என் மலர்
அமெரிக்கா
- தேர்தல் ஆணையம் சமரசம் செய்து கொண்டது மிகவும் தெளிவாகத் தெரிகிறது
- நீங்கள் கணக்கு போட்டு பார்த்தல், அதிகாலை 2 மணி வரை வாக்காளர்கள் வரிசையில் நின்றிருப்பார்கள் என்று அர்த்தம்
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு பாஸ்டன் நகரில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் ராகுல் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், "தேர்தல் ஆணையம் சமரசம் செய்து கொண்டது மிகவும் தெளிவாகத் தெரிகிறது, இந்த அமைப்பில் ஏதோ தவறு இருப்பதும் மிகவும் தெளிவாகத் தெரிகிறது. நான் இதை பலமுறை கூறியுள்ளேன். மகாராஷ்டிராவில் வயது வந்தர்வர்கள் எண்ணிக்கையை விட மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தலில் அதிகமானோர் வாக்களித்தனர்.
மாலை 5:30 மணிக்கு வாக்கு எண்ணிக்கை விவரங்களை தேர்தல் ஆணையம் எங்களுக்கு வழங்கியது. மாலை 5:30 மணி முதல் மாலை 7:30 மணி வரை, 65 லட்சம் வாக்காளர்கள் வாக்களித்தனர். இது நடக்க இயலாது.
ஒரு வாக்காளர் வாக்களிக்க சுமார் 3 நிமிடங்கள் ஆகும், நீங்கள் கணக்கு போட்டு பார்த்தல், அதிகாலை 2 மணி வரை வாக்காளர்கள் வரிசையில் நின்றிருப்பார்கள் என்று அர்த்தம், ஆனால் இது நடக்கவில்லை.
நாங்கள் அவர்களிடம் வீடியோ பதிவுகளை கேட்டபோது, அவர்கள் மறுத்தது மட்டுமல்லாமல், சட்டத்தையும் மாற்றினர். அதனால் இப்போது வீடியோ பதிவுகளை கேட்க எங்களுக்கு அனுமதி இல்லை" என்று தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி நடந்ததாக காங்கிரஸ் தொடர்ந்து குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
- அதிபர் டிரம்பின் நடவடிக்கை ஜனநாயகத்துக்கு எதிராக இருக்கிறது.
- அவரது நடவடிக்கையை எதிர்த்து நாடு முழுவதும் மக்கள் போராட்டத்தில் குதித்தனர்.
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற பின் பல்வேறு அதிரடி மாற்றங்களை அறிவித்து வருகிறார்.
அதில் வெளிநாட்டவர் வலுக்கட்டாய வெளியேற்றம், அரசு ஊழியர்கள் பணிநீக்கம், கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வந்த நிதியுதவி நிறுத்தம் ஆகியவை மக்களிடம் கோபத்தை ஏற்படுத்தின
இவரது இந்த நடவடிக்கை ஜனநாயகத்துக்கு எதிராக இருப்பதாகக் கூறி நாடு முழுவதும் மக்கள் போராட்டத்தில் குதித்தனர்.
இந்நிலையில், நியூயார்க், வாஷிங்டன் ஆகிய நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் பேரணியாக சென்றனர்.
அப்போது அதிபர் டிரம்புக்கு எதிரான பதாகைகளை ஏந்திக் கொண்டு சென்ற அவர்கள் வெள்ளை மாளிகையையும் முற்றுகையிட முயன்றனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. எனவே அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
- காங்கிரஸ் எம்.பி.யான ராகுல் காந்தி அமெரிக்காவின் பாஸ்டன் நகரை சென்றடைந்தார்.
- அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
வாஷிங்டன்:
மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி 21 மற்றும் 22-ம் தேதிகளில் அமெரிக்கா செல்கிறார். இந்தப் பயணத்தின்போது ரோட் தீவில் அமைந்துள்ள பிரவுன் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்கள், மாணவர்களுடனான கலந்துரையாடலில் பங்கேற்கும் ராகுல் காந்தி, வெளிநாடுவாழ் இந்தியர்கள் மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்களையும் சந்திக்கிறார் என அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி இன்று அதிகாலை அமெரிக்காவின் பாஸ்டன் நகரைச் சென்றடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு ராகுல் காந்தி தனது அமெரிக்க பயணத்தின்போது டெக்சாஸ் பல்கலைக்கழகம், ஜார்ஜ் டவுன் பல்கலைக் கழக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடல் நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- நேற்று பிரதமர் மோடியுடன் எலான் மஸ்க் போனில் உரையாடினார்.
- அமெரிக்காவுடனான கூட்டாண்மையை முன்னேற்றுவதற்கு இந்தியா உறுதி பூண்டுள்ளது.
உலகின் நம்பர் 1 பணக்காரரான எலான் மஸ்க், டொனால்டு டிரம்ப் உடைய அரசின் செயல்திறன் துறை தலைவராக உள்ளார். தனது ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா ஆகியவற்றை இந்திய சந்தைகளுக்கு கொண்டு வர தீவிரம் காட்டி வருகிறார்.
இந்நிலையில் இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவுக்கு வருகை தர ஆவலுடன் உள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். நேற்று பிரதமர் மோடியுடன் எலான் மஸ்க் போனில் உரையாடிய நிலையில், இந்தியா வருவதற்கான தனது விருப்பத்தை இன்று மஸ்க் வெளிப்படுத்தியுள்ளார்.
"பிரதமர் மோடியுடன் பேசுவது ஒரு மரியாதை. இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவுக்கு வருகை தர நான் ஆவலுடன் உள்ளேன்!" என்று மஸ்க் எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.
மஸ்க் உடன் பேசியது குறித்து மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில்,"எலான் மஸ்க் உடன் பேசினேன். இந்த ஆண்டு தொடக்கத்தில் வாஷிங்டன் டிசியில் எங்கள் சந்திப்பில் நிகழ்ந்து போலவே, நாங்கள் தொழில்நுட்பம் மற்றும் புதுமைத் துறைகளில் ஒத்துழைப்புக்கான மகத்தான ஆற்றலைப் பற்றி நாங்கள் விவாதித்தோம்.
இந்த துறைகளில் அமெரிக்காவுடனான கூட்டாண்மையை முன்னேற்றுவதற்கு இந்தியா உறுதி பூண்டுள்ளது" என்று தெரிவித்தார்.
- பஞ்சாபின் காவல் நிலையங்கள் மீது பல பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்திவிட்டு, அதற்கு பொறுப்பேற்றார்.
- பாகிஸ்தான் உளவுத்துறை அமைப்பான ஐ.எஸ்.ஐ உடன் செயல்பட்டார்.
பஞ்சாபில் கடந்த 5 மாதங்களாக நடந்த 14 வெடிகுண்டுத் தாக்குதலில் தொடர்புடையதாக தேடப்பட்டு வந்த குற்றவாளி ஹேப்பி பாசியா அமெரிக்காவில் கைது செய்யப்ட்டுள்ளார்.
ஹேப்பி பாசியா என்ற ஹர்ப்ரீத் சிங், பஞ்சாபின் காவல் நிலையங்கள் மீது பல பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்திவிட்டு, அதற்கு சமூக வலைத்தளத்தில் பொறுப்பேற்றதாக கூறப்படுகிறது.
நவம்பர் 2024 முதல் அமிர்தசரஸில் உள்ள காவல் நிலையங்களை குறிவைத்து தொடர் குண்டுவெடிப்பு வழக்குகளில் அவர் தேடப்பட்டு வந்தார். அவர் குறித்த தகவலுக்கு ரூ.5 லட்சமும் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டிருந்தது.
பாகிஸ்தான் உளவுத்துறை அமைப்பான ஐ.எஸ்.ஐ மற்றும் பப்பர் கல்சா இன்டர்நேஷனலுடன் இணைந்து ஹேப்பி பாசியா பயங்கரவாத தாக்குதல்களை நடத்தியதாக பாதுகாப்புப் படை வட்டாரங்கள் தெரிவித்தன.
தற்போது அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ள ஹேப்பி சிங் ICE (குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவு) காவலில் உள்ளார்.
- எனக்கு அவரை மிகவும் பிடிக்கும். உலகின் உண்மையான தலைவர்களில் ஒருவர்
- ஒரு நியாயமான ஒப்பந்தமாக இருக்கும் என்றும் டிரம்ப் கூறினார்.
ஐரோப்பிய ஒன்றியத்துடனான வர்த்தக ஒப்பந்தம் 100 சதவீதம் சாத்தியமாகும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்தார்.
ஐரோப்பிய ஒன்றிய இறக்குமதிகள் மீது ஆரம்பத்தில் 20 சதவீத வரி விதித்து பின்னர் 90 நாட்களுக்கு அதை தாற்காலிகமாக நிறுத்தினார் டிரம்ப்.
இந்நிலையில் நேற்று (வியாழக்கிழமை) வெள்ளை மாளிகையில் இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியுடனான சந்திப்பைத் தொடர்ந்து இந்த கருத்துக்கள் வந்துள்ளன.
மெலோனியை சந்தித்தது குறித்து பேசிய அவர், "எனக்கு அவரை மிகவும் பிடிக்கும். உலகின் உண்மையான தலைவர்களில் ஒருவர். நாங்கள் ஒன்றாகவும் நாடுகளாகவும் நல்ல உறவைக் கொண்டுள்ளோம்" என்று தெரிவித்தார்.
ஐரோப்பிய ஒன்றியத்துடன் 100% ஒரு வர்த்தக ஒப்பந்தம் இருக்கும் என்றும் ஆனால் அது ஒரு நியாயமான ஒப்பந்தமாக இருக்கும் என்றும் டிரம்ப் மேலும் கூறினார்.
- கத்திக்குத்தில் காயம் அடைந்த 3 பேரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
- விமானம் போலீஸ் ஹெலிகாப்டர் உதவுயுடன் பத்திரமாக தரை இறங்கியது.
கொரோசல்:
மத்திய அமெரிக்காவின் கரீபியன் கடலின் வடக்கு பகுதியில் பெலிஸ் நாடு உள்ளது. இங்கு மெக்சிகோ எல்லைக்கு அருகில் உள்ள கொரோசல் என்ற நகரத்தில் இருந்து சுற்றுலா தளமான சான் பெட்ரோசுக்கு ஒரு சிறிய ரக விமானம் புறப்பட்டு சென்றது. இந்த விமானத்தில் 14 பயணிகள் மற்றும் 2 பணியாளர்கள் பயணம் செய்தனர்.
நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த போது அதில் சென்ற அமெரிக்காவை சேர்ந்த வாலிபர் ஒருவர் திடீரென தான் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து விமானத்தை கடத்த போவதாக தெரிவித்தான். இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் அவன் விமானி மற்றும் 2 பயணிகளை கத்தியால் சரமாரியாக குத்தினார். இதை பார்த்த பயணிகள் உயிர் பயத்தில் அலறினார்கள்.
அப்போது கத்திக்குத்தில் காயம் அடைந்த பயணி ஒருவர் வலியை பொறுத்துக்கொண்டு தன்னிடம் இருந்த துப்பாக்கியால் அந்த வாலிபரை நோக்கி சுட்டார். இதில் அவன் விமானத்தில் சுருண்டு விழுந்து இறந்தான்.
அவனின் இந்த மிரட்டலால் விமானம் நடுவானில் சுமார் 2 மணி நேரம் திசை மாறி வட்டமடித்தபடி பறந்து கொண்டிருந்தது. பின்னர் கடலோர நகரமான லேடிவில்லில் அந்த விமானம் போலீஸ் ஹெலிகாப்டர் உதவுயுடன் பத்திரமாக தரை இறங்கியது.
உடனடியாக கத்திக்குத்தில் காயம் அடைந்த 3 பேரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
போலீசார் நடத்திய விசாரணையில் விமானத்தை கடத்தியவன் அகின் யேலா சாலா டெய்லர் என்பது தெரியவந்தது. எதற்காக அவன் விமானத்தை கடத்த முயன்றான் என தெரியவில்லை. அவன் விமானத்தில் கத்தியுடன் எப்படி ஏறினான் என்பது தெரியவில்லை.
இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நல்ல வேளையாக அவனை பயணி ஒருவர் சுட்டுக்கொன்றதால் மற்ற பயணிகள் கத்திக்குத்தில் இருந்து தப்பினார்கள். இதனால் பெரும் விபரீதம் நடைபெற இருந்தது தடுக்கப்பட்டது.
- அதிபர் டொனால்டு டிரம்ப், துப்பாக்கிக்கள் சுடுவதல்ல, மனிதர்கள் தான் சுடுகிறார்கள் என்று கூறினார்.
- சம்பவத்தின் பின் அவரை போலீசார் சுட்டுப் பிடித்தினர்.
அமெரிக்காவின் புளோரிடா மாகாண பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீது நடந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 6 பேர் படுகாயமடைந்தனர்.
துப்பாக்கிச்சூடு நடத்தியவர் 20 வயதான போனிக்ஸ் சின்கர் என்று கண்டறியப்பட்டுள்ளது. சம்பவத்தின் பின் அவரை போலீசார் சுட்டுப் பிடித்தினர்.
போனிக்ஸ் சின்கர் அதே பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த மாணவர் ஆவார். உள்ளூர் துணை ஷெரீப் ஆன அவரது தந்தையின் துப்பாக்கியை கொண்டு அவர் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளார்.
போலீஸ் சுட்டதில் காயமடைந்த போனிக்ஸ் சின்கர்க்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரால் சுடப்பட்டு காயமடைந்த 6 பேரும் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர்.
இந்த துப்பாக்கிச்சூடு குறித்து பேசிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், துப்பாக்கிக்கள் சுடுவதல்ல, மனிதர்கள் தான் சுடுகிறார்கள் என்று கூறினார். சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
- 'போயிங்'கிடம் இருந்து விமானங்கள் வாங்க தங்கள் நாட்டு விமான நிறுவனங்களுக்கு சீனா தடை விதித்தது.
- சீனா சண்டையிட விரும்பவில்லை, ஆனால் சண்டையிட பயப்படவில்லை
அமெரிக்கா சீனா இடையே வர்த்தக போர் வலுத்து வரும் சூழலில் சீனா இறக்குமதிகளுக்கான வரியை அமெரிக்கா 245 சதவீதமாக உயர்த்தியுள்ளது.
நேற்று முன் தினம் அமெரிக்காவுக்கு, கனிமங்கள், உலோகம், காந்தம் உள்ளிட்டவற்றின் ஏற்றுமதியைச் சீனா அதிரடியாக நிறுத்தி பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது.
பாதுகாப்பு, மின்சார வாகனம், எரிசக்தி மற்றும் மின்னணுவியல் துறைகளில் பயன்படுத்தப்படும் 17 தனிமங்களின் தொகுப்பான 'உலகின் அரிய மண் தாது'க்களில் சுமார் 90 சதவீதத்தை சீனா உற்பத்தி செய்கிறது. தனது உற்பத்திக்கு அமெரிக்கா சீனாவையே அதிகம் சார்ந்துள்ளது.
இதனால் அமெரிக்காவின் ஆயுதங்கள், மின்னணுவியல், வாகன உற்பத்தியாளர்கள், எரோஸ்பேஸ் உற்பத்தியாளர்கள், செமிகண்டக்டர் நிறுவனங்கள், மற்றும் பிற நுகர்வோர் பயன்பாட்டுக்கான பொருட்களை தயாரிக்க தேவையான மூலக் கூறுகள் முற்றிலும் தடைப்படும் அபாயம் உருவாகி உள்ளது.
மேலும் அமெரிக்க விமான தயாரிப்பு நிறுவனமான 'போயிங்'கிடம் இருந்து விமானங்கள் வாங்க தங்கள் நாட்டு விமான நிறுவனங்களுக்கு சீனா தடை விதித்தது. மேலும் விமானம் தொடர்பான எந்த கருவிகளையும் அமெரிக்காவிடமிருந்து வாங்க வேண்டாம் எனவும் உள்நாட்டு விமான நிறுவனங்களுக்கு சீனா உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் சீன இறக்குமதிக்கான வரியை ஏற்கனவே விதித்த 145 சதவீதத்தில் இருந்து 245 சதவீதமாக உயர்த்தி அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அரசுக் குறிப்பில், "சீனாவின் பழிவாங்கும் நடவடிக்கைகளின் விளைவாக அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இப்போது 245% வரை வரி விதிக்கப்படுகிறது" என்று கூறப்பட்டுள்ளது.
முன்னதாக "சீனா சண்டையிட விரும்பவில்லை, ஆனால் சண்டையிட பயப்படவில்லை" என்று சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
- பில் கேட்ஸ் - மெலிண்டா பிரெஞ்ச் கேட்ஸ் தம்பதி கடந்த 2021 இல் விவாகரத்து பெற்றது.
- தனது வாழ்வில் தான் செய்த மிகப்பெரிய தவறாக நினைத்து வருந்துவதாகத் தெரிவித்திருந்தார்.
மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் - மெலிண்டா பிரெஞ்ச் கேட்ஸ் தம்பதி கடந்த 2021 இல் விவாகரத்து பெற்றது.
இந்த விவாகரத்து பற்றி கடந்த ஜனவரியில், பில் கேட்ஸ் கலந்துகொண்ட நேர்காணல் ஒன்றில், 27 ஆண்டு கால திருமண வாழ்வை விவகாரத்து மூலம் முடித்துக் கொண்டது தனது வாழ்வில் தான் செய்த மிகப்பெரிய தவறாக நினைத்து வருந்துவதாகத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அண்மையில் ஆங்கில ஊடகம் ஒன்றில் நடந்த நேர்காணலில் மெலிண்டா பிரெஞ்ச் பேசுகையில், மிகவும் நெருங்கிய உறவில், உங்களது மதிப்புடன் உங்களால் வாழ முடியாத நிலை ஏற்படும்போது, பிரிவது என்பது மிகவும் அவசியமாகிறது.
அவர் என்ன சொல்லியிருந்தார் என்பது எனக்குத் தெரியாது, எனவே அதுகுறித்து நான் கருத்துத் தெரிவிக்க விரும்பவில்லை. அது அவரது சொந்த வாழ்க்கை. எனக்கென்று ஒரு வாழ்க்கை உள்ளது. நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன் என்று தெரிவித்தார்.
- அரசாங்க திறன் துறை தலைவர் எலான் மஸ்க்கின் ஆலோசனைப்படி ஏராளமான அரசு ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுகின்றனர்.
- நாசாவின் பன்முகத்தன்மை, சமத்துவம் மற்றும் உள்ளடக்கம் துறை (டி.இ.ஐ) தலைவராக நீலா ராஜேந்திரா பணியாற்றி வந்தார்.
அமெரிக்க அதிபராக டிரம்ப் கடந்த ஜனவரி 20-ந்தேதி பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
இதில் அரசில் தேவையற்ற செலவுகளை குறைக்கும் நடவடிக்கையும் அடங்கும். அரசாங்க திறன் துறை தலைவர் எலான் மஸ்க்கின் ஆலோசனைப்படி ஏராளமான அரசு ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். மேலும் பல்வேறு அமைச்சகங்களில் சில துறைகளின் செயல்பாட்டை நிறுத்தும்படி உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில் டிரம்பின் நிர்வாக உத்தரவால் அமெரிக்க விண்வெளி கழகமான நாசாவில் பணியாற்றிய இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் அதிகாரியான நீலா ராஜேந்திரா பணிநீக்கம் செய்யப்பட்டார்.
நாசாவின் பன்முகத்தன்மை, சமத்துவம் மற்றும் உள்ளடக்கம் துறை (டி.இ.ஐ) தலைவராக நீலா ராஜேந்திரா பணியாற்றி வந்தார். இதற்கிடையே டி.இ.ஐ துறையை ரத்து செய்ய டிரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டது. அத்துறையில் பணியாற்றிய அனைத்து ஊழியர்களை நீக்கம் செய்ய உத்தரவிடப்பட்டது. இதையடுத்து நீலா ராஜேந்திராவை தக்க வைத்து கொள்ள நாசா நடவடிக்கை எடுத்தது.
அதன்படி அவரது பதவியை 'குழு சிறப்பு மற்றும் பணியாளர் வெற்றி அலுவலகத் தலைவர்' என்று மாற்றியது. ஆனால் இதை டிரம்ப் நிர்வாகம் ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் நீலா ராஜேந்திராவை பணிநீக்கம் செய்துள்ளதாக நாசா அறிவித்துள்ளது. இதுதொடர்பாக நாசா தனது உயர்மட்ட விண்வெளி ஆய்வகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நீலா ராஜேந்திராவின் வெளியேற்றம் குறித்து மின்னஞ்சலில் தகவல் தெரிவித்தது.
அதில், நீலா ராஜேந்திரா இனி ஆய்வகத்தில் பணிபுரியவில்லை. எங்கள் நிறுவனத்திற்கு அவர் ஏற்படுத்திய நீடித்த பயன்களுக்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். அவருக்கு நல்வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளது.
நீலா ராஜேந்திரா பல ஆண்டுகளாக நாசாவில் தலைமைப் பொறுப்பில் இருந்தார். அவர் நாசாவை பன்முகப்படுத்த உதவும் முயற்சிகளுக்காக பணியாற்றி வந்தார். இதன் முதன்மை நோக்கம் பெண்களையும் சிறுபான்மையினரையும் அமைப்பில் பணியமர்த்துவதாகும்.
- 193 கிலோமீட்டர் தொலைவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி வரை வடக்கே உணரப்பட்டது.
- காலை வெயிலில் அமைதியாக நின்றிந்த யானைகள், நிலநடுக்கம் ஏற்பட்டபோது திடுக்கிட்டன.
அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவில் உள்ள சான் டியாகோ நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவானது.
உள்ளூர் நேர்ப்படி காலை 10:08 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் மலை நகரமான ஜூலியனில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சான் டியாகோ கவுண்டியில் மையம் கொண்டிருந்தது.
இது சுமார் 193 கிலோமீட்டர் தொலைவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி வரை வடக்கே உணரப்பட்டது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பல பின்அதிர்வுகள் ஏற்பட்டன.
நிலநடுக்கத்தை தொடர்ந்து கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். சான் டியாகோவிற்கு வெளியே உள்ள கிராமப்புற சாலைகளில் பாறைகள் சரிந்து விழுந்தன. நிலநடுக்கத்தால் பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் நிலநடுக்கம் ஏற்பட்ட சமயத்தில் சான் டியாகோ மிருகக்காட்சிசாலை சஃபாரி பூங்காவில் ஆப்பிரிக்க யானைகளின் கூட்டம் தங்கள் குட்டிகளை பாதுகாக்க செய்த செயல் கவனத்தை ஈர்த்துள்ளது.
நிலஅதிர்வை உணர்ந்த யானைக் கூட்டத்தின் மூத்த யானைகள் உள்ளுணர்வால் தூண்டப்பட்டு, கூட்டமாக தங்கள் குட்டிகளை சூழ்ந்து பாதுகாப்பு அரணாக நின்ற காட்சிகள் மெய்சிலர்க வைப்பதாக உள்ளது.
இணையத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், காலை வெயிலில் அமைதியாக நின்றிந்த யானைகள், நிலநடுக்கம் ஏற்பட்டபோது திடுக்கிட்டு, அவை முதலில் சிதறி, பின்னர் விரைவாக மீண்டும் ஒன்றுகூடி, ஜூலி மற்றும் மக்யா ஆகிய இரண்டு யானைக்குட்டிகளை மூத்த தாய்மார்கள் நட்லுலா, உமங்கானி மற்றும் கோசி ஆகியவை சூழ்ந்து நிற்கின்றன.
நிலநடுக்கம் நின்ற பிறகும், வயது வந்த யானைகள் தங்கள் பாதுகாப்பு வலயத்தை கலைக்காமல் காதுகளை விரித்து, எச்சரிக்கையாக, பல நிமிடங்கள் அப்படையே நின்றிருந்தன.