"டிரம்ப் தோற்று கொண்டிருப்பவர்" - பிரசாரத்தை தொடங்கிய பைடன்
- வயதானதால் பைடனால் வேகமாக செயல்பட முடியவில்லை என பத்திரிகைகள் விமர்சித்தன
- டிரம்ப் வென்றால் ஜனநாயகம் தோற்று விடும் என்றார் பைடன்
இவ்வருடம், அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.
ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடனும், அவரை எதிர்த்து முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பும் களம் இறங்கி உள்ளனர்.
தற்போது 81 வயதாவதால் ஜோ பைடனால் பிரசாரங்களை வேகமாக முன்னெடுத்து செல்ல முடியவில்லை என்றும் டிரம்பை காட்டிலும் செயலாற்றுவதில் பைடன் பின் தங்கி இருப்பதாகவும் சில பத்திரிகைகள் விமர்சித்து வந்தன.
இதை தொடர்ந்து தீவிர பிரசாரத்தில் பைடன் இறங்கி உள்ளார்.
சுமார் 250 வருடங்களுக்கு முன் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரசை எதிர்த்து ஜார்ஜ் வாஷிங்டன், பென்சில்வேனியா மாநிலத்தில் வேலி ஃபோர்ஜ் (Valley Forge) எனும் பகுதியில் அமெரிக்க படைகளை ஒருங்கிணைத்த இடத்திலேயே தனது முதல் உரையை ஜோ பைடன் தொடங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது:
முன்னாள் அதிபர் டிரம்ப் தோல்வியடைந்து விட்டார். அவர் நமது ஜனநாயகத்தை தியாகம் செய்ய துணிந்து விட்டார்.
அமெரிக்க பாராளுமன்ற கட்டிடத்தில் தாக்குதல் நடந்ததற்கு அவர்தான் முழு பொறுப்பு.
தன்னை எதிர்ப்பவர்கள் மீது விஷம் கக்குகிறார். அமெரிக்கர்களின் ரத்தம் விஷமாகி விடுமென அவர் கூறுவது நாஜிக்களின் ஜெர்மனியை நினைவு படுத்துவது போல் உள்ளது.
ஆக்ரமிப்பு எண்ணம் கொண்ட வட கொரிய அதிபருடனும், ரஷிய அதிபருடனும் டிரம்ப் ஒட்டி உறவாடுகிறார்.
டிரம்ப் வென்று அவர் உறுதியளிக்கும் எதிர்காலம் தோன்றினால் அங்கு ஜனநாயகம் தோற்று விடும். உங்கள் சுதந்திரம் உங்கள் வாக்குச்சீட்டில்தான் உள்ளது என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.
அமெரிக்க ஜனநாயகத்தை நான் கட்டி காப்பேன் என உறுதி கூறுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இரு தரப்பும் பிரசாரத்தில் தீவிரம் காட்ட தொடங்கி விட்ட நிலையில், வரும் வாரங்களில், தேர்தல் களம் சூடு பிடிக்கும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.