அதிபர் தேர்தல் - முக்கிய முடிவு எடுத்த குடியரசு கட்சி வேட்பாளர்
- இரு கட்சி ஜனநாயக முறையை கடைபிடித்து வரும் நாடு, அமெரிக்கா
- 'இப்போது வேண்டாம் டிம்' என மக்கள் கூறுவதாக டிம் தெரிவித்தார்
அமெரிக்காவில் அடுத்த வருடம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது.
இரு கட்சி ஜனநாயக முறை உள்ள அமெரிக்காவில், ஜனநாயக கட்சி அல்லது குடியரசு கட்சியை சேர்ந்தவர்களே அதிபர்களாக மாறி மாறி பதவி வகிப்பது வழக்கம்.
தற்போது ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடன் அதிபராக உள்ளார். இவரை எதிர்த்து குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தீவிரமாக களம் இறங்கியுள்ளார்.
அந்நாட்டு வழக்கப்படி, அதிபர் தேர்தலில் போட்டியிட ஒரு கட்சியின் சார்பில் களமிறங்க விரும்புபவர்கள், நாட்டின் பல இடங்களில் அக்கட்சியின் சார்பாக நடைபெறும் விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டும். அப்போது அமெரிக்கா எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் அதனை கையாள தங்கள் முன்வசம் உள்ள திட்டங்கள் ஆகியவை குறித்து அவர்கள் விளக்க வேண்டும். அது குறித்து வரும் கேள்விகளையும் திறமையாக கையாண்டு சிறப்பான முறையில் பதிலளிக்க வேண்டும். இதற்கு பிறகே யாரை கட்சிகள் அதிபராக களம் இறக்க போகின்றன என்பது தெரிய வரும்.
குடியரசு கட்சி சார்பில் களம் இறங்க டொனால்ட் டிரம்ப் தீவிரமாக இருந்தாலும், அவர் மீது அந்நாட்டின் பல மாநிலங்களில் கிரிமினல் குற்ற வழக்கு விசாரணை நடைபெறுவதால், அந்த வழக்குகளின் தீர்ப்பை பொறுத்தே அவரது அரசியல் எதிர்காலம் அமையும்.
டிரம்பிற்கு அடுத்த இடத்தில் இந்திய வம்சாவளி தொழிலதிபரான விவேக் ராமசாமி முன்னிலையில் உள்ளார்.
இவர்களை தவிர, இப்போட்டியில் பங்கு பெற்று பிரச்சாரம் செய்து வந்தவர்களில் ஒருவர், அமெரிக்க செனட்டர் டிம் ஸ்காட் (Tim Scott). தொடக்கத்தில் பல இடங்களில் அவருக்கு இருந்து வந்த ஆதரவு, நாட்கள் செல்ல செல்ல குறைய ஆரம்பித்தது.
டிம் தற்போது போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இவர் அமெரிக்காவின் சவுத் கரோலினா மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும் மற்றொரு குடியரசு கட்சி போட்டியாளரான நிக்கி அதே மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
"பூமியிலேயே அற்புதமான மனிதர்களான வாக்காளர்கள் என்னிடம் 'இப்போது வேண்டாம் டிம்' என கூறுவதாக தெரிகிறது" என தனது முடிவு குறித்து டிம் தெரிவித்தார்.
மே மாதம் முதல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வந்த டிம், "டொனால்ட் டிரம்ப்பை விட தான் எந்த வகையில் சிறப்பானவர்" என்பதை விவாதங்களில் விளக்க தவறியதால், அவருக்கு பின்னடைவு ஏற்பட்டதாக அரசியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், டிம் ஸ்காட்டை இதுவரை ஆதரித்து பிரச்சாரங்களுக்கு நிதியுதவி செய்து வந்த தொழில் நிறுவனங்கள் மற்றொரு போட்டியாளாரான நிக்கிக்கு ஆதரவு அளிக்க முன்வந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.