உலகம்
null

நடுவானில் பயங்கரமாக குலுங்கிய விமானம்

Published On 2024-07-02 10:11 GMT   |   Update On 2024-07-02 10:34 GMT
  • விமானத்தில் 325 பயணிகள் பயணம் செய்தனர்.
  • விமானம் குலுங்கியதில் சில இருக்கைகள் சேதம் அடைந்தது.

மாட்ரிட்:

சமீப காலமாக நடுவானில் விமானம் குலுங்கும் சம்பவங்கள் தொடர்கதை போல நடந்து வருகிறது. தற்போது ஸ்பெயின் நாட்டிலும் இது போன்ற ஒரு விபத்து விமான பயணிகளை அதிர்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

ஸ்பெயினில் உள்ள மாட்ரிட்டில் இருந்து உருகுவே தலைநகர் மாண்டி வீடியோவுக்கு ஏர் யுரோபா விமானம் புறப்பட்டது. இந்த விமானத்தில் 325 பயணிகள் பயணம் செய்தனர். விமானம் நடுவானில் பறந்த போது திடீரென பயங்கரமாக குலுங்கியது. விமானம் அங்கும், இங்கும் ஆடியதால் பயணிகள் அலறினர். சிலர் இருக்கையை கெட்டியாக பிடித்து கொண்டனர். சீட் பெல்ட் அணியாத பயணிகள் இருக்கையில் இருந்து கீழே விழுந்தனர். விமானத்தில் பயணித்த ஒரு குழந்தை கதறி அழுதது.

ஒரு பயணி விமானத்தின் மேற்பகுதிக்கு தூக்கி வீசப்பட்டார். இதனால் அவர் மேல் பகுதியை பிடித்து கொண்டு தொங்கினார். அவரை சக பயணிகள் கீழே இழுத்து மீட்டனர். இந்த சம்பவத்தில் 30 பயணிகள் காயம் அடைந்தனர்.


இந்த சம்பவத்தையடுத்து விமானம் வடகிழக்கு பிரேசிலில் உள்ள நடால் விமான நிலையத்தில் பத்திரமாக தரை இறக்கப்பட்டது. விமானம் குலுங்கியதில் சில இருக்கைகள் சேதம் அடைந்தது. பின்னர் வேறு ஒரு விமானம் மூலம் பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இது தொடர்பாக ஏர் யுரோபா விமான நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் விமானம் பத்திரமாக தரை இறக்கப்பட்டதாகவும், காயம் அடைந்த பயணிகள் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளதாகவும், விபத்து குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


Tags:    

Similar News