உலகம் (World)

உணவுக்காக தினமும் ராணுவ வீரர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட வரிசையில் நிற்கும் பெண்கள்

Published On 2024-07-24 14:16 GMT   |   Update On 2024-07-24 14:22 GMT
  • போரில் இதுவரை சுமார் 150,000 மக்கள் இறந்துள்ளனர். போரில் ஏற்பட்ட பஞ்சத்தால் 11 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
  • மறுத்ததால் தன்னை ராணுவ வீரர்கள் சித்திரவதை செய்து தனது கால்களை எரித்ததாக பெண் ஒருவர் கூறுகிறார்.

உள்நாட்டுப் போரினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஆப்பிரிக்க நாடான சூடானில் தினமும் பெண்கள் ராணுவ வீரர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட வரிசையில் நிற்கின்றனர். அவ்வாறு செய்தால் மட்டுமே தங்களது குடும்பத்துக்கு தேவையான உணவும் அத்தியாவசிய பொருட்களும் அவர்களுக்கு கிடைக்கிறது .

இதுகுறித்து கார்டியன் இதழ் வெளியிட்டுள்ள செய்தியில், பஞ்சத்தை சமாளிக்க  நாடு முழுவதும் உள்ள தொழிற்சாலைகளில் இறைச்சி உள்ளிட்ட உணவுப் பொருட்கள் பதப்படுத்தப்பட்டு இருப்பு வைக்கபட்டுள்ள நிலையில் அங்கு தங்களின் குடும்பத்துக்கு தேவையான உணவை பெற்றுக்கொள்ள வரும் பெண்கள் ராணுவ வீரர்காளால் இந்த வன்கொடுமைகளுக்கு ஆளாக்கி வருகின்றனர்.

சூடான் ராணுவத்தின் இருவேறு பிரிவுகளான SAF மற்றும் RSF ஆகிய படைகளுக்கிடையே கடந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் ஏற்பட்ட மோதல் உள்நாட்டுப் போராக வெடித்தது. இந்த போரில் இதுவரை சுமார் 150,000 மக்கள் இறந்துள்ளனர். போரில் ஏற்பட்ட பஞ்சத்தால் 11 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

RSF ராணுவ வீரர்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் உள்ள பெண்கள் தொடர்ந்து பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிவருவதாக அப்பெண்கள் பலர் கார்டியன் இதழ் கள செய்தியாளர் குழுவிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

தங்களின் குழந்தைகளுக்கு உணவளிப்பதற்கு வேறு வழி தங்களுக்கு தெரியவில்லை என்று அவர்கள் கூறுகின்றனர். போரினால் கைவிடப்பட்ட வீடுகளில் முகாமிட்டுள்ள ராணுவ வீரர்கள் பெண்களை வரிசையில் நிறுத்தி பாலியல் வன்புணர்வு செய்கின்றனர்.

பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கூறுகையில், தான் அதற்கு மறுத்ததால் தன்னை ராணுவ வீரர்கள் சித்திரவதை செய்து தனது கால்களை எரித்ததாக கூறுகிறார். கைவிடப்பட்ட வீடுகளில் உள்ள பொருட்களை எடுத்துச் சென்று விற்று அதன்மூலம் உணவு வாங்க வேண்டும் என்றால் ராணுவ வீரர்களின் நிர்பந்தத்துக்கு அடிபணித்த பிறகே அனுமதி கிடைக்கும் என்ற நிலை உள்ளது.

Tags:    

Similar News