ஷாட்ஸ்

2024 தை மாத ராசிபலன்

Published On 2025-01-15 16:33 IST   |   Update On 2025-01-15 16:34:00 IST

பிறரின் நம்பிக்கைக்கு பாத்திரமாக விளங்கும் மகர ராசி நேயர்களே!

தை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் சனி குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அவரோடு தொழில் ஸ்தானாதிபதி சுக்ரனும் இருப்பதால் குடும்ப வருமானம் உயரும். கொடுக்கல் - வாங்கல்கள் ஒழுங்காகும். பெண் பிள்ளைகளின் சுபச்சடங்குகள் மற்றும் கல்யாண காரியங்கள் நடைபெறும். அஷ்டமாதிபதி சூரியன் உங்கள் ராசியில் இருப்பதால் இடையிடையே எதிர்பாராத வண்ணம் திடீர் செலவுகளும் ஏற்படலாம். 'சந்திர மங்கள யோக'த்தோடு மாதம் தொடங்குவதால், சென்ற மாதத்தில் நடைபெறாமல் இருந்த பல நல்ல காரியங்கள் இப்பொழுது படிப்படியாக நடைபெறும்.

மிதுன - செவ்வாய்

தை 5-ந் தேதி மிதுன ராசிக்குச் செல்லும் செவ்வாய், அங்கு வக்ர இயக்கத்தில் இருக்கிறார். உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியான செவ்வாய் வக்ரம் பெறுவதால், வளர்ச்சியில் தளர்ச்சி ஏற்படும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களால் பிரச்சினைகள் வரலாம். வியாபாரப் போட்டிகள் அதிகரிக்கும். மனவருத்தம் தரும் செயல்கள் நடைபெறலாம். தாயின் உடல்நலத்தில் கவனம் தேவை. வெளிநாடு செல்லும் முயற்சியில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு அது தாமதப்படும். உத்தியோகத்தில் கூடுதல் பணிச்சுமையின் காரணமாக நீண்ட நேரம் வேலை பார்க்கும் சூழல் உருவாகும். சொத்து விற்பனையால் சில பிரச்சினைகள் வரலாம்.

மகர - புதன்

உங்கள் ராசிக்கு 6, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன், தை 6-ந் தேதி மகர ராசிக்குச் செல்கிறார். உங்கள் ராசியில் சஞ்சரிக்கும் புதனால், பூர்வீக சொத்துத் தகராறு அகலும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். நினைத்ததை நினைத்த நேரத்தில் செய்து முடிக்கும் வல்லமை பிறக்கும். எதிரிகள் சரணடைவர். என்றைக்கோ குறைந்த விலைக்கு வாங்கிப் போட்ட இடம் அதிக விலைக்கு விற்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களிடம் உயர் அதிகாரிகள் இணக்கமாக நடந்துகொள்வர். கேட்ட சலுகைகளையும் வழங்குவர். அரசியல் களத்தில் இருப்பவர்களுக்கு மக்கள் செல்வாக்கு அதிகரிக்கும்.

கும்ப - புதன்

தை 23-ந் தேதி கும்ப ராசிக்கு புதன் செல்கிறார். அவர் தன ஸ்தானத்திற்கு செல்லும்போது, தனவரவு தாராளமாக வந்துசேரும். மனதில் நினைத்ததை மறுகணமே செய்து முடிப்பீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்போடு பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். கட்டிய வீட்டைப் புதுப்பிக்கும் திட்டம் நிறைவேறும். கலைத்துறை சம்பந்தப்பட்டவர்களால் சில காரியங்கள் நிறைவேறும். பழைய வாகனங்களைக் கொடுத்துவிட்டு, புதிய வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும். குடும்ப ஒற்றுமைக்கு குந்தகம் விளைவித்தவர்கள் விலகுவர்.

குரு வக்ர நிவர்த்தி

ரிஷப ராசியில் சஞ்சரிக்கும் குரு பகவான், தை 29-ந் தேதி வக்ர நிவர்த்தியாகிறார். இதன் விளைவாக எதிர்கால முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தூரதேசப் பயணங்கள் ஆதாயம் தருவதாக அமையும். வியாபாரத்தில் வி.ஐ.பி.க்கள் வாடிக்கையாளர்களாக மாறுவர். உத்தியோகத்தில் இதுவரை தற்காலிகப் பணியில் இருந்தவர்கள், இப்பொழுது நிரந்தரப் பணியாளர்களாக மாற்றப்படுவர். பிள்ளைகளின் எதிர்கால முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். பூர்வீக சொத்துப் பிரச்சினை அகலும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்தபடியே லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலிடத்தில் பாராட்டு உண்டு. மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும். பெண்களுக்கு எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும். எதிர்பார்ப்புகள் கைகூடிவரும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

ஜனவரி: 20, 21, 23, 24, 25, பிப்ரவரி: 1, 4, 5.

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ரோஸ்.

Similar News