காசா சண்டையில் தவறுதலாக 3 பிணைக்கைதிகள் சுட்டுக்கொலை: இஸ்ரேல் ராணுவம்
- ஹமாஸின் வலுவான பகுதியாக அறியப்படும் ஷெஜையா பகுதியில் கடும் சண்டை.
- ஹமாஸ் அமைப்பினருக்கும்- இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையே நேரடி சண்டை நடைபெற்று வருகிறது.
ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் ராணுவம் காசா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. வடக்கு காசா மீது தாக்குதல் நடத்திய நிலையில் தெற்கு காசா பகுதிகளிலும் தாக்குதல் நடத்தி வருகிறது.
ஹமாஸின் முக்கிய இடமாக கருதப்படும் ஷெஜையா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை அதிகப்படுத்தியுள்ளது. இந்த இடத்தில் ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேல் ராணுவத்தினற்கும் இடையே நேரடி சண்டை நடைபெற்று வருகிறது. இதில் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் பலியாகி வருகின்றனர்.
இந்த நிலையில் சண்டையின்போது, இஸ்ரேல் ராணுவ வீரர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக் கூடிய நபர்கள் எனக் தவறுதலாக கருதி மூன்று பிணைக்கைதிகளை சுட்டுக்கொன்றதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
"இஸ்ரேல் ராணுவம் நேற்று தவறுதலாக மூன்று பிணைக்கைதிகளை சுட்டுக்கொலை செய்துள்ளது. அவர்கள் ராணுவ வீரர்களுக்கு அச்சுறுத்தல் தரக்கூடியவர்கள் என தவறுதலாக எடுத்துக் கொள்ளப்பட்டு அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து உடனடியாக ஆய்வு செய்யப்பட்டு, இந்த நிகழ்வில் இருந்து உடனடியாக பாடம் கற்றுக் கொள்ளப்பட்டு, போரிட்டு வரும் வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது" என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
மேலும் சோகமான சம்பவத்திற்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம் எனத் தெரிவித்துள்ளது.
சுட்டுக்கொலை செய்யப்பட்ட மூன்ற பேர்களில் இருவரின் பெயரை இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ளது. குடும்பத்தினரின் வேண்டுகோளை ஏற்று ஒருவரின் பெயர் வெளியிடப்படவில்லை.
அக்டோபர் 7-ந்தேதி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய ஹமாஸ் பயங்கரவாதிகள் 240-க்கும் மேற்பட்டோரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர். தாக்குதலை தீவிரப்படுத்தி அவர்கள் மீட்கும் பணியில் இஸ்ரேல் ராணுவம் சண்டையிட்டு வருகிறது.