உலகம்

டுவிட்டர் நிறுவனத்தின் அடையாளமான 'நீலப்பறவை' இலச்சினை ரூ.30 லட்சத்துக்கு ஏலம்

Published On 2025-03-24 07:35 IST   |   Update On 2025-03-24 07:35:00 IST
  • சமூக வலைத்தள செயலிகளில் பெரும் புரட்சியை டுவிட்டர் உண்டாக்கியது.
  • 2023-ல் டுவிட்டர் நிறுவனத்தை பெரும் தொழில் அதிபரான எலான் மஸ்க் கையகப்படுத்தி ‘எக்ஸ்’ என அதற்கு மறுபெயரிட்டார்.

பிரபல சமூக வலைத்தளமான டுவிட்டர், 2006-ம் ஆண்டில் ஜாக் டோர்சி, நோவா கிளாஸ், பிஸ் ஸ்டோன் மற்றும் இவான் வில்லியம்ஸ் ஆகிய தொழில்நுட்ப வல்லுனர்களால் உருவாக்கப்பட்டு அமெரிக்காவில் தொடங்கப்பட்டது. அப்போது அந்த நிறுவனத்தின் இலச்சினையாக (லோகோ) பறவையை தேர்ந்தெடுத்தனர்.

சமூக வலைத்தள செயலிகளில் பெரும் புரட்சியை டுவிட்டர் உண்டாக்கியது. அதன்பின், 2012-ல் டுவிட்டரில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது அதன் இலச்சினை, இளைய தலைமுறையினரை கவரும் வகையில் நவீனமயமாக்கப்பட்டு, ஒற்றை நீல பறவையாக மாற்றப்பட்டது. சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள தங்களுடைய தலைமையக கட்டிடத்திலும் ராட்சத அளவில் தயாரான 'நீலப்பறவை' இலச்சினையை பொருத்தினர்.

அதன்பின்னர் அந்த இலச்சினை அந்த நிறுவனத்தில் அடையாளமாக மாறியது. 2023-ல் டுவிட்டர் நிறுவனத்தை பெரும் தொழில் அதிபரான எலான் மஸ்க் கையகப்படுத்தி 'எக்ஸ்' என அதற்கு மறுபெயரிட்டார். அதோடு நீலப்பறவை இலச்சினை பயன்பாடும் நின்றது. மேலும் நிறுவன கட்டிடத்தில் பொருத்தப்பட்டிருந்த நீலப்பறவை இலச்சினை அகற்றப்பட்டது.

இந்தநிலையில் அரிய பொருட்களை ஏலம்விடும் பிரபல நிறுவனம் ஒன்று 'எக்ஸ்' நிறுவனத்தில் பொருத்தப்பட்டிருந்த 'நீலப்பறவை' இலச்சினையை கையகப்படுத்தி ஏலம் விட்டது. 12 அடி நீளம், 9 அடி அகலம், 254 கிலோ எடை கொண்ட அந்த இலச்சினை ரூ.30 லட்சத்துக்கு (34 ஆயிரம் அமெரிக்க டாலர்) ஏலம் போனதாக அறிவித்துள்ளது.

Tags:    

Similar News