக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள கிராமங்களில் 315 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 1,600 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

ஆப்கானிஸ்தானில் வழக்கத்துக்கு மாறாக பெய்து வரும் கனமழைக்கு காலநிலை மாற்றமே காரணம் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். காலநிலை மாற்றத்தால் மிகவும் பாதிக்கப்படக்கூடிய நாடுகளில் ஒன்றாக ஆப்கனிஸ்தானை ஐநா வரையறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 




 


Tags:    

Similar News